மும்பையில் ஒரு தமிழ் எம்.எல்.ஏ !



கேப்டன் தமிழ்ச்செல்வன்!

‘‘40 வருஷத்துக்கு முன்னாடி இதே மும்பையில அடுத்து என்னன்னு தெரியாம நின்னுக்கிட்டிருந்தேன். அரபு நாட்டுக்கு அழைச்சிட்டுப் போறதா சொன்ன ஒரு ஏஜென்ட் இங்கே கொண்டு வந்து விட்டுட்டு ஓடிட்டான். புள்ள நல்லா சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நம்பிக்கிட்டிருக்கிற பெத்தவங்களையும் தம்பி தங்கைகளையும் ஏமாத்தக்கூடாது... எது நடந்தாலும் இனி மும்பைதான்னு முடிவு பண்ணிட்டேன். மும்பைக்கும் எனக்குமான பந்தம் அப்படித்தான் ஆரம்பிச்சுச்சு...’’

தோழமை பொங்க, கம்பீரமாகத் தொடங்குகிறார் தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வன் என்றால் மும்பைக்காரர்கள் முறைக்கிறார்கள். ‘கேப்டன் தமிழ்ச்செல்வன்’ என்றுதான் சொல்ல வேண்டுமாம். புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், இன்று மகாராஷ்டிர சட்ட மன்ற உறுப்பினர். மும்பையின் பெரும் குடிசைப்பகுதியான சையன் கோலிவாடா தொகுதியில் பிஜேபி வேட்பாளராகப் போட்டியிட்டு, ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தோடு களமிறங்கிய சிவசேனா வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி ஜெயித்திருக்கிறார்.

1984ல் மாதுங்கா தொகுதியில் வெற்றி பெற்ற சுப்பிரமணியனுக்குப் பிறகு மகாராஷ்டிர சட்டமன்றத்தில் கால் வைக்கும் இரண்டாவது தமிழர். அங்கிருக்கும் தமிழர்கள் மட்டுமின்றி குஜராத்திகள், ராஜஸ்தானிகள், மராட்டியர்கள், பஞ்சாபிகளின் பேரன்பையும் குவித்திருக்கிறார் தமிழ்ச்செல்வன்.  

 விவசாயமே ஜீவாதாரமான செங்காடு, பிலாவிடுதி. 9 பிள்ளைகள் கொண்ட பெருங்குடும்பம். அப்பா ராமையா ராங்கியாருக்கு கொஞ்சமாக நிலம் இருந்தது. அதுதான் வாழ்வாதாரம்.
‘‘குடும்பத்துல மூத்த பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சிக்கு மேல படிக்க முடியலே. ஏதாவது ஒரு வழியில அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணணும்னு நினைச்சேன். எங்க பகுதியில இருந்து நிறைய பேர் அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போவாங்க. நாமும் போகலாமேன்னு முடிவு செஞ்சு ஒரு ஏஜென்ட்கிட்ட பணம் கட்டினேன்.

அவன் மும்பைக்கு அழைச்சுட்டு வந்து உக்கார வச்சு, ‘நாளைக்கு ஃபிளைட்’, ‘நாளைக்கு ஃபிளைட்’னு நாட்களை நகர்த்திக்கிட்டே இருந்தான். அவன் ஏமாத்தறான்னு அப்புறம்தான் உரைச்சுச்சு. வெறுங்கையோட ஊருக்குப் போக மனசில்லை. துறைமுகத்துல தினக்கூலியா சேந்தேன். கொஞ்ச நாள்ல மார்க்கரா ஆனேன். மார்க்கர்னா, கப்பல்ல இருந்து சரக்கு இறங்கும்போது அதைக் கண்காணிக்கிற வேலை. ஏழெட்டு வருஷம் கடலும், கப்பலுமா வாழ்க்கை ஓடுச்சு.

வாழ்க்கைன்னா மாற்றமும் ஏற்றமும் இருக்கணும். அதுக்கு அடிப்படை, உழைப்பு. உழைக்கத் தயங்கவே மாட்டேன். மத்தவங்க 10 மணி நேரம் உழைச்சா, நான் 15 மணி நேரம் உழைப்பேன். நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. ஓய்வு நேரங்கள்ல மத்தவங்களுக்காகவும் வேலை செய்ய ஆரம்பிச்சேன். குடிசைப்பகுதியில வசிக்கிற குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாவே இருந்துச்சு. நிறைய குழந்தைகளை பள்ளிக்கூடம் கூட்டிப் போனேன். மேற்படிப்புக்கு உதவி செஞ்சேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஹார்பர்ல இருந்து வெளியேறி ரயில்வேயில மார்க்கரா சேந்தேன். வேக வேகமாத் தொழிலைக் கத்துக்கிட்டு முன்னேறினேன். படிப்படியா சின்னச்சின்ன டெண்டர்கள் எடுத்தேன். நான் குடியிருந்த பகுதியில நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. அங்கிருந்த இளைஞர்களை ஒருங்கிணைச்சு இளைஞர் நற்பணி மன்றம் தொடங்கி பிரச்னைகளை எதிர்கொண்டு சரி செஞ்சோம். சேவைக்கான தேவை விரிவடைஞ்சுக்கிட்டே போச்சு.

தமிழர்களுக்கு நெருக்கடி வந்த காலங்கள்ல தமிழ்ச்சங்கங்களை ஆரம்பிச்சு தற்காத்துக்கிட்டோம். மொழி கடந்து, நிறைய பேர் தேடி வரத் தொடங்கினாங்க. அவங்க பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு தேடிக் கொடுத்தோம். பகுதிநேரமா செஞ்சுவந்த சமூக வேலைகள், ஒரு கட்டத்துல முழு நேரமாயிடுச்சு...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் தமிழ்ச்செல்வன்.

ரயில்வே பார்சல் நிறுவனம், கட்டுமான நிறுவனம் என தம் கடும் உழைப்பால் தொழில் ரீதியாகவும் பெரும் எல்லையைத் தொட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வன். தமிழர்கள் என்ற எல்லைக்குள் அடங்கி விடாமல் யாருக்குப் பிரச்னை என்றாலும் முன் நின்றதால் ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகியது. அரசியல் கட்சிகளின் கண்களை அது உறுத்த, தூண்டில் போட்டார்கள்.

‘‘ஆரம்பத்துல எனக்கு அரசியல் ஈடுபாடு இல்லை. ஆனா காலப்போக்குல அதோட அத்தியாவசியத்தை உணர்ந்தேன்.

அரசியல், நம் வேகத்தை அதிகப்படுத்தும். அதன்மூலமா இன்னும் தீவிரமா செயல்படலாம். பல கட்சிகள்ல இருந்தும் அழைப்பு வந்துச்சு. எனக்கு பிஜேபியோட கொள்கை பிடிச்சிருந்துச்சு. மொழி, இனம்னு மனுஷங்களைப் பிரிக்காம தேசியத்தையும் தெய்வீகத்தையும் மதிக்கிற கட்சி. 14 வருஷத்துக்கு முன்னால அந்தக் கட்சியில சேந்தேன்.

கட்சிக்காகவும், கட்சி சார்பாவும் நிறைய வேலைகள் செஞ்சேன். 3 வருடத்துக்கு முன்னால நடந்த மும்பை மாநகராட்சி தேர்தல்ல நின்னு கார்ப்பரேட்டரா ஜெயிச்சேன். இழக்கிறதுக்கு எதுவுமே இல்லைங்கிற மனநிலையில களத்துல இறங்கினேன். ஒரு மக்கள் பிரதிநிதி தனக்கு இடப்பட்ட வேலையை சமரசம் பண்ணிக்காம நிறைவா செஞ்சா நிச்சயம் அவனை மக்கள் அங்கீகரிப்பாங்க. அதுக்கு உதாரணம் நான். 

இந்த சட்டமன்றத் தேர்தல்ல எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்னு எதிர்பார்க்கலே. ஆனா நரேந்திர மோடியோட தேர்வுப் பட்டியல்ல என் பெயரும் இருந்துச்சு. சையன் கோலிவாடா தொகுதி, அடித்தட்டு மக்கள் வசிக்கிற தொகுதி.

 பெரும்பாலும் எல்லோருமே ஏதோவொரு வகையில எனக்கு அறிமுகமானவங்க. கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள். பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் போட்டியிட்டாங்க. சிவசேனா, மகாராஷ்டிர நவநிர்மான் சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்னு அஞ்சுமுனைப் போட்டி...

எல்லோரும் பணத்தை இறைச்சாங்க. இங்கே நிறைய சொசைட்டிகள் இருக்கு. அந்த சொசைட்டி தலைவர்களை எல்லாம் சந்திச்சு ‘நாங்க ஜெயிச்சா எல்லோருக்கும் வீடு கட்டித் தருவோம்’னு ஆசை காட்டினாங்க. ‘மண்ணின் மைந்தர்கள் இருக்க, எங்கிருந்தோ வந்தவர்களைத் தேர்வு செய்யலாமா’ன்னு கேட்டாங்க.

நான் எதையும் காதுல வாங்கிக்கலே. வீடு வீடாப் போய் மக்களைப் பாத்துக் கும்பிட்டேன். ‘உங்களுக்கு மனசுல என்ன படுதோ செய்யுங்க’ன்னு சொன்னேன். 4,000 வாக்கு வித்தியாசத்துல மக்கள் என்னைத் தேர்வு செஞ்சிருக்காங்க... மக்கள் என் மேல வச்சிருக்க நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு வந்திருக்கு...’’ - நெகிழ்ச்சி யுடன் பேசுகிறார் தமிழ்ச்செல்வன்.

தேர்வு முடிவுகள் வந்த அன்று மாலையே தொகுதியில் வேலைகளைத் தொடங்கி விட்டார் தமிழ்ச்செல்வன். பல வாரங்களாக தண்ணீர் வராமல் இருந்த பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வந்தது. பள்ளம், படுகுழிகளாகக் கிடந்த சாலைகள் செப்பனிடப்பட்டன.‘‘பள்ளிக்கூடங்களை மேம்படுத்த வேண்டியிருக்கு.

நிறைய கழிவறைகள் கட்டணும். போக்குவரத்து நெரிசலைப் போக்க பாலங்கள் அமைக்கணும். பிள்ளைகள் விளையாட மைதானங்கள் உருவாக்கணும். சுகாதாரப் பணிகள்ல கவனம் செலுத்தணும். குடிசை மாற்றுத் திட்டம் செயல் இழந்து கிடக்கு. அதுக்கு உயிர்கொடுத்து மக்களுக்கு நிறைய வீடுகள் கட்டித் தரணும்...’’ - தமிழ்ச்செல்வனின் செயல் திட்டங்கள் விரிகின்றன.

2008ல் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலின்போது சம்பவம் நடந்த சி.எஸ்.டி. ரயில்வே ஸ்டேஷனில் இருந்த தமிழ்செல்வன், துப்பாக்கிச் சூட்டுக்கு நடுவில், காயம்பட்டு உயிருக்குப் போராடிய 50க்கும் மேற்பட்டவர்களை தன் லக்கேஜ் வண்டியில் வைத்துத் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார். 40க்கும் மேற்பட்டவர்கள் பிழைத்தார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகே அவர் ‘கேப்டன் தமிழ்ச்செல்வன்’ ஆனார். தற்போது 6 மாவட்டங்கள் அடங்கிய மும்பை பிரதேச பாரதிய ஜனதாவின் செயலாளராக இருக்கிறார். ஏராளமான பொதுநல அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார்.

வெ.நீலகண்டன்