குட்டிச்சுவர் சிந்தனைகள்!



என் 4 வயது மகளுக்கு இந்திய / தமிழக அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களை இணையத்தில் கூகுளில் காட்டி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். கலைஞர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், நரேந்திர மோடி, அத்வானி, சோனியா காந்தியென அரசியல் தலைவர்கள்...

சச்சின், கங்குலி, தோனி, விஸ்வநாதன் ஆனந்த், சானியா, சாய்னா, லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதியென விளையாட்டு பிரபலங்கள்... சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினி, அமிதாப், எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித், விஜய்யிலிருந்து பாலிவுட்டின் எல்லா ‘கான்’ நடிகர்களையும் காண்பித்து சொல்லிக்கொடுத்தேன்.

ஆனால், கமலை மட்டும் நம்ப மறுக்கிறாள். ‘அவ்வை ஷண்முகி’யை கமலென்றால் ‘விருமாண்டி’ கமலை நம்ப மறுக்கிறாள். ‘குணா’வில் இருப்பது கமலென்றால், ‘விஸ்வரூப’த்தில் இருப்பது கமல் என நம்ப மறுக்கிறாள். ரொம்ப கஷ்டமா இருக்கு கமல் சார்... எத்தனை கெட்டப்தான் போடுவீங்க. முடியல!

நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நாம் தினசரி கும்பிடும் லட்சுமி, சரஸ்வதி படங்களை வரைந்தவர் கேரளம் தந்த தூரிகை மன்னர் ரவிவர்மா என்று. ரவிவர்மா இந்த ஓவியங்களை வரைந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அவர் ஏன் சரஸ்வதி தேவிக்கு சாதாரண பார்டர் வச்ச பாலியஸ்டர் வெள்ளை புடவையும், லட்சுமி தேவிக்கு பட்டு பார்டர் வச்ச காஞ்சிப் பட்டு புடவையும் வரைந்தாரென யோசிக்கும்போது, கல்விக்கும் காசுக்கும் நாம் இன்று தரும் மரியாதையே விடையாகத் தெரிகிறது.

அது மட்டுமல்ல, குடும்ப போட்டோவில் கூட சிவன் மேல்சட்டையில்லாமல் இருப்பது, தீபாவளிக்கு குடும்பத்துக்குச் செலவு செய்து விட்டு, தனக்கு புது பனியன் ஜட்டி மட்டும் வாங்கிக்கொள்ளும் நம் காலத்து அப்பாவை ஞாபகப்படுத்துகிறது.

கடவுள்களுக்கு 6 கை, 8 கையென இருப்பதன் மூலம், இரண்டு கைய வச்சுக்கிட்டு ஆறு கை வேலைகளைச் செய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியுமென உணர்த்துகிறது. சரி, பிள்ளையாருக்கு எதுக்கு யானைத் தலைன்னு கேட்கறீங்களா? படைத்தவனுக்கு மட்டுமே தலைக்கனம் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது அது!

கிண்டலடிக்கும் என்னையே கொஞ்சம் கலங்க வைத்த உண்மைச் சம்பவம் இது. உங்கள் பார்வைக்கு...நான் எல்.கே.ஜி முதல் பத்தாவது முடிக்கும் வரை, என் வகுப்பில் முதல் இரண்டு ரேங்க்குக்குள் எடுக்க என்னோடு போட்டியிட ஒரு மாணவன் இருந்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதைவிட, நன்றாகப் படிக்க வைக்கப்பட்ட மாணவன் எனலாம்.

வங்கியில் வேலை செய்யும் அவன் அப்பாவும், பட்டதாரி அம்மாவும் ஒவ்வொரு வருடமும் படிப்பு, டியூஷனுடன் ஹிந்தி கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், டிராயிங் கிளாஸ், செஸ் கிளாஸ் என அடுக்கிக்கொண்டே வந்தார்கள். ஒரு மார்க் குறைந்தாலும், உலகப் பொருளாதாரம் சரிந்தது போல துவண்டு போவார்கள்.

மாலை வீட்டுக்குப் போனதி லிருந்து இரவு தூங்கப்போகும் வரை படித்துக்கொண்டே இருப்பான் எனப் பெருமையாக அவன் பெற்றோர் சொல்லக் கேட்டிருக்கிறோம். மதிய உணவு இடைவேளையில் சோறூட்டும்போதும், அவனோடு பாடம் சம்பந்தமாகவே பேசிக்கொண்டு இருப்பார் அவன் அம்மா. எட்டாவது தாண்டிய பின், அவனுக்கு படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது. ஏன், அவர்களின் கட்டளையாகிவிட்டது என்றும் கூறலாம்.

அந்த வயதில் எங்களுக்கு இருந்த அஜித் / விஜய் பெருமை,   கீகீதி  ஆர்வம், ஞாயிறு சினிமா என்பதெல்லாம் இல்லாமல், அவன் கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்ந்திருந்தான். எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறினான். என் கல்லூரி நாட்களில், அவன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதாகக் கேள்விப்பட்டபோது, நிச்சயம் வெளிநாட்டில் எங்கேயாவது செட்டில் ஆவானென்று நினைத்துக்கொண்டேன்.

காலச் சக்கரம் சுழன்றதில் அவனை மறந்தும் போனேன். கடந்த ஞாயிறு அன்று, என் மாமா ஒருவர், தங்களது யோகா சென்டருக்கு ஒரு இளம் சாமியார் பேச வருவதாகச் சொல்லிக் கூட்டிப் போனார். நீங்கள் யூகித்தது சரிதான்.

என் வகுப்புத் தோழன்தான் தெளிவான கண்களோடு சாமியாராக அமர்ந்திருந்தான். கிளம்பும்போது, அவன் பேர் சொல்லி ‘‘ஏன்டா இப்படி’’ என்றேன். ‘உனக்குக் கல்யாணமாகிடுச்சா? உன் குழந்தையை படிக்கச் சொல்லி துன்புறுத்தாதே!’’ என்றான்.

ஆண்டவன், கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான். ஆனா, கை விட்டுடுவான். நல்லவங்கள நிறையா சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்’’ - இது சூப்பர்ஸ்டார் வெர்ஷன்... இதையே மத்தவங்க சொன்னா எப்படி இருக்கும்?

சந்தானம் வெர்ஷன்

ஆண்டவன், கெட்டவங்களுக்கு ‘கிuபீவீ’ கார் கொடுப்பான். ஆனா, கஷ்டத்துல கால்நடையாக்கிடுவான். நல்லவங்கள சோதிப்பான். ஆனா, அவசரத்துக்கு ஆட்டோ அனுப்பிடுவான்.

ராஜ்கிரண் வெர்ஷன்

ஆண்டவன், கெட்டவங்களுக்கு கோட்டும் சூட்டும் கொடுப்பான். ஆனா, குற்றாலத்துல அதைப் போட விட மாட்டான். நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைலி கொடுத்து அனுப்பிடுவான்.

வெங்கட்பிரபு - கோ வெர்ஷன்

ஆண்டவன், கெட்டவங்களுக்கு ஃபாரீன் சரக்கெல்லாம் கொடுப்பான். ஆனா, டாஸ்மாக் லீவன்னைக்கு கை விட்டுடுவான். நல்லவங்கள சோதிப்பான், ஆனா டாஸ்மாக் ஷட்டர லைட்டா திறந்து விட்டுடுவான்.

ராமராஜன் வெர்ஷன்

ஆண்டவன், கெட்டவங்களுக்கு பலப்பல பசு மாடுகள் கொடுப்பான். ஆனா, பாலை வத்த வச்சிடுவான். நல்லவங்கள சோதிப்பான், ஆனா எட்டு லிட்டர் கறக்குற எருமைய கொடுத்திடுவான்.

தோனி வெர்ஷன்

ஆண்டவன், கெட்டவங்களுக்கு சிங்கிளும் டூவுமா கொடுப்பான். ஆனா பாலை ஈக்குவல் பண்ண வச்சிடுவான். நல்லவங்கள சோதிப்பான், ஆனா வின்னிங் ஷாட்டா சிக்ஸ் அடிக்க வைப்பான்.

பரோட்டா சூரி வெர்ஷன்

ஆண்டவன், கெட்டவங்களுக்கு சிக்கன் லாலிபாப்பும் மட்டன் சுக்காவுமா கொடுப்பான். ஆனா, கஷ்டத்துல பட்டினி போட்டுடுவான். நல்லவங்கள சோதிப்பான், ஆனா அவசரத்துக்கு ஆட்டுக்கால் சூப் அனுப்பிடுவான்.

விராட் கோலி வெர்ஷன்


ஆண்டவன், கெட்டவங்களுக்கு பலப்பல பிஃப்டி கொடுப்பான். ஆனா, ஃபைனல்ல டக்கடிக்க விட்டுடுவான். நல்லவங்கள சோதிப்பான், ஆனா செஞ்சுரி போட விட்டுடுவான்.

ஆல்தோட்ட பூபதி