ஷாம்பூ விளம்பரத்துக்காக நடிகை தேவிஸ்ரீயை ஒப்பந்தம் செய்ய வந்தார்கள். ‘‘மேடம் இப்ப இந்த மாதிரி சின்ன ப்ராஜெக்டெல்லாம் பண்றதில்ல’’ என தடுத்தான் மேனேஜர் ராம். கேட்கவில்லை. தேவிஸ்ரீயை நேரில் சந்தித்துப் பேசினார்கள். வழக்கத்துக்கு மாறாக எந்தக் கண்டிஷனும் இல்லாமல், அவர்களுக்குக் கால்ஷீட் கொடுத்தாள் தேவிஸ்ரீ. ஆச்சரியமாகிப் போனான் ராம்.
‘‘சினிமாவில் ஒரு நல்ல இடத்தை நீங்க பிடிச்சாச்சு. இனியும் விளம்பரப் படமெல்லாம் தேவையா? அதுவும் இவ்வளவு குறைந்த சம்பளத்துக்கு?’’ - தேவிஸ்ரீயிடமே கேட்டான்.
‘‘ஒரு வருஷத்துக்கு முன்னாடி சினிமாவில் கொடி கட்டிப் பறந்த கமலதாரா, ஒரு ஷாம்பூ விளம்பரத்தில் நடிக்க மறுத்துட்டாங்க. அந்த சான்ஸ் என் சொந்தக்காரர் மூலம் எனக்குக் கிடைச்சுது. அது பிரபலமாகித்தான் எனக்கு சினிமா சான்ஸும் வந்தது. நான் நடிக்க வந்த பிறகு, கமலதாரா மார்க்கெட் டவுன். இப்போ இந்த விளம்பரத்துல நான் நடிக்கலைன்னா வேறு எவளாவது அதில் நடிச்சு, அவ சினிமாவில் நுழைஞ்சு, என் மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்தால் என்ன செய்யறது? எல்லாம் ஒரு தற்காப்புதான்’’ - சொல்லிவிட்டு அர்த்தபுஷ்டியாகச் சிரித்தாள் தேவிஸ்ரீ.
வி.சிவாஜி