நடைவெளிப் பயணம்



அசோகமித்திரன்

ஒளியும் ஒலியும்

தமிழகத்துக்கு 1975ல் தொலைக்காட்சி வந்தது. எவ்வளவோ படித்தவர்கள், அயல் நாட்டிற்குச் சென்றவர்களுக்குக் கூட சொந்த நாட்டில் அந்த சாதனம் பற்றிப் புரிய நிறைய நாட்கள் வேண்டியிருந்தது. ஒளிபரப்பு முதலில் காலை சிறிது நேரம், மாலை சிறிது நேரம் என்றிருந்தது. இதில் பாதி டில்லி ஒளிபரப்பு.

 நாட்டில் அந்த சாதனம் ஆரம்ப நிலையில் இருந்தது. இந்தி திணிப்பு என்று எங்கெங்கோ ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்தன. அரசியல்வாதிகள் மட்டுமில்லை... கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் போனார். அதன் பிறகு எத்தனையோ ஊர்வலங்கள் நடத்தி விட்டார். இன்று நாள் முழுக்க தமிழ்தான். ஆனால் எவ்வளவு பேர் ஆதி அலைவரிசையாகிய தூர்தர்ஷனைப் பார்க்கிறார்கள்?

ஒவ்வொரு முறை அனந்தமூர்த்தி ஊர்வலம் போனபோதும், அடுத்த நாளே என்னை ஒரு பேரணி ஆர்வலர் உசுப்பிவிட்டு, ‘‘நீங்களும் ஊர்வலம் போக வேண்டும்’’ என்பார். அவர் எல்லாக் கட்சி அரசுகளிலும் உயர் உத்தியோகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரம் அனுபவித்து, பென்ஷன் வாங்க ஆரம்பித்தவுடன் ஓர் இலக்கியத் தலைவர் ஆகி விட்டார்! அனந்த மூர்த்தி ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் அளவுக்கு உயர்ந்து விட்டார். கர்நாடக அரசு அவருக்குப் பெங்களூருவில் வீடே கொடுத்திருக்கிறது என்பார்கள். நான் எலும்பு முறிந்து நடக்க முடியாது வெறும் எழுத்தாளனாகத் திண்டாடும்போது, எனக்குச் சம்பந்தமே இல்லாததற்கு கொடியேந்தி ஊர்வலம் ஏன் போகவேண்டும்!

எங்கள் குடும்பம் வரை தொலைக்காட்சி 1980க்கு மேல்தான் பரிச்சயம் ஆயிற்று. அது குட்டி (நிuபீபீவீ) தயவால். குட்டி ஏதோ ராணியல்ல. இரண்டு வயதுக் குழந்தை. அப்போது கடும் தண்ணீர்ப் பஞ்சம். குட்டியின் அம்மா எப்போதும் ஒரு குடத்தைத் தூக்கிக்கொண்டு தண்ணீருக்கு அலைவாள். அந்த வீடு மிகவும் சிறியது. பத்துக்குப் பத்து அடியில் ஓர் அறை. ஒரு குட்டிச் சமையலறை. குட்டியின் அப்பா ஒரு வட இந்திய வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருந்தார்.

அதிகாலையிலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் போய் விடுவார். ஒரு கூடை வெற்றிலை பெற்றுக்கொண்டு தி.நகர் பாண்டி பஜாரில் அவருடைய கடைக்குச் சென்று விடுவார். வீட்டில் என்ன சமையல், அதற்கு வேண்டிய பாத்திரங்கள் உண்டா... எதுவும் தெரியாது.

எப்படியோ எங்கள் தெருவில் அவர் வீட்டில்தான் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வந்து சேர்ந்தது. அது அவர் வாங்காமல் ஏதோ நடிகர் வெற்றிலை பாக்கு பாக்கிக்காகக் கொடுத்திருக்கலாம். ஒரு காலத்தில் பாண்டி பஜார் சினிமாக்காரர்கள் கடன் வாங்குவது, கொடுப்பதற்குப் பெயர் பெற்றது. குட்டி வீட்டினது ஒரு சிறிய பெட்டி என்றாலும், ஏதோ நிழலாக நகரும் உருவங்கள் தெரியும். அந்த மனிதனோ அவன் மனைவியோ ஒரு நாள் கூட ஏதாவது நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் அந்தச் சிறிய அறையில் நாங்கள் நாற்பது பேர் முண்டியடித்துக் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், புதன் மாலை ஐந்து மணிக்கு உட்கார்ந்து விடுவோம்.

(வெள்ளி, திங்கள், புதன் - ஒளியும் ஒலியும். சனி, ஞாயிறு - திரைப்படம்.) எட்டு மணிக்குச் செய்திகள் என்ற அறிவிப்பு வந்த உடனே அறை காலியாகி விடும். எட்டு மணி வரை அந்த வீடு குட்டி குடும்பத்தினுடையது அல்ல. ஒரு முறை ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது குட்டியின் அப்பா வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ‘‘உங்களுக்கு இடமில்லை. வேறு இடம் போங்கள்’’ என்றிருக்கிறார். எனக்கே குட்டியின் அப்பாவை அடையாளம் தெரியாது. 

இன்னொரு ‘ஒளியும் ஒலியும்’ இருக்கிறது. அதில் தொழில்நுட்பத்துடன் மனித ஆற்றலும் தேவைப்படுவது. நான் தஞ்சாவூர், மதுரை சென்று பார்த்ததில்லை. ஆனால் ஐதராபாத் ஒரு முறை சென்றபோது கோல்கொண்டா கோட்டையில் ‘ஒளியும் ஒலியும்’ காட்சி கண்டேன். அப்போது தான் வரலாற்று அறிவோடு கூட, அதை ஒரு கதையாகவும் சொல்லத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

எனக்குப் பள்ளிக்கூடத்தில் கிடைத்த வரலாற்று ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் சிறந்தவர்கள். அதில் சௌந்தரராஜன் என்ற ஆசிரியர், வகுப்பில் தூங்குவார். அவர் முகம் சிவந்திருக்குமாதலால் நாங்கள் அவருக்கு ‘சோல்ஜர்’ என்று பெயரிட்டோம். அது இரண்டாம் உலகப் போர்க் காலம். ஞாயிறு, புதன்களில் ராணுவ வீரர்கள் நிறையவே கண்ணில் படுவார்கள். நான் பள்ளிக்குப் போகும் வழியில் ‘மேஃபேர்’ என்ற பெயர்ப்பலகை இருக்கும். வெளி கேட்கள்தான் தெரியும். அது வெள்ளைக்காரர்கள் பொழுது போக்குமிடம் என்பார்கள். வெள்ளைக்காரர்கள் பொழுதுபோக்குமிடம் என்றால் குடி இல்லாமல் இருக்குமா? எங்கள் வரலாறு வகுப்பு சோல்ஜர் அங்கு போய்விட்டு வருபவர் என்பார்கள்.

இன்றும் தூங்குவார் என்று நினைத்த நாளில் அவர் அரை மணி ஓர் உரை நிகழ்த்துவார். வரலாறு நூலில் நூறு பக்கங்கள் முடிந்து விடும். நாங்கள் வரலாறு புத்தகத்தையே தொட மாட்டோம். சோல்ஜர் நடத்திய உரைகளே போதும். ஏனோ என் வகுப்புக்கு பிரிட்டிஷ் பிரிவு நடக்கவே இல்லை. இது நடந்திருந்தால் கல்கத்தா விக்டோரியா மண்டப ‘ஒளியும் ஒலியும்’ இன்னமும் தீவிர அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் கோல்கொண்டா ‘ஒளியும் ஒலியும்’ காட்சி மிகவும் விசேஷமாக இருந்தது. கோல்கொண்டா எனக்குப் பரிச்சயமானது என்பதுடன், இன்னொரு முக்கிய காரணம் அமிதாப் பச்சனின் குரலில் வர்ணனை.

பச்சனின் குரல் அவருடைய நாபியிலிருந்து வருகிறது என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். தமிழ் நாட்டில் எனக்குத் தெரிந்து இந்த நாபி பழக்கமில்லை. இதை யோகம் சாத்தியமாக்கும் என்றாலும், எல்லா யோகாசிரியர்களுக்கும் இது சித்திப்பதில்லை. உதாரணத்திற்கு, பாபா ராம்தேவ். அவர் எல்லா ஆசனங்களையும் சிறப்பாகச் செய்கிறார். ஆனால் குரல் மிகவும் பலவீனமானது. ஏதோவொரு சமயத்தில் ரஜினியிடம் வெளிப்பட்டாலும், அது போதவே போதாது.

எங்கள் சோல்ஜர் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உரை நிகழ்த்தியதை, அமிதாப் பச்சனின் ‘ஒளியும் ஒலியும்’ வர்ணனை நினைவுபடுத்தியது. வரலாறு என்று நாம் அறிவதெல்லாம் உண்மையல்ல என்ற நினைப்பும் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வரலாறு என்பதே பெரும்பாலோர் நம்பும் கட்டுக்கதை. கோல்கொண்டா வர்ணனை ஔரங்கசீப் ஏமாற்றுக்காரன் என்ற எண்ணத்தை உண்டு பண்ணும். அவனுடைய கொடூர நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்த பிறகும் கோல்கொண்டா சுல்தானை சிறையில் அடைத்து அவன் வம்சத்தையே அழித்தான். ஆனால் இதே ஔரங்கசீப்பிடம்தான் நிறைய இந்து தளபதிகள் இருந்தார்கள். நிறைய நிலச்சுவான்தார்கள் இருந்தார்கள்! அரசன் என்று பார்த்தால் எல்லா அரசர்களும் ஏதாவது சில அல்லது பல தருணங்களில் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சோல்ஜர் மாதிரி ஆசிரியர்கள் தேவை. வரலாறு என்று எதையோ அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், சிந்திக்கவும் வைப்பவர்கள் வரலாற்றை விட முக்கியமானவர்கள்.

வரலாறு என்று நாம் அறிவதெல்லாம் உண்மையல்ல என்ற நினைப்பும் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். வரலாறு என்பதே பெரும்பாலோர் நம்பும் கட்டுக்கதை.

படிக்க...

தடித்தடி புத்தகங்கள் களைப்பூட்டுகின்றன. ஆனால் அவற்றின் சாராம்சத்தைச் சிறு நூல்களில் தந்து விட முடியும். இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள். முதல் நூல் ஆழி பதிப்பகம் வெளியிட்ட ‘எமிலிக்காக ரோஜா’. சிறு பத்திரிகைகள் நன்கறிந்த சா.தேவதாஸ் இதைத் தொகுத்திருக்கிறார். ஆண்டன் செகாவ், வில்லியம் ஃபாக்னெர், ரேமண்ட் கார்வர் என மிகச் சிறந்த படைப்பாளிகளின் தொகுப்பு. ஆசிரியர்கள் பற்றித் தகவல்களும் உள்ளன. தொகுப்பு நூல் என்றால் நான்கைந்து கதைகளை ஒரு மூட்டையாகத் தரையில் போடாமல், அக்கறையுடன் வெளியிடப்பட்ட நூல்.

இரண்டாவது, நிழல் வெளியீடாக வந்திருக்கும், ‘இந்த நகரத்தில் திருடர்களே இல்லை’. ராஜகோபால் மொழிபெயர்த்துத் தொகுத்த லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள். தேர்வும் மொழிபெயர்ப்பும் சிறந்த இலக்கிய ரசனையைக் காட்டுகின்றன. அனைத்திலும் விசேஷமானது இறுதியில் உள்ள கட்டுரை. கேபிரியேல் கார்ஷியா மார்க்வெஸ் எழுதிய ‘பாரிஸில் ஹெமிங்வேயைச் சந்தித்தேன்.’

(பாதை நீளும்...)