3 வருடம் வாடாத வாழை இலை!



விருதுநகர் இளைஞரின் ‘வாவ்’ கண்டுபிடிப்பு

தலை வாழை இலை கூட பேப்பரிலும் பிளாஸ்டிக்கிலும் வந்துவிட்டது. ''ஒரிஜினல் இலை வேணும்னா தினம் தினம் ஃப்ரெஷ்ஷா வாங்கணும் சார்... ஒரு நாள் கூட வச்சி பயன்படுத்த முடியாது. பேப்பர்தான் வசதி’’ என்கிறது இளைய தலைமுறை. ஆனால், அதே வாழை இலை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் பள்ளி மாணவரான டெனித் ஆதித்யா. இவர் கண்டுபிடித்திருக்கும் புதிய தொழில்நுட்பம், வாழை இலையை மூன்று ஆண்டுகள் வரை உலர்ந்து போகாமல் பாதுகாக்குமாம்!

இதற்காக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இரண்டு ‘தங்க’ப் பதக்கங்கள் வாங்கி வந்திருக்கும் ஆதித்யாவைச் சந்தித்தோம்...‘‘எனக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு. அப்பா மாவேல்ராஜன் பிசினஸ் பண்றார். அம்மா ஆக்னலின் டீச்சர். ரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு சயின்ஸ் மேல ஒரு ஆர்வம். பெரிய விஞ்ஞானியா வரணும்னு ஆசைப்பட்டேன். மூணாவது படிக்கும்போதே கம்ப்யூட்டர் புரோகிராம் படிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அதுல, 5 விளையாட்டு சாஃப்ட்வேர்களை உருவாக்கினேன். ஒரு கம்ப்யூட்டர்ல அதிக நேரம் இயங்கக்கூடிய சாஃப்ட்வேர் ஒண்ணை உருவாக்கி கின்னஸுக்கு அனுப்பினேன். 570 வருஷம் இயங்கும்னு சொன்னதும், ‘அவ்வளவு வருஷக்கணக்கை செக் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. இப்ப அதையே 4 வருஷமா மாத்தியிருக்கேன்’’ என்கிற ஆதித்யாவின் அறிவியல் மூளை மெல்ல சுற்றுச்சூழல் பக்கம் திரும்பியிருக்கிறது.

‘‘பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர் பொருட்கள் எல்லாமே இயற்கைக்கு நஷ்டம்தான். அதுக்கு மாற்றா நம்ம பாரம்பரிய வாழை இலையைப் பயன்படுத்தினா என்னன்னு தோணுச்சு. மறுநாளே வாடிப் போகாமல், பேப்பர் மாதிரி அதை நிரந்தரமான பொருளா ஆக்க முயற்சி பண்ணினேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பிச்ச வேலை அஞ்சு வருஷம் கழிச்சு முடிஞ்சது’’ என்கிறவர், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த கையோடு அமெரிக்காவில் நடந்த ‘ஐ ஸ்வீப்’ என்ற கண்காட்சிக்குப் போயிருக்கிறார்.

588 கண்டுபிடிப்புகள் கலந்துகொண்ட அந்தக் கண்காட்சியில் இவர் பெற்றது தங்கப் பதக்கம். அதற்கு முன்பே இந்திய அறிவியல் கழகமும் 47 பேர் கலந்துகொண்ட போட்டியில் இந்தக் கண்டுபிடிப்புக்கு தங்கப் பதக்கம் தந்து கௌரவித்திருக்கிறது. ‘‘வாழை இலையைப் பதப்படுத்துறதுல நிறைய நிலைகள் இருக்கு. முதல்ல இலையோட உட்சுவரை பெருசாக்கி, அதில் இருக்கிற செல் உறுப்புகளை அழிச்சு, அதிக வெப்பத்தை தாங்குற மாதிரி மாத்தினேன். அதாவது, 222 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை இது ஒண்ணும் ஆகாது.

அதே மாதிரி மைனஸ் 32 டிகிரி வரை போனாலும் இலை அப்படியே இருக்கும். அடுத்து இதுல அதிக பாரத்தைத் தாங்குற தொழில்நுட்பத்தைப் புகுத்தினேன். பிறகு இலைகள்ல உள்ள நுண்ணுயிரிகளை அழிச்சி, அவை எதுவும் திரும்ப வராத மாதிரி பண்ணினேன். கடைசியா, அல்ட்ரா வயலட் கதிர்களால பாதுகாப்பானதா ஆக்கினேன். தனித்தனியான தொழில்நுட்பமா இருக்குற இதையெல்லாம் இணைச்சி, ஒரே கருவியில எல்லா ப்ராசஸும் நடக்குற மாதிரி பண்ணணும். அந்த முயற்சியில தான் இருக்கேன்’’ என்கிற ஆதித்யா, இந்த வாழை இலை வருங்காலத்தை எப்படியெல்லாம் மாற்றக் கூடும் என்பதையும் பட்டியலிடுகிறார்...

‘‘இந்த வாழை இலை முதல் ஒரு வருஷம் வரைக்கும் நேத்து பறிச்ச மாதிரியே பசுமை மாறாம இருக்கும். இது சாதாரண இலையை விட உறுதியானது. இந்த வாழை இலையில் காபி குடிக்கிற கப்கள் தயாரிக்கலாம். தட்டு செய்யலாம். போஸ்டல் கவர் பண்ணலாம். சின்னதா பைகள் செய்ய முடியும். டேப்லெட், செல்போன் வைக்கிற கவர் கூட செய்யலாம். இதனால, பிளாஸ்டிக், பேப்பர் பயன்பாடுகளை கணிசமா குறைச்சிரலாம்.

 பயன்படுத்தின பிறகு எளிதா மக்கக்கூடிய பொருள் இது. இதனால, சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வராது’’ - பெரிய சயின்டிஸ்ட் போல கனவுகளோடு பேசி முடிக்கும் ஆதித்யா, இந்த வருடம்தான் +2 செல்ல இருக்கிறார். ‘‘இந்தக் கண்டுபிடிப்பால வெளிநாடுகள்ல எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைச்சுது. அங்கே சில பல்கலைக்கழகங்களில் படிக்க ஸ்காலர்ஷிப்பும் கொடுத்திருக்காங்க. ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் படிச்சுட்டு, ‘இஸ்ரோ’வுல சிறந்த சயின்டிஸ்ட்டா ஆகணும். இதுதான் என் லட்சியம்’’ என்கிறார் ஆதித்யா உறுதி யான குரலில்.

இந்த வாழை இலையில் காபி குடிக்கிற கப்கள் தயாரிக்கலாம். தட்டு செய்யலாம். போஸ்டல் கவர் பண்ணலாம். டேப்லெட், செல்போன் வைக்கிற கவர் கூட செய்யலாம்.

 பேராச்சி கண்ணன்