வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போற சக்தி கல்விக்குத்தான் இருக்கு!



கொடுக்கறதுக்கு இங்கே நிறைய பேர் இருக்காங்க. ‘ஒருத்தருக்கு உதவணும், பணம் கொடுங்க’ன்னா குவிந்திடும். ஆனா, ‘உங்க நேரத்தைக் கொஞ்சம் கொடுங்க’ன்னா யாரும் தயாரா இல்லை. ஆதரவில்லாதவங்களை அரவணைச்சு, ‘நாங்க இருக்கோம்’னு நம்பிக்கையூட்டுற மனம்தான் குறைவா இருக்கு. அப்படிப்பட்ட நல்ல மனங்களை ஒருங்கிணைக்கறதுதான் எங்க நோக்கம்...’’

- ஒத்த குரலில் சொல்கிறார்கள் சசியும், அவரது நண்பர்களும். இதற்காகவே ‘அவர் ஹோம்’ (Our Home) என்ற அமைப்பையும் தொடங்கியிருக்கிறார்கள். பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், செவித்திறன் இல்லாதவர்கள் என விளிம்பில் இருக்கிறார்கள் இவர்களின் இலக்கு மனிதர்கள்.

‘அவர் ஹோம்’ அமைப்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அனைவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்கள் நொடிகளைப் பொன்னாக்குபவர்கள். அவர்களின் கவனத்தை விளிம்பு மக்களின் பக்கம் திருப்பியதோடு, பல நூறு மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சசி.‘‘எங்கள்ல முக்கால்வாசிப் பேர் அடித்தட்டுக் குடும்பத்துல பிறந்து, யாரோ ஒருத்தரோட தோளைப் பிடிச்சு தட்டுத் தடுமாறி மேலே வந்தவங்கதான்.

இன்னைக்கு நிறைவான சம்பளத்தோட தகுதியான ஒரு வாழ்க்கையைத் தொட்டுப் பிடிச்சிருக்கோம். அதுக்கு அடிப்படையா இருந்தது கல்வி. வாழ்க்கை எந்த நிலையில இருந்தாலும், அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகிற சக்தி கல்விக்கு மட்டும்தான் இருக்கு. நம் சமூகத்தோட விளிம்புல இருக்க பலருக்கு இன்னும் கூட நல்ல கல்வியும், வழிகாட்டுதலும் கிடைக்கலே.

குறிப்பா, ஒடுக்கப்பட்ட சமூகக் குழந்தைகள், சாலையோரத்துல வசிக்கிற குடும்பத்துப் பிள்ளைகள், மலைவாழ் மக்களோட குழந்தைகள்... ஆனா, இவங்களையும் தாண்டி, எதிர்காலம் புலப்படாம தவிக்கிற இன்னொரு பிரிவும் இருக்கு. ஆதரவற்ற இல்லங்கள்ல இருக்கிற குழந்தைகள்தான் அவர்கள். நிறைய பேர் அவங்களுக்கு உதவி செய்யப் போறாங்க. திருமண நாளுக்கு சாப்பாடு குடுக்கிறது, பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுக்கிறதுன்னு சின்னச் சின்ன சந்தோஷங்களை அவங்களுக்குத் தர்றாங்க. அதுவே அவங்களை மேலே தூக்கி விட்டுடுமா? அதைக் கடந்து அந்தப் பிள்ளைகளுக்கு வாழ்வாதாரம் தேவைப்படுது.

அப்பா, அம்மா, அண்ணன், தங்கைன்னு உறவுகள் சூழ பிறந்து வளர்ற பிள்ளைகளுக்கே இங்கே கொழுகொம்பு அவசியமா இருக்கும்போது, எந்த உறவும் இல்லாம தவிச்சு நிக்கிற அந்தப் பிள்ளைகளுக்கு..? பிற குழந்தைகளோட உளவியலுக்கும், இல்லங்கள்ல வளர்ற குழந்தைகளோட உளவியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பெரும்பாலான இல்லங்கள்ல கல்வி கொடுக்கிறாங்க. ஆனா, அந்தப் பிள்ளைகளுக்கு அது கசப்புப் பொருளா இருக்கு. மனசு முழுக்க ஏக்கமும், துக்கமும் நிரம்பி இருக்கும்போது, படிப்பு போய்ச் சேர எங்கே இடம் இருக்கும்?

கல்லூரியில படிக்கும்போதே, மாலை நேரங்கள்ல நண்பர்களை அழைச்சுக்கிட்டு இல்லங்களுக்குப் போய் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். அவங்க மனசுக்கு நெருக்கமாப் பேசி, பழகி, நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் உருவாக்கினோம். படிப்பு முடிச்சு சென்னைக்கு வந்து வேலையில சேந்ததும், இந்த சேவையை பெரிய அளவுல கொண்டு போகணும்னு நினைச்சேன். நண்பன் லோகேஷ் என்னோட கரம் கோர்க்க முன் வந்தான்.

முதல்ல உளவியல் பொதிஞ்ச ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குனோம். விளையாட்டு, விடுகதைன்னு எளிமையான வாசிப்பைக் கொண்டு போனோம். ஒரு ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி, ‘எங்களுக்கு தோள் கொடுக்க வாங்க’ன்னு நண்பர்களை அழைச்சோம். வெவ்வேற நிறுவனங்கள்ல வேலை செய்கிற ஐம்பது பேர் களத்துக்கு வந்தாங்க. முதல்ல 5 இல்லங்களைத் தேர்வு செஞ்சு வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சோம்.

எங்களோட வருகையே அந்தக் குழந்தைகளுக்கு உற்சாகமா இருந்துச்சு. ‘உங்களை மாதிரி நாங்களும் ஆக முடியுமாண்ணா’ன்னு அவங்க நம்பிக்கையாவும், ஆர்வமாவும் கேட்டது இன்னமும் காதுக்குள்ள ஒலிக்குது. வெறும் படிப்பை மட்டுமில்லாம அவங்க திறனை அறிஞ்சு அடுத்தடுத்துன்னு அவங்களை நகர்த்திக்கிட்டுப் போனோம். உயர்கல்விக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டோம். பணித்திறன் பயிற்சிகள் கொடுத்தோம். பல பிள்ளைகள் இன்னைக்கு சுயமா தங்கள் கால்ல நிக்கிற சூழல் உருவாகியிருக்கு...’’ - நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சசி. திண்டுக்கல்காரர்.

‘‘பொதுவா ஐ.டி. பசங்களோட வீக் எண்ட்னா, பீச், பார்ட்டி, அவுட்டிங்னு கலர்ஃபுல்லா போகும்னு ஒரு கற்பனை இருக்கு. உண்மையில் உபயோகமா பல விஷயங்கள் இங்கே நடந்துக்கிட்டிருக்கு.

எனக்குத் திருமணமாகி 11 மாசம் ஆகுது. திருமணத்துக்கு முன்னாடியே, ‘என்னோட வீக் எண்ட் ‘அவர் ஹோமு’க்குத்தான்’னு என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். இப்போ அவரும் என்கூட வர்றார். லெக்சரரா இருந்து ஐ.டி. ஃபீல்டுக்கு வந்தவ நான். கல்வியோட முக்கியத்துவம் எனக்குத் தெரியும்.

என் பிள்ளைக்கு நான் எதையெல்லாம் கத்துக் கொடுக்க நினைக்கிறேனோ, அதையெல்லாம் இந்தப் பிள்ளைகளுக்கும் கத்துக் கொடுக்கிறேன். ‘அக்கா’, ‘அம்மா’ன்னு இந்தப் பிள்ளைகள் என் விரல் பிடிச்சுக்கிட்டு நிக்கும்போது நிறைவா இருக்கு. எங்க வேகத்தையும் ஆர்வத்தையும் பாத்து நிறைய பேர் ‘அவர் ஹோம்’ இயக்கத்துக்கு வர்றாங்க.

அதனால வெவ்வேறு தளங்கள்ல வேலை செய்யலாமேன்னு தீர்மானிச்சோம். பார்வையில்லாதவங்க, காது கேளாதவங்க, மன வளர்ச்சி இல்லாத குழந்தைங்க எங்க அடுத்த இலக்கா இருந்தாங்க. அவங்களுக்கும் தனித்தனி திட்டங்களை உருவாக்கியிருக்கோம்...’’ என்கிறார் மோனிகா.

பார்வையற்ற மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் கர்ண வித்யாலயா அமைப்போடு இணைந்து 6 மாத வேலைத்திறன் பயிற்சியை அளிக்கிறது ‘அவர் ஹோம்’. இதற்கான பாடத் திட்டத்தையும் இவர்களே உருவாக்கியிருக்கிறார்கள். இதுதவிர, பார்வையற்றவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியிருக்கிறார்கள்.

‘‘பார்வை இல்லாதவங்களுக்கு நம்மை விட பல மடங்கு திறன் இருக்கு. அதைத் தூண்டுறதுக்காகத்தான் இந்த விளையாட்டுப் போட்டிகள். வெற்றி, பரிசுன்னு அவங்களை ஊக்கப்படுத்தும்போது எதிர்பாராத அளவுக்கு அவங்ககிட்ட இருந்து திறமைகள் வெளிப்படுது. அவங்க உயர்கல்விக்கும் உதவிகள் செய்யிறோம். புதுசா தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் செஞ்சு கொடுக்கிற பணியும் போய்க்கிட்டிருக்கு. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பத்தி நிறைய ஆய்வுகள் செஞ்சிருக்கோம். அவங்ககிட்டயும் வேலை செய்யப் போறோம்.

கனிவும், கூடுதல் கவனிப்பும் இருந்தா அந்த குழந்தைகளையும் சராசரியா மாத்த முடியும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பராமரிக்கிற பயிற்சியில ஒரு பெரிய டீமை இணைச்சிருக்கோம். இந்தியாவில பல மாநிலங்கள்ல இருந்து நண்பர்கள் ஒன்றிணைந்திருக்காங்க.

செயல்திட்டங்களை உருவாக்கிக் கொடுத்து அவங்க பகுதியில வேலை செய்யச் சொல்றோம். எங்களோட அடுத்த இலக்கு மலைவாழ் மக்களோட குழந்தைகள்... கொடைக்கானல் பகுதியில உள்ள பழங்குடி குழந்தைகளுக்காக ஒரு பள்ளி தொடங்குற திட்டம் இருக்கு...’’ என்கிறார் திலீப். ‘அவர் ஹோமி’ல் நீங்களும் கைகோர்க்க: www.ourhome.in

பொதுவா ஐ.டி.
பசங்களோட வீக்
எண்ட்னா, பீச், பார்ட்டி,
அவுட்டிங்னு கலர்ஃபுல்லா
போகும்னு ஒரு கற்பனை
இருக்கு. உண்மையில்
உபயோகமா பல விஷயங்கள்
இங்கே நடந்துக்கிட்டிருக்கு...

வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்