ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்




நிகோல் கிட்மேன்


இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் நிகோல் கிட்மேன், மூன்றாவது ஒரு பையன் வேண்டும் என ஆசைப்படுகிறார். தன் இரண்டாவது மகளை ஒரு வாடகைத்தாய் மூலமே பெற்றார் அவர். அது போலவே தன் மகனைச் சுமக்கவும் இப்போது வாடகைத்தாய் தேடுகிறார்.

கௌஹர் கான்


ஆறு வருஷங்களாகப் போராடியும் பாலிவுட்டில் நிரந்தர இடம் கிடைக்காததில் விரக்தியோடு இருந்தார் கௌஹர் கான். மாடலிங்கில் சாதித்து இருந்தாலும், அயிட்டம் நம்பர் வாய்ப்புகள் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. அப்படியே டி.வி ரியாலிட்டி ஷோக்கள் பக்கம் ஒதுங்கியவர், குஷால் டாண்டன் என்ற மாடலைக் காதலித்தார். திருமணம் செய்துகொண்டு செட்டிலாகலாம் என நினைக்கும் நேரத்தில் சில வாய்ப்புகள் வந்து கதவைத் தட்ட... குழப்பத்தில் இருக்கிறார் அவர்.

இஷா குப்தா

பிபாஷா பாசுவோடு இரண்டு படங்களில் சேர்ந்து நடித்திருக்கும் இஷா குப்தா, எப்போதும் பிபாஷா புகழ் பாடுகிறார். ‘‘என்னைப் போன்ற இளம் நடிகைகளுக்கு நல்ல வழிகாட்டி அவர். யாரைப் பற்றியும் வம்பு பேசுவதில்லை. எப்படி நடந்துகொள்வது என சொல்லித் தருகிறார். உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க டிப்ஸ் தருகிறார்’’ என்கிறார்.

ஹாலே பெர்ரி

திரைப்பட விழாக்களுக்கு கவர்ச்சி உடையில் நடிகைகள் ஏன் வருகிறார்கள்? ‘‘புதிய வாய்ப்புகளைத் தேடத்தான்’’ என்கிறார் ஹாலே பெர்ரி. ஹாலே, சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்து ஒரு வாய்ப்பை அள்ளியிருக்கிறார். தீவிரவாதிகளால் கடத்தப்படும் மகளை மீட்கும் ஒரு துணிச்சலான அம்மா ரோல்! ‘‘இதற்கும் விருது நிச்சயம்’’ என்கிறார் புன்னகையோடு!

மாதுரி தீட்சித்

‘குலாபி கேங்’ படத்தைப் பார்த்து விட்டு மாதுரி தீட்சித்துக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டால் மறுத்துவிடுகிறார். ‘‘எனக்கு 46 வயதுதான் ஆகிறது. இங்கு பல ஹீரோக்களுக்கு என் வயதுதான். இப்போதைய ஹீரோயின்கள் சிலரைவிட நான் இளமையாக இருக்கிறேன். அப்புறம் ஏன் இப்படி நடிக்க வேண்டும்?’’ என்கிறார்.