நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?



சீனியர் நடிகரின் ஃப்ளாஷ்பேக்

இப்போதும் சினிமா சான்ஸ் கேட்க இந்த வசனம் பேசிக் காட்டுகிறவர்கள் உண்டு. ‘’கிஸ்தி... திறை... வரி... வட்டி...’’ - சிவாஜியின் அனல் பறக்கும் இந்த வசனத்தை மறக்க முடியுமா? ரசிகர்களின் நாடி நரம்புகளைச் சூடேற்றிய இந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ காட்சியில் ஜாக்ஸன் துரையை கவனித்திருக்கிறீர்களா? யெஸ்... அவரேதான் இவர். நிஜப் பெயர், பார்த்திபன். பளீர் கலரில் மிடுக்கான துரையாக பட்டையைக் கிளப்பிய இவர், இன்று 83 வயது ‘இளைஞர்’. அதே கம்பீரக் குரல், நல்ல ஞாபகசக்தி. உற்சாகமாக நினைவு கூர்கிறார் அந்தப் பொற்காலங்களை...

‘‘வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த, கேதாண்டப்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். ராஜாஜியின் பரம்பரையில் வந்தவன் நான். அப்பா, சக்கரவர்த்தி ராமசாமி. அம்மா, ராஜலட்சுமி. சகோதர, சகோதரிகள் ஐந்து பேரில் நான்தான் மூத்தவன். எலிமென்ட்ரி ஸ்கூலில் படித்தபோதே என்னை நாடகங்களில் நடிக்க வைத்தனர். சென்னை வந்து லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தபோதும் கல்லூரி விழாக்களில் நடித்தேன். எந்தக் கூட்டத்திலும் நான் மட்டும் பளிச்சென தனியாகத் தெரிவேன். பலரும் ‘நீ யாரப்பா... சினிமாவில் நடிக்கிறவனா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். இதனாலேயே எனக்குள் நடிப்பு ஆசை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

ஆனாலும் குடும்பத்தின் வற்புறுத்தலால் 1953ல் தலைமைச் செயலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எஸ்.ஜே.ஆச்சார்யா என்பவர் கெஜட்டட் ஆபீஸராக இருந்தார். வேலை முடிந்தபிறகு அவரே இயக்கி நாடகம் நடத்துவார். ‘கோடையிடி’ என்ற அவரின் நாடகத்தில் முதல்முறையாக நான் ஹீரோவாக நடித்தேன்! பிறகு சேலத்தில் ‘மெட்ராஸ் செக்ரட்டேரியட் பார்ட்டி’ சார்பில் நடத்தப்பட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தில் புதுக்கோட்டை மன்னர் வேடத்தில் நடித்தேன்.

சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு அரசாங்க வேலை பார்க்க முடியவில்லை. ஜெமினி ஸ்டுடியோவில் வேலை கேட்டு ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். தலைமைச் செயலகத்தில் அப்போது எனக்கு 82 ரூபாய் மாதச் சம்பளம். இவ்வளவு பெரிய சம்பளத்தை விட்டுவிட்டு ஏன் போக வேண்டும் என்று வீட்டில் வருந்தினார்கள். அப்போது ஜெமினி ஸ்டுடியோவில் ஜெமினி கணேசன் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டதால், உடனே எனக்கு அந்த வேலை கிடைத்தது. சம்பளம் 150 ரூபாய்’’ என்கிறவருக்கு அங்குதான் சினிமா பிரவேசம் கிட்டியிருக்கிறது.

‘‘1955ல் திலீப்குமார், தேவ் ஆனந்த் நடித்த ‘இன்சானியத்’ என்ற இந்திப் படத்தில் அம்ஜத் கான் வில்லனாக நடித்தார். அவரது வில்லன்கள் குழுவில் ஓர் ஆளாக நடித்தேன். முதன்
முதலில் கேமரா முன் தோன்றிய படம் அது. அப்போது மாதம் 300 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். கேன்டீனில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைத்தது. தினமும் ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்று வர கார் வரும். இப்படி முதல் படத்திலேயே எனக்கு சொகுசான வாழ்க்கை அமைந்தது. 1957ல் கலைஞர் வசனங்களால் புகழ்பெற்ற படம், ‘புதுமைப்பித்தன்’. இதில் டி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணனாக நடித்தபோதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாகப் பார்த்தேன்.

அடிக்கடி எம்.ஜி.ஆர். என்னிடம், ‘உன்னை மாதிரி இருப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பார்த்திபன்’ என்பார். காரணம், இளமையில் வறுமையில் வாடிய அவருக்கு உயர்கல்வி கற்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. எனக்கு அது கிட்டியதால் அப்படிச் சொல்வார். பொதுவாக எம்.ஜி.ஆர். படங்களில் நான் ஐ.ஜி வேடங்களிலேயே நடித்திருப்பேன். இதற்காகவே என் வீட்டில் ஐ.ஜி டிரஸ் ஒன்று எப்போதும் ரெடியாக இருக்கும்.

‘நல்லவன் வாழ்வான்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘தாலி பாக்கியம்’, ‘பறக்கும் பாவை’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘சங்கே முழங்கு’, ‘இதயக்கனி’, ‘நவரத்தினம்’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன்’’ என்கிறவர், மெல்ல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ அனுபவத்துக்கு வருகிறார்...

‘‘1958ல் ஜாக்ஸன் துரையாக நடித்தபோது எனக்கு வயது 27. சாலிக்கிராமத்திலுள்ள நடிகை பானுமதியின் பரணி ஸ்டூடியோவில் இரவு நேரம் நடந்த ஷூட்டிங்கில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. ஒரே டேக்கில் நடித்தால் காட்சி தத்ரூபமாக அமையும் என்று டைரக்டர் எதிர்பார்த்தார். ‘ம்... நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ?’ என்று நான் தொடங்க, பின்பு அனைத்து வசனங்களையும் நாங்கள் பேசி நடித்தோம்.

முன்கூட்டியே நாங்கள் பேசி வைத்திருந்ததால், அந்தக் காட்சியின் முடிவில் சிவாஜி என்னை அலேக்காகத் தூக்கி கீழே போட்டார். உடனே நான் ஆவேசத்துடன், ‘சோல்ஜர்ஸ்... ஷூட் ஹிம் அண்ட் கில் ஹிம்’ என்று கத்துவேன். ஷூட்டிங் முடிந்தவுடன் அனைவரும் கை தட்டினார்கள். சிவாஜியும் ‘பலே... பலே’ என்றார். அது என் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

சிவாஜியுடன், ‘அவள் யார்?’, ‘இரும்புத்திரை’, ‘ஸ்ரீவள்ளி’ உள்பட நிறைய படங்களில் நடித்த நான், அவர் மகன் பிரபுவுடனும் ‘கோழி கூவுது’ படத்தில் நடித்தேன். தமிழ், இந்தி, ஆங்கிலம் என 120 படங்களில் நடித்திருக்கிறேன்’’ என்கிற பார்த்திபன், இன்னொரு மிகப்பெரும் பெருமைக்கும் சொந்தக்காரர். ஆம், ஆறு முதல்வர்களின் படங்களில் பணியாற்றியவர் இவர்!
‘‘கலைஞர், எம்.ஜி.ஆர் படங்களில் நடித்திருக்கிறேன்.

ஜெயலலிதாவின் ‘வைரம்’, ‘மூன்றெழுத்து’, ‘அன்று கண்ட முகம்’, ‘மாட்டுக்கார வேலன்’ படங்களில் நடித்தேன். மூதறிஞர் ராஜாஜியின் கதையான ‘திக்கற்ற பார்வதி’ என்ற படத்தில் நடித்தேன். பிறகு பேரறிஞர் அண்ணாவின் வசனத்தைப் பேசி, ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் நடித்தேன். தமிழில் என்.டி.ராமாராவ் தயாரித்த ‘ராஜசூயம்’ படத்தில் முனிவர் வேடத்தில் நடித்தேன். இப்படிப் பார்த்தால், 6 முதல்வர்களுடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்’’ என்கிறார் அவர் பெருமிதத்தோடு!

1957ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பார்த்திபனை உறுப்பினராக இணைத்தவர்கள் எம்.ஜி.ஆரும், எஸ்.வி. சகஸ்ரநாமமும். இப்போது சங்கத்தில் பார்த்திபன் ஆயுள் உறுப்பினர். இவருக்கு முன் நடிகர் சங்கத்தில் இணைந்த 79 நடிகர்கள் இப்போது நம்முடன் இல்லை. பார்த்திபனின் மனைவி வனஜா, தமிழக அரசின் தொழில்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

‘‘சினிமாவில் இத்தனை வருடங்களில் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. எந்தப் படத்திலும் எனக்கு அதிக வருமானமும் கிடைத்ததில்லை. அதனால்தான் எனது வாரிசுகள் சினிமாவுக்கு வரவில்லை. சினிமாவையும், நடிப்பையும் தொழிலாக எடுத்துக்கொள்ள முடியாது. கடைசியாக, ‘மகளிர் மட்டும்’ படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்திருந்தேன். ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தனர். கமல், சிவகுமார், சிவாஜி மகன்கள் ராம்குமார், பிரபு போன்றோருடன் அடிக்கடி பேசுவேன்.

மற்றபடி இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாதென்றே நினைக்கிறேன்’’ - வார்த்தைகளில் உள்ள வருத்தம் முகத்தில் தெரியாமல் நம்மை வழியனுப்புகிறார் பார்த்திபன்.பார்த்திபன், இன்னொரு மிகப்பெரும் பெருமைக்கும் சொந்தக்காரர். ஆம், ஆறு முதல்வர்களின் படங்களில் பணியாற்றியவர் இவர்!

எஸ்.தேவராஜ்
படம்: பரணி