பூஜை



டைரக்டர் ஹரியின் ஆயுதப் பட்டறையில் போட்டுப் பதப்படுத்தி வெடித்த ஆக்ஷன் அணுகுண்டு ‘பூஜை’. அக்கம் பக்கம் திரும்பிவிடாமல், காரசார மசாலா கலக்கி, டாடா சுமோவில் ‘விர்’ரென அடித்துச் சிதறும் ஆக்ஷனை ரீல் தவறாமல் பார்க்க விரும்பினால், இருக்கவே இருக்கிறது, ஹரியின் ‘பூஜை’ தாண்டவம்.அம்மாவோடு மனத்தாங்கலில் வீட்டை விட்டு வெளியேறும் பெரிய வீட்டுப் பையன் விஷாலுக்கு, தஞ்சம் கொடுக்கிறது ஒரு மார்க்கெட்(!).

அங்கே அவர் வட்டி பிசினஸில் இறங்க, பக்கத்து ஊர் வில்லனுக்கு பதற்றம் வருகிறது. அடிக்க ஆளனுப்பி எச்சரிக்க விரும்புகிறார். அவர்களையே பிரித்து எடுத்து, திருப்பி அனுப்புகிறார் விஷால். மேற்படி வில்லனே விஷால் சித்தப்பாவை அவமானம் செய்ய, அம்மாவைக் கொலை செய்ய.... அதற்குப் பிறகு அமைதி களைந்து, விஷால் வேங்கைப்புலி ஆவதுதான் ‘பூஜை’. விஷாலுக்கென்றே அவதரித்த இன்னொரு பக்கா ஆக்ஷன்!

மதுரை, நெல்லை, தூத்துக்குடி என தென் தமிழகத்தில் பதிந்திருந்த ஹரியின் பார்வை இந்தத் தடவை கோவையில் விழுந்திருக்கிறது. அதிரடி நாயகனாகவும், அம்மாவிடம் மரியாதை காட்டும் மகனாகவும் இரும்பு உடம்பில் நிறையவே வித்தியாசம் காட்டுகிறார் விஷால். இறங்கி அடிக்கும் காட்சியில் திமிறும் உடற்கட்டு எல்லாவற்றையும் நம்ப வைக்கிறது. படம் முழுக்க பாய்ந்து பாய்ந்து சண்டை போடும் விஷால், எப்போதாவது நேரம் கிடைக்கும்போது ஸ்ருதி ஹாசனிடம் காதலும் செய்கிறார்.

விஷாலின் வளர்த்திக்கு ரொம்பப் பொருத்தம் ஸ்ருதி. ஓங்குதாங்காக பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டுபவர், மீதிக் காட்சிகளில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே இருக்கிறார். ஒரிஜினல் குரலில் ஆங்காங்கே பிசிறடித்தாலும் கேட்டுக் கேட்டுப் பழகி விட்டால் சரியாகிவிடும் போல. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விஷாலை சீண்டி விட்டு, பின் காதல் வந்தபிறகு விழிகளால் வீழ்த்துவது... நிஜமாகவே அழகு!

ஹரியின் அடிதடி படையல், ஆக்ஷன் ப்ளாக்கில் படு பொருத்தமாக அமைந்து விடுவதிலேயே முடிந்து விடுகிறது விஷாலின் பாதி வேலை. மறுபடியும் அம்மாவின் அழைப்பு விஷாலுக்கு வந்த கணத்திலிருந்து படம் தடதடவென தடம் மாறி சூடு பிடிக்கிறது. வண்டி வண்டியாக வசனத்தை அள்ளிக் கொட்டினாலும் அவசர வேகத்தில் எல்லாமே ஒற்றை வார்த்தை வரிகள் போலக் கடந்து சென்றுவிடுகின்றன. பெரிய ஹீரோக்களே மாறிட்டாங்க... நீங்க கொஞ்சம் மாறக் கூடாதா ஹரி?

சூரி, பிளாக் பாண்டி, இமான் அண்ணாச்சி காமெடியில் நிறைய இடங்கள் சிரிப்பு ரவுசு. பழைய கவுண்டமணி-செந்தில் வாசனையடித்தாலும், இந்த மூன்று பேரின் அலப்பறையை ரசிக்க முடிகிறது. ஸ்டெடியாக படத்திற்கு உதவுவதில் சமீப காலமாக வெயிட்டு காட்டுகிறார் சூரி. ‘இதாண்டா இந்தியா முன்னேற மாட்டேங்குது’ என சூரி-பாண்டி சண்டைக்குப் பிறகு, இமான் புலம்புவது வெடிச்சிரிப்பு. காதலுக்காக ஓடிப்போவதை கண்டனம் செய்யும் விஷாலை பெற்றோர்களுக்குப் பிடிக்கும்.

படம் நெடுக பெண்களை கிண்டல் செய்யும் சூரி வகையறாவை யார் கேள்வி கேட்பது? யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி அதிரடிதான். ஆனால், பதற்றத்தோடு படம் பார்த்த மக்களுக்கு பாடல்களில் கட்டாய ஓய்வு தருகிறார் யுவன். ரணகளமான ஆக்ஷனில் அதகளமாக இருப்பது ப்ரியனின் கேமரா.உங்களுக்கே தெரியும் ஹரி படங்களில் என்ன இருக்குமென... அதெல்லாம் இருக்கிறது. அவ்வளவு தான்!

- குங்குமம் விமர்சனக் குழு