‘‘எடுத்த வரைக்கும் படம் திருப்தியா வந்திருக்கு. இரண்டு பாட்டு மட்டும் பேலன்ஸ். ‘ஃபாரீன் போகலாமா சார்’னு புரொடியூசர்கள்கிட்டே கேட்டேன். ‘கூலிப்படைய வச்சு கொன்னுடுவேன்’னு மிரட்டுறாங்க. அதனால, தமிழ்நாட்டுக்குளேயே எங்கேயாச்சும் பாங்காக், சுவிஸ் மாதிரி தெரியுதான்னு தேடிக்கிட்டு இருக்கோம்’’ - முதல் படம் என்பதற்கான பயமே இல்லாமல் பேசுகிறார் ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா. சரவணன். பத்திரிகையாளராக இருந்து புறப்பட்ட புயல்.
‘‘உங்களை மாதிரி சிரமமே படாமல் நேரடியா சினிமாவுக்கு வந்தவங்க ரொம்பக் கொஞ்சம்... அப்படி வர முடியுமா?’’ ‘‘சினிமாவில் சிரமப்படலைன்னு சொல்லுங்க... அது உண்மை. ஆனா, சினிமாவை மனசுல சுமந்துக்கிட்டு வெளியில இருந்து பட்ட சிரமம் நிறைய. யாரோட வாழ்க்கையிலதான் சிரமம் இல்லை.
சினிமா கொடுக்கிற பெரிய சிரமமே, அவமானம்தான். அதை வலிக்க வலிக்க அனுபவிச்சிருக்கேன். எல்லா வலியும் ஒரு விதத்தில் முதலீடுதான். யார்கிட்டேயும் அசிஸ்டென்ட்டா வேலை பார்க்காமல் சினிமாவில் ஜெயிக்கிறது ஆழ்துளைக் கிணத்துல சிக்கி மீண்டு வர்ற குழந்தைக்குச் சமம். சும்மா நாலு ஷூட்டிங்கை எட்டிப் பார்த்திட்டும், உலகப் படங்களைப் போட்டுப் பார்த்திட்டும் படம் பண்ணிட முடியாது. ‘அதெல்லாம் தெரிஞ்சும் எப்படிப்பா சினிமாவுக்கு வந்தே’ன்னு கேக்கறீங்களா? ஆசை சார்... அம்புட்டு ஆசை.
13 வருஷத்திற்கு முன்னாடியே விக்ரமன் சார் வீடு தேடி அலைஞ்ச மனசு, இப்பவும் அமீர் அண்ணன் ஆபீஸ்லயும், சசிகுமார் சார் ஆபீஸ்லயும் கிடையா கிடக்குது. அமீர் அண்ணன்தான் எனக்கு எல்லாமே. அவர்கிட்டதான் முதல்ல கதை சொன்னேன். ‘நல்ல கதை... தைரியமா பண்ணுங்க’ன்னு அவர் சொன்ன வார்த்தைகள்தான் இப்போ வரைக்கும் என்னை இயக்கிக்கிட்டு இருக்கு. ‘சொன்ன கதை அப்படியே வரணும்னா நீங்களே டைரக்ட் பண்றதுதான் சரி’ன்னு சொல்லி, கொஞ்ச நஞ்ச தயக்கத்தையும் உடைச்சவர் சசிகுமார் சார். ஷூட்டிங் நடந்த அத்தனை நாளும் சாயந்திரம் ஆறரை மணிக்கு சசி சார்கிட்ட இருந்து அக்கறையா ஒரு போன் வரும். இவங்க ரெண்டு பேரோட நட்பும் நம்பிக்கையும்தான் என்னோட பெரிய சம்பாத்தியம்.’’
‘‘ ‘கத்துக்குட்டி’... யார்?’’
‘‘படத்தில் நரேன்... நிஜத்தில் நான். அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல் ஒரு விஷயத்தில் இறங்கி அதோட விளைவுகளுக்கு ஆளாகிற ஆள்தான் ‘கத்துக்குட்டி’. வாழ்க்கையில் எல்லோருமே ஒரு விதத்தில் கத்துக்குட்டிகள்தான். திமிர் இருக்கறப்ப தெனாவெட்டு காட்டுறதும், காரியம் ஆகணும்னா காலைப் பிடிக்கிறதும் வாழ்க்கையோட இலக்கணங்களா ஆகிப் போச்சு. அந்த மாதிரி யாரையும் சட்டையே பண்ணாம சவடால் காட்டித் திரிகிற ஒருத்தன், எல்லாரையும் அனுசரிக்க வேண்டிய இக்கட்டுக்கு ஆளானா எப்படியிருக்கும்? கோயிலைப் பார்த்துக்கூட கும்பிடாதவன், எதிர்த்தாப்புல எவன் வந்தாலும் கும்பிட வேண்டிய நிலைக்கு ஆளானால் எப்படி இருக்கும்? இப்படித் தலைகீழா மாறி தெனாவெட்டும் காமெடியுமா கலக்கிறவன்தான் நம்ம
‘கத்துக்குட்டி’!’’
‘‘நரேன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வர்றார். எப்படிப் பண்ணியிருக்கார்?’’‘‘மிஷ்கின், ராஜீவ் மேனன் மாதிரியானவங்களோட பயணிச்சவர் நரேன். எந்த அனுபவமும் இல்லாத என் தோளில் எப்படி நம்பிக்கையா கை போட்டு நிற்கிறார்னு தெரியலை. ‘உங்களுக்கு பயமா இல்லையா’னு கேட்டேன். ‘இது என்னோட திருப்புமுனையான படம் ஜி. நான் அவ்வளவு நம்புறேன்’னு சிரிச்சார். இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மள சின்சியரா இயக்க வைக்குது...’’‘‘இன்னைக்கு பரபரப்பான காமெடியன் சூரி. அவரை எப்படி அமுக்குனீங்க?’’
‘‘சூரி வைத்தியரா பொறந்திருக்க வேண்டிய ஆளு. அஞ்சு நிமிஷம் பேசினார்னா பிளட் பிரஷர், சுகர் எல்லாம் போன இடம் தெரியாது. அந்த அளவுக்கு கன்னாபின்னா காமெடி பார்ட்டி. படத்தில் அவரோட பெயர் ‘ஜிஞ்சர்’. ஒருநாள் ஷூட்டிங்ல கூட்டத்தைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலை. ‘அசிஸ்டென்ட்ஸ் என்னப்பா பண்றீங்க?’ன்னு மைக்ல கத்தியபடி திரும்பிப் பார்த்தா, சூரி கூட்டத்தை க்ளியர் பண்ணிக்கிட்டு இருந்தார். அவரைப் போய் தரதரன்னு இழுத்துக்கிட்டு வந்து கேரவன்ல ஏத்தி, ‘நீங்கதான் கிரவுடுக்கே காரணம்...’னு சொன்னேன். தான் எவ்வளவு பெரிய ஸ்டாராகிட்டோம்னே தெரியாத அப்புராணி மனுஷன்!’’
‘‘பாரதிராஜாவோட தம்பி ஜெயராஜை நடிக்க வைக்கணும்னு எப்படி தோணிச்சு?’’‘‘யதார்த்தமான முகம்... என் மண்ணோட கதையைச் சொல்ல அந்த முகம் அவசியமா பட்டது. ஒரு கட்டத்தில், ‘நான் பண்ணிடுவேனா’ன்னு ரொம்பத் தயங்கினார். இன்னிக்கு படத்தில் பெரிசா ஸ்கோர் பண்ணியிருக்கிறதே அவர்தான். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தங்கமான தகப்பன்!’’
‘‘உங்க டீம் பற்றி?’’
‘‘ஹீரோயின்தானே? கன்னக்குழியால் ரசிகர்களை கட்டிப் போடுகிற அழகுப் பொண்ணு... ஸ்ருஷ்டி. பொறந்தது மும்பை. ஆனால், பக்காவா தமிழ் பேசுறாங்க. லட்சுமி மேனனுக்கு அடுத்து தமிழில் நிச்சயமா பெரிய ரவுண்ட் வருவாங்க. கேமரா, சந்தோஷ் ஸ்ரீராம். வாழ்க்கையை அதன் போக்கில் வாழுற கவிஞர் விக்ரமாதித்தனோட பையன். இசை, அருள்தேவ். பாடல்களில் வண்டல் காட்டு வார்த்தைகளை நூல் கோர்த்த மாதிரி கொடுத்திருக்கார் சினேகன். தயாரிப்பாளர்கள் அன்வர் கபீர், ராம்குமார் ரெண்டு பேரும் இப்ப வரைக்கும் கதை கேட்கலை. நட்புக்காக ஈரக்குலையைக் கூட எடுத்து வைக்கிற நண்பர்கள். பதிலுக்கு நான் படத்தை நல்லபடியா எடுத்துக் கொடுத்திட்டா போதும்!’’
- நா.கதிர்வேலன்