மனக்குறை நீக்கும் மகான்கள்



எஸ்.ஆர்.செந்தில்குமார்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

தலைப்பிரசவம் தாய் வீட்டில் நடப்பதுதானே வழக்கம். செங்கமலத்தம்மாளை ராமேஸ்வரத்துக்கு - அவர் தாய் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். பிரசவத்திற்கான காலத்தைக் கணித்துச் சொன்னாள் மருத்துவச்சி. பிறக்கப் போகும் குழந்தையின் திருமுகத்தைப் பார்க்க அந்தக் குடும்பம் மட்டுமா காத்திருந்தது? நாடும்தான்... நாமும்தான்!

அந்தப் பொன் பொழுதும் வந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை. 1848ம் ஆண்டு. (1848 முதல் 1852க்குள் ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை என்கிற கருத்தும் உண்டு) அன்றைய விடியலில் குதூகலம் பூத்தது. பூமியில் பல நல்ல சகுனங்கள் தெரிந்தன. பறவைகளின் குரலோசையில் மிதமிஞ்சிய மகிழ்ச்சி.

பசுக்கள் வழக்கத்திற்கு அதிகமாக பால் சுரந்தன. ராமேஸ்வரம் ராமநாதேஸ்வரர் கருவறையில் எதிரொலித்த வேத கோஷம், காற்றில் மிதந்து அந்தப் பிரதேசமெங்கும் ‘மங்கலம் நிறையட்டும்... மங்கலம் நிறையட்டும்’ என்று சொன்னது. கிழக்கே சூரியன் தன் பொன்னிறக் கிரணங்களை புவியில் செலுத்த ஆயத்தமான தருணத்தில் செங்கமத்தம்மாள் பிரசவ வலி எடுத்து வீறிட்டாள். வயிற்றில் சுமந்தவளுக்கு அதிகம் சிரமம் கொடுக்காது, குமரக் கடவுளின் பூரண அருள் பெற்ற அந்தக் கரு ஆண் குழந்தையாய் அவதரித்தது. குழந்தை வீறிட்டு அழுதபோது வீடே சிரிப்பொலி யால் நிறைந்தது.

சாத்தப்ப பிள்ளைக்குத் தலை கால் புரியவில்லை. ‘குழந்தை எப்படி இருக்கிறான்? பெற்றவள் எப்படி இருக்கிறாள்?’ அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அறைக்குள் ஓடிச் சென்றார். குழந்தையின் மெல்லிய பாதங்களை ஒற்றை விரலால் தொட்டார். குழந்தை மெல்ல அசைந்தான். சிணுங்கலாய் சப்தமெழுப்பினான். ஒரு பூவை எடுத்துக் கொடுப்பது போல சாத்தப்ப பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்தார்கள். பதமாய் வாங்கியவர், குழந்தையின் உச்சி முகர்ந்தார். விரலால் தேன் தொட்டு குழந்தையின் நாவில் தடவினார். குழந்தை கண்களை இடுக்கிக் கொண்டு சுவைத்தான்.

சாத்தப்ப பிள்ளையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். இருக்காதா பின்னே... சுகப்பிரசவமாய் அமைய வேண்டுமே என எத்தனை கடவுள்களை வேண்டிக் கொண்டார்! மனைவியை நன்றியோடு பார்த்தார். நெற்றியை வருடிக் கொடுத்தார். இருவரின் உள்ளமும் வார்த்தையில்லாமல் பேசிக்கொண்டன. அந்த பரிபாஷையில் புதிய வரவின் பெருமிதம் ததும்பி வழிந்தது. ஒரு மௌனம், அந்தத் தருணத்தில் ஆனந்த யாழை மீட்டியது.

குழந்தை பிறந்த மங்களச் செய்தியை உறவுகளுக்கெல்லாம் சொல்லி அனுப்பினார் சாத்தப்ப பிள்ளை. ஊருக்கே இனிப்பு கொடுத்து சந்தோஷப்பட்டார். ‘சிங்கத்த பெத்திருக்க... கொடுத்து வெச்சவன்பா நீ’ என ஊரே வாழ்த்தியது. அவருக்கு கால் பூமியில் இல்லை. ஒருநாள் மதியப் பொழுதில் மாமனார் வீட்டுக் கூடத்தில் விவாதம் ஆரம்பமானது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
‘‘ராமேஸ்வரன் சாமியோட பெயரையே வச்சிட வேண்டியது தான்.’’

‘‘எங்க தாத்தா பெயரை வைக்கலாமா?’’
‘‘புதுசா ஏதாவது சொல்லுங்களேன்.’’
- புதிது புதிதாய் யோசனைகளும் மறுப்புகளும் வந்து வந்து போயின.
‘‘அப்பாவுன்னு வச்சிடலாம்.’’

‘‘அப்பாவு... அப்பாவுன்னா..?’’
‘‘தந்தைக்கும் இறைவன்னு அர்த்தம். பையன் வெள்ளிக்கிழமை பிறந்திருக்கான். முருகனுக்கு உகந்த கிழமை. அதனால இந்தப் பெயர் சரிதான்’’ - சகலரும் சம்மதிக்க பெயர் சூட்டும் விழாவுக்கு வீடு தயாரானது.

உறவுகளெல்லாம் சூழ்ந்திருக்க பெயர் சூட்டும் சடங்கில் சாத்தப்ப பிள்ளை, ‘‘அப்பாவு... அப்பாவு... அப்பாவு’’ என மூன்று முறை குழந்தையை வாய் நிறைய அழைத்தார். குழந்தை சிரித்தான். உறவுகள் எல்லாம் ஒரே குரலாய், ‘‘அப்பாவு நீடூழி வாழட்டும்’’ என்று வாழ்த்தினார்கள். அப்புறமென்ன... விருந்து அமர்க்களப்பட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து ராமேஸ்வரத்திலிருந்து மனைவி, குழந்தையோடு பாம்பனுக்கு திரும்பினார் சாத்தப்ப பிள்ளை. குழந்தை வந்த நேரம் வியாபாரம் ஜோராய் சூடு பிடித்தது. வசதி, வாய்ப்புகள் அதிகமானது. ‘அதிர்ஷ்டக் குழந்தை அப்பாவு’ என குடும்பமே கொண்டாடியது.

அப்பாவு வளர்ந்தான். தந்தையுடன் விரல் பிடித்து கோயிலுக்குச் சென்றான். சந்நதியில் மயில் மீது அமர்ந்து சிரிக்கும் பாலமுருகனின் திருவுருவைப் பார்த்து மெய் மறந்து சிலை போல நின்றான். அவனுக்கு சாப்பாடு ஊட்டும்போதெல்லாம் நாயன்மார்கள் கதையும் கந்தபுராண பெருமையும் சேர்த்து ஊட்டினார்கள். அதிலும் முருகனின் கதை கேட்பதென்றால் அப்பாவுக்கு ஏக குஷி.
அப்பாவு வளர வளர அவனது சுட்டித்தனமும் வளர்ந்தது.

‘‘இவனை பள்ளிக்கூடத்தில் சீக்கிரம் சேர்த்துடுங்க. அப்பதான் சரிப்படுவான்’’ என்றாள், செங்கமலத்தம்மாள். நல்ல நாள் பார்த்து, அருகில் இருந்த கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்கப்பட்டான் அப்பாவு. அங்கே தமிழோடு சேர்த்து ஆங்கிலமும் கற்றான்.இப்படி சாதாரணமாய் நகர்ந்து கொண்டிருந்த அப்பாவுவின் வாழ்வில் அவ்வப்போது அதிசயங்களும் நிகழ்ந்தன.
அன்று தீபாவளி. அதிகாலையிலே எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்துகொண்டான் அப்பாவு. அம்மா கொடுத்த இனிப்புகளைத் தின்றவனுக்கு கூடத்தில் பெட்டியில் இருந்த பட்டாசுகளின் ஞாபகம் வந்தது.

கூடத்திற்கு வந்தான். மாடத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் கீழே ஒரு மேசை. அந்த மேசையின் மேல் பனை ஓலைப் பெட்டி. அதில் இருக்கும் பட்டாசுகளை ஆவலோடு பார்த்தான். ‘அப்பா வந்தவுடன் மத்தாப்பு கொளுத்தலாம். அதுவரை சும்மா இரு... என் செல்லமில்ல’ என்று அம்மா சொன்னதை அந்த ஆவல் மறக்க வைத்தது. எட்டாத உயரத்தில் இருந்த பட்டாசுப் பெட்டியை எக்கி எடுக்க அப்பாவு முனைந்தபோது, விளக்கிலிருந்து சிந்திய எண்ணெய் ஒழுகலோடு சிறு பொறியும் தெறிக்க... பட்டாசுப் பெட்டி பற்றிக்கொண்டது. 

மத்தாப்பும் வெடியும் வெடித்துச் சிதறத் தொடங்கியபோது, ‘‘அப்பா... அப்பா...’’ எனக் குழந்தை அலறினான். சாத்தப்ப பிள்ளை ஓடி வருவதற்கு முன்பே முருகப் பெருமான் ஓடி வந்துவிட்டான். அந்த வெடிச் சத்தத்துக்கும் புகைக்கும் நடுவே ஒளியாய் ஊடுருவிய முருகனின் வேல், அப்பாவுவை கேடயமாய் நின்று காப்பாற்றியது.

பின்னர் பதை பதைக்க ஓடி வந்து சிறுவனைத் தூக்கினார் சாத்தப்ப பிள்ளை. ‘‘பையனை கவனிக்காம என்ன செய்யற நீ?’’ என மனைவியைக் கடிந்துகொண்டார். ‘‘நல்லவேளை... காயமேதும் இல்லை’’ என சமாதானமாகி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். அங்கே கந்தனின் வேல் வந்து காத்தது... சிறுவன் மட்டும் அறிந்த ரகசியம். அது மட்டுமா? அப்பாவுவை முருகன் எவ்வளவு பிரியமாய் கவனித்துக்கொண்டான் என்பதற்கு இன்னொரு சம்பவம்...

அன்று பள்ளிக்கூடம் விடுமுறை. கபித்தீர்த்தக் குளத்தில் நீச்சல் போட்டி நடத்த முடிவு செய்கிறார்கள் சிறுவர்கள். போட்டி தொடங்கியது. சிறுவர்கள் ஆர்வமாக போட்டி போட்டுக் கொண்டு நீந்துவதைப் பார்த்து கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தான், அப்பாவு. ஒரு முரட்டுச் சிறுவன் திடீரென அப்பாவுவை குளத்தில் தள்ளிவிட, நிலை தடுமாறி விழுந்தான்.

குளத்துப் படிக்கட்டில் அப்பாவுவின் தலை மோதி காயமாகிவிட்டது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சிறுபிள்ளைகள். ஏதும் அறியாதவர்கள். போகப் போக ரத்தக் கசிவும் அதிகமாகிறது. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் தவிக்கும் வேளையில், பாலமுருகனின் அருள் அப்பாவுவை காக்க ஓடி வந்தது. சுள்ளென அடித்த சூரியனை ஒரு மேகக் கூட்டம் நொடிப் பொழுது மறைக்க, அந்தத் துளி நேரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அடிபட்ட சுவடே இல்லாமல், தூங்கி எழுந்தவன் போல அப்பாவு எழுந்தான்.

காயத்தைக் காணவில்லை. ரத்தம் சிந்திய தடமும் இல்லை. நிகழ்ந்த அதிசயம் பார்த்து வாயடைத்து நின்றார்கள் சிறுவர்கள். கனவு கண்டோமோ என்கிற குழப்பமே வருகிறது. நாம் மேலே பார்த்த சம்பவங்கள் எல்லாம் கடலில் ஒரு துளி. அப்பாவு அதிசயக் குழந்தை என்பதை உலகம் அறிந்துகொள்ளச் செய்யும் ஒரு நாளும் வந்தது. அதுவும் ஒரு ஜோதிடன் வடிவில்...

மழலை வரம் தரும் வேர் குழவி வேட்கை!


டாக்டர் சிவகடாட்சம், இதயநோய் நிபுணர், சென்னை. ‘‘அது 1972ம் வருஷம். எங்க வீட்டுக்கு வந்த ஒரு முருக பக்தர், என்ன பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு அழைச்சிட்டுப் போனார். அன்று முதலே பாம்பன் சுவாமிகள் மேல ஒருவித ஈர்ப்பு உண்டாகிடுச்சு. தன் இடத்துக்கு வரும் யாரும் குறையோட திரும்பக் கூடாதுன்னு முருகன்கிட்ட வரம் வாங்கி இருக்கார் பாம்பன் சுவாமிகள். உடல் நலக்குறையோ, மனக்குறையோ... அவர் சந்நிதிக்கு போனதுமே அது சூரியனைக் கண்ட பனி மாதிரி மறைஞ்சிடும்.

1975ல் நான் டாக்டராகிட்டேன். ஆரம்பத்திலிருந்தே நோயாளிக்கு மருந்து எழுதறதுக்கு முன்னாடி பாம்பன் சுவாமியை மனசில் நினைச்சிக்கிட்டுத்தான் எழுதுவேன். 99 சதவீதம் நோய் குணமாகிடும். சுவாமிகள் பெரிய டாக்டர். 1987ல் எனக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில வேலை. என் சீனியர் டாக்டர் ஒருத்தருக்குக் கல்யாணமாகி, 17 வருஷமா குழந்தை இல்லை. விரக்தியில இருந்த அவர்கிட்ட ‘வேர் குழவி வேட்கை’ பாடலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அடுத்த 10வது மாசம் அவங்க வீட்ல மழலைக் குரல் கேட்டுச்சு.

என் மருமகள் கர்ப்பமா இருந்தாங்க. 2013 பிப்ரவரி 24ம் தேதி குழந்தை பிறந்துடும்னு நாள் குறிச்சாங்க. ஆனா, 14ம் தேதி வயிற்றிலேயே குழந்தை இறந்துடுச்சு. நானும் டாக்டர். என் மகனும் டாக்டர். என்ன பிரயோஜனம்? எல்லாம் விதி. ஒவ்வொரு ஜனவரி கடைசி வாரத்துலயும் எங்க தெருவுக்கு தேசிகர் கோயில் பெருமாள் பல்லக்கில் வருவார்.

அடுத்த வருஷம் அவரை பேரப்பிள்ளையோட தரிசிப்போம்னு வேண்டிக்கிட்டது ஞாபகம் வந்து, என் மனைவி மனசுடைஞ்சி அழுதா. என் மகனுக்காகவும் மகளுக்காகவும் மார்ச் மாசத்துல ‘வேர் குழவி வேட்கை’ படிச்சேன். 2014 ஜனவரி 8ம் தேதி என் மகனுக்கு குழந்தை பிறந்து, பெருமாளை பேரப் பிள்ளையோட தரிசிச்சோம். இது பாம்பன் சுவாமிகளோட பேரருள்.’’

(ஒளி பரவும்)