அவன் அவள் unlimited



அஸ்ட்ராலஜி இல்லை... இது ஹார்மோனாலஜி!

ஆணும் பெண்ணும் முற்றிலும் வெவ்வேறு உயிரினங்கள். இருவருக்குமான தகவல்தொடர்பு இன்னும் துவக்கநிலையில்தான் உள்ளது!

- பில் காஸ்பி

‘ஒருநாள் சிரித்தேன்... மறுநாள் வெறுத்தேன்... உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா?’ - இப்படி த்ரிஷா போல எல்லா பெண்களும் கேட்க வேண்டும் என்பதுதான் ஆண்களின் ஆசை, தோசை, அப்பளம், வடை. ஆனால், நடக்காது. காரணம், தாங்கள் இப்படி மாறி மாறிப் பேசுவதை பெண்கள் பிளான் பண்ணிச் செய்வதில்லை. ஏன், பெண்களின் ‘மூட்’ மாற்றம் அவர்கள் அறிந்துகூட நடப்பதில்லை. ‘பெண்களின் மனநிலையில் அவர்களின் உடல் ஆற்றும் பங்கு மிகப் பெரிது’ என்கின்றன ஆராய்ச்சிகள்!

‘‘ஒரு பெண், தனது மாதவிடாய் சுழற்சியில் 7 முதல் 10வது  நாட்களில் இருக்கும்போது அவளுக்கு கணக்குப் பரீட்சை வந்தால், வழக்கத்தைவிட நிச்சயம் பத்து மார்க் அதிகம் வாங்குவாள்’’ என உறுதியாகச் சொல்கிறார் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உடல் இயக்கவியல் இணைப்பேராசிரியர் டாக்டர் செம்மல்.‘‘நம் வீட்டு நாய் குட்டி போடும் இடத்தைப் பாருங்களேன்...

 யாருமே அதிகம் போகாத மாடிப்படி இடுக்கை சரியாகத் தேர்வு செய்யும். ஏன்? காருக்கு அடியில் கூட இருட்டாகத்தானே இருக்கிறது? அங்கே குட்டி போட்டிருக்கலாமே! ம்ஹும்... சாதாரணமாக காருக்கு அடியில் ரெஸ்ட் எடுத்து டயரில் சிக்கும் அதே நாய்க்கு இப்போது அறிவு வந்திருக்கும்.

 கார் நகரும் என்பதும், அங்கிருந்தால் தனக்கும் தன் குட்டிகளுக்கும் ஆபத்து என்பதும், நன்கு புரிந்திருக்கும். கர்ப்பகாலத்தில் தன் குட்டிகளைக் காப்பாற்றுவதற்காக அதற்குத் தரப்பட்ட விசேஷ ஹார்மோன் சக்தி இது. கர்ப்ப காலம் மட்டுமல்ல, இனப்பெருக்கத்துக்குத் தேவையான எல்லா தருணங்களிலும் இதே மாதிரியான அதித அறிவு எல்லா உயிரினங்களுக்கும் வருவதுண்டு. மாதவிடாய் சுழற்சியின் 7வது முதல் 10வது நாட்களில் பெண்களுக்கு ஏற்படுகிற அறிவு பூஸ்ட்டுக்கு இதுதான் காரணம்!’’ என்கிறார் அவர் விளக்கமாக.

‘‘இப்படிப்பட்ட புத்திசாலித்தனம் மட்டுமல்ல... அயர்ச்சி, கோபம், காதல், சோகம் எனப் பெண்களின் ஒவ்வொரு ‘மூட்’ மாற்றத்துக்கும் மாதவிடாய் சுழற்சி மிக முக்கியக் காரணம்’’ என்கிறார் அமெரிக்க உளவியலாளரான பமீலா மாட்சன்.‘‘ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த பெண்மைத்தன்மைக்கும் நளினத்துக்கும் மென்மைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பொறுப்பாளி.

கருத்தரித்தல், அது தொடர்பான ஊட்டச்சத்தைக் கொண்டுவரும் வேலையை ப்ரொஜஸ்டிரான் செய்கிறது. ஆண்களிடம் அதிகம் இருக்கும் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், பாலியல் இச்சைக்கும் அது தொடர்பான தைரியத்துக்கும் அத்தாரிட்டி! இந்த மூன்று ஹார்மோன்களும் பெண்ணின் கருமுட்டை சுழற்சி முழுக்க மாறி மாறி எழுச்சி பெறுகின்றன. அதுதான் ‘மூட்’ மாற்றத்துக்குக் காரணம்!’’ என்கிறார் பமீலா.

கேப்ரில்லி லிச்டர்மென் என்ற ஆய்வாளர், ‘ஹார்மோன் ஜோதிடம்’ என்றே ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார். ‘‘நீங்கள் மாதவிடாய் சுழற்சியில் எந்த நாளில் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்... இப்போது உங்கள் மனநிலை என்ன... உங்களின் பிரச்னைகள் என்னென்ன என்பதை நாங்கள் சொல்கிறோம்’’ எனப் பெண்களிடம் சவால் விடுகிறது கேப்ரில்லியின் ஹார்மோனாலஜி!பெண்களின் மனநிலை எப்படி எல்லாம் மாறும்? இதோ, ஹார்மோனாலஜி தரும் லிஸ்ட்...

முதல் வாரம்...

மாதவிடாய் துவங்கியதி லிருந்து ஏழாவது நாள் வரை பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மட்டும் ஏறுமுகத்தில் இருக்கும். அதிக ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களை மிக சாந்தமாகவும், மென்மையாகவும் வைக்கும்.

மற்ற நாட்களில் குழந்தைகள் டி.வி ரிமோட்டை உருட்டினாலே டென்ஷனாகும் அம்மாக்கள், இந்த சமயத்தில் டி.வியையே உடைத்தாலும் ‘அதுக்கென்னடா ராஜா’ என அணைப்பார்கள். அவுட்டிங், டேட்டிங், சத்தான ஈட்டிங், அக்கம் பக்கத்து வீடுகளில் மீட்டிங் எனப் பெண்களை முழுமையான சமூக விலங்காக வைத்திருக்கும் கால கட்டம் இது.

இரண்டாம் வாரம்...

இதை பெண்களின் ஓவலேஷன் காலம் என்பார்கள். அதாவது கருமுட்டை உருவாகி கருத்தரித்தலுக்காகக் காத்திருக்கும் காலம். இதையெல்லாம் முதன்முதலில் ஆராய்ந்து ஆவணப்படுத்தியவர்கள் நாம்தான்.

‘நீராடிய பின் ஈராறு நாளும் கரு வயிற்றூறும் காலம்’ என இந்த ஓவலேஷன் காலத்தைக் குறிப்பிடுகிறது ‘நம்பியகப்பொருள்’ எனும் பழந்தமிழ் இலக்கண நூல். பெண்களின் சிறந்த காலகட்டம் என்கிறார்கள் இதை. உயிரியலின்படி, இப்போது தாம்பத்ய உறவு நடந்தாக வேண்டும் என்பதால், அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் உடல் செய்யும். தோற்றப் பொலிவு, தோல் மினுமினுப்பு எல்லாம் வரும். தன்னை அறியாமலே வெட்கம், மர்மப் புன்னகை, கண் சிமிட்டல் மாதிரி சில காதல் சிக்னல்களை பெண்கள் வெளிப்படுத்தும் காலம் இது.

தவறான ஆண்களிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதால், இந்த வாரத்தின் முதல் பாதியில் பெண்கள் ஈடு இணையற்ற அறிவுத் திறனோடு விளங்குவார்கள். ஆனால், அந்த அறிவுத் திறன் எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணிவிட்டால், அப்புறம் இணை சேரலே நடக்காதே! ஸோ, இவ்வாரத்தின் பிற்பகுதியில் ‘ஆண் ஹார்மோன்’ டெஸ்டோஸ்டிரான் சுரந்து, பகுத்தறிவை சற்று மழுங்கடிக்கிறது.

‘‘அவர் நல்லவர்டி’’ எனப் பேச வைக்கிறது. டேமேஜ்டு புடவை வாங்குவதில் தொடங்கி, பைனான்ஸ் கம்பெனியில் பணம் போடுவது வரை பெண்கள் மோசமான முடிவுகளை எடுப்பது பெரும்பாலும் இந்தக் காலகட்டமாக இருக்கும்.

ஆனால், ஆண் - பெண் உறவைப் பொறுத்தவரை இனிமை பூத்துக் குலுங்கச் செய்யும் காலம் இது. ஈகோ பார்க்காமல் பெண்கள் கணவரை பாலுணர்வோடு நெருங்குவார்கள். விட்டுக்கொடுத்தல்கள் இயல்பாக நடக்கும். சண்டைகள் தவிர்க்கப்படும். பல் வலி, முதுகுவலி போன்ற நிரந்தர வலிகள் கூட ‘கொஞ்சம் பரவாயில்லை’ என்பது போலக் குறையும். உடலின் இயல்பான வலி நிவாரணியான எண்டோர்ஃபினை ஈஸ்ட்ரோஜன் சுரக்கச் செய்வதுதான் இதற்குக் காரணம்.

ஆனால், இந்த ஈஸ்ட்ரோஜனுக்கு பக்க விளைவும் உண்டு. சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக் கூட, மன அழுத்தத்தை ஏற்பத்துவது ஈஸ்ட்ரோஜனின் பிறவிக் குணம். ‘‘வேலைக்காரி எப்பவும் இப்படித்தானே பாத்திரம் விளக்குவா! இன்னிக்கு ஏன் டென்ஷன் ஆகுறே?’’ என கணவர்களும்... ‘‘நான் எப்பவும் லேட்டாதானே வருவேன்... இன்னிக்கு ஏன் அழறே?’’ எனக் காதலர்களும் தலையைப் பிய்த்துக்கொள்வது இது புரியாமல்தான்.மீதமிருக்கும் இரண்டு வாரங்களில் பெண்களின் மூட் எப்படியெல்லாம் மாறுமோ!

நீங்கள் யார்?

இந்த வடிவத்தில் வெட்டப்பட்ட ஓர் அட்டையை ஒட்டி கனசதுரமாக்கினால், அதில் குறியீடுகள் எப்படி இருக்கும்.இதில் சரியான விடையை டிக் செய்துகொண்டு, தலை
கீழாக்கி விடையைப் படியுங்கள்...

இதற்கு விடை ஆப்ஷன் கி. ஆனால் அதுவல்ல மேட்டர். இந்த விடையை நீங்கள் கண்டுபிடித்திருந்தாலோ, அல்லது என்னால் முடியும் என வைராக்கியத்தோடு விடையைப் பார்க்காமல், ஒரு தவறான விடையைக் குறித்திருந்தாலோ நீங்கள் வலது மூளையால் சிந்திப்பவர் என்று அர்த்தம். எதிலும் நேரடி... செயலில் அதிரடி...

இதுதான் உங்கள் ஸ்பெஷல். ‘இதெல்லாம் என்னய்யா வேலை... ஆன்சரைப் பார்த்துட்டு பலன்களைப் பார்ப்போம்’ என நீங்கள் வந்திருந்தால், நீங்கள் இடது மூளைக்காரர். இது ஒன்றும் இளப்பமல்ல. எதையும் ஸ்மார்ட்டாக யோசித்து புத்திசாலித்தனமாகச் செயல்படுபவரைத்தான் இடது மூளைக்காரர் என்பார்கள்!

தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்