வருத்தங்களைக் காட்டாத ஹன்சிகா முகம்!



‘உயிரே உயிரே’ காதல்

“அப்பா-பிள்ளை உறவு இருக்கே, அதுல எத்தனை அழகு... எத்தனை அர்த்தம் இருக்கு! ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் உருவம் கொடுக்கிற உறவு இது. அதில் மகளுக்கோ, மகனுக்கோ காதல்னு வந்திட்டா எல்லாமே மாறும். சண்டை, சச்சரவு, மனக்கஷ்டம் வந்து சடசடனு மனசு உடையும்.

வாழ்க்கையே சுவாரஸ்யம் இழந்து வாழத் தகுதியற்றதா போயிடும். அப்படி எதுவும் இல்லாமல் ஒரு காதல் கதை பண்ணியிருக்கிறேன். ‘இஷ்க்’னு தெலுங்கில் வந்து பின்னி எடுத்த கதை. தமிழுக்காக, ‘உயிரே... உயிரே’!’’ - சொல்லிக்கொண்டே சுழன்று பேசுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர். விஷாலை ‘சத்யம்’ படத்திற்காக இயக்கியவர்.‘‘என்னங்க... ஆக்ஷனில் ஆரம்பிச்சு காதலுக்கு திரும்பிட்டீங்க?’’

‘‘எனக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மாதிரி அழகான காதல் படம் பண்ணணும்னு ஆசை. எவருக்கும் காதல் என்பது ஸ்பெஷல். ஒரு வாழ்க்கையைப் பெரிசா அழகுபடுத்தி வைக்கிற வித்தை காதலுக்கு இருக்கு. அதன் வசீகரம் அப்படி. ஆனால், இந்தக் காதல் வந்து வீட்டோட உறவை பெரும்பாலும் துண்டிச்சிடுது. இன்னும் சில பேர் ‘காதல் போயின் சாதல்’ என்ற கட்டத்துக்குக் கூட போறாங்க. ஒரு கலர்ஃபுல் கல்யாணம், கொண்டாட்டம் சார்ந்தது.

அது எதுவும் இல்லாமல் நாலே நாலு நண்பர்கள், ஒரு ரிஜிஸ்டர் ஆபீஸ், அப்படி இல்லேன்னா... ஒரு போலீஸ் ஸ்டேஷன்னு போய் கல்யாணம் பண்ணிக்கிறது எவ்வளவு மனக்கஷ்டம்! த்ரில் இருக்கலாம்... அதில் திருப்தி இருக்கா? பொண்ணு மனசில் இடம் பிடிக்கத் தெரிஞ்ச நம்மால, அவங்க வீட்டுல இருக்கறவங்க மனசில் இடம் பிடிக்க முடியாதா என்ன! அப்படி ஒரு காதல் பையன் பத்தின படம். முதல் பாதி குறும்புத் திருவிழா... அடுத்த பாதி குடும்பத் திருவிழா!’’
‘‘எப்படியிருக்கிறார் ஹன்சிகா?’’

‘‘இந்தப் படத்தின் கதையை அவருக்குச் சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படலை. ‘இஷ்க்’ பார்த்துட்டு, இதையே வேறு மொழியில் செய்தால் நாமே நடிக்கலாம்னு ஆசையோடு இருந்திருக்காங்க. அப்ரோச் பண்ணின உடனே ‘சரி’னு சொல்லிட்டாங்க. நாற்பது நாள் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க இஷ்டமா முன் வந்தாங்க. இப்படி ஒரு அருமையான காதல் படத்திற்கு அழகும், இன்வால்வ்மென்ட்டும் அவசியம். எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் எதையும் வெளிக் காட்டாத அழகிய முகம் ஹன்சிகாவுக்கு.

ரொம்ப அருமையான ஒரு வாழ்க்கையை ஈஸியா வாழ்ந்துட்டிருக்கிற பொண்ணு. அருமையான ரோல். எமோஷனும், திகட்டத் திகட்ட இளமையுமா தெரிவாங்க. கலகலன்னு பேசிட்டு, கண்ல சிரிச்சுக்கிட்டு, அத்தனை பேருக்கும் செல்லமா வர்றாங்க. எங்க யூனிட்டிற்கும் அப்படித்தான் இருந்தார். படத்திற்கு அவர் கொடுத்திருப்பது பெரும் உயிர். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த நெருக்கத்தை உங்களால் உணர முடியும்...’’‘‘புது முகம் சித்து, அந்த அழகு தெய்வத்தின் மகனாயிற்றே... எப்படி நடிக்கிறார்?’’

‘‘ஜெயப்ரதா என் ‘சத்யம்’ படத்தை ஒரு ஹோட்டலில்தான் பார்த்திருக்கிறார். என் மகனை இந்த இயக்குநர்தான் டைரக்ட் பண்ணணும்னு ஆசைப்பட்டுட்டார். அவ்வளவுதான். என்னைத் தேடத் துவங்கி கடைசியா துரத்திப் பிடிச்சிட்டாங்க. ‘உங்க படம் எடுக்கும் நேர்த்தி எனக்குப் பிடிச்சிருக்கு. என் மகனை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். பத்திரமா வெற்றியோட அவனைத் திருப்பிக் கொடுங்க’னு அன்பா பேசினார். என் இளமைக்காலம் அவரது சினிமாவைப் பார்த்தே கழிந்தது. நான் மட்டுமில்லை, யாருக்குமே, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’ படங்களில் பார்த்த அவரது சௌந்தர்யத்தை மறக்க முடியாது. முந்நூறு படங்களுக்கு மேல் நடித்த பெரும் சாதனையாளர்.

 அரசியல் களத்திலும் வெற்றி கண்டவர். அப்படிப்பட்டவரின் மகன் எப்படி குறைவாக இருப்பார்? அருமையா நடிச்சு இதயங்களை திருடியிருக்கிறார். கேமரா ஆர்.டி.ராஜசேகர். இப்போ வந்த ‘அரிமா நம்பி’ வரை அவரது கேமராவின் அழகு போற்றப்பட்டது. அதற்கெல்லாம் சற்றும் குறைவில்லாத அழகு இதிலும் இருக்கிறது. இசை அனுப் ரூபன்ஸ். தெலுங்கில் இப்போது அனிருத் போல இளமையான, துள்ளலான இசைக்குச் சொந்தக்காரர். தேவிஸ்ரீபிரசாத், தமன் போன்றோரை சமீப காலமாக ஓரம் கட்டிக்கிட்டிருக்கார். தமிழுக்கு புத்தம் புது என்ட்ரி. அவரைக் கொண்டு வருவதில் எனக்கு மகிழ்ச்சி. விவேகா காதல் பாடல்களை காதலோடு இழைச்சிருக்கார்.‘தேவதை பார்க்கிறாள்...

உயிரேயே கேட்கிறாள்’ என்ற வரியில் ஆரம்பிக்கும் பாடல் நெஞ்சில் நிறையும். ‘வெண்ணெயில் செய்த பொம்மை போல தேகமா’ன்னு ஹன்சியை வர்ணிக்கிற பாட்டை இளைஞர்களுக்கு டெடிகேட் செய்கிறேன். இனி, காதலை காதலென்றும் சொல்லலாம்... ‘உயிரே உயிரே’ எனவும் சொல்லலாம்!’’

- நா.கதிர்வேலன்