அதிகப்பிரசங்கித்தனம் இல்லாத பசங்க!



களமிறங்கும் இன்னொரு பெண் இயக்குனர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஹலிதா ஷமீம். யெஸ்! தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் இன்னொரு பெண் இயக்குனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரிக்கும் ‘பூவரசம் பீப்பி’ படம் ஹலிதாவின் பெருமைக்குரிய விசிட்டிங் கார்டு. படத்தின் ஸ்டில்களே எதிர்பார்ப்பை ஏற்
படுத்த, அவரிடம் பேசினோம்.

‘‘கோடை விடுமுறையில் பசங்களோட உலகம் எப்படி இருக்கு? அதைப் பதிவு செய்யும் படம் இது. கடைசி நாள் பரீட்சையில் தொடங்கி பள்ளி திறக்கும் முதல் நாள் வரைதான் கதை. ஒரு கொலையும், அதைச் சின்னப் பசங்க கண்டுபிடிப்பதும்தான் கதையின் பிரதானம். இதற்கு நடுவே அந்தச் சின்னஞ்சிறு மனிதர்களின் உணர்வுகள், வளர்ச்சி, எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் கேள்விகள் என சுவாரஸ்யங்கள் விரியும்!’’‘‘டைட்டிலே கதைக்களம் கிராமம் என்கிறதே?’’

‘‘கதைக்களம் இதுதான் என எந்த ஊரையும் அடையாளம் காட்டவில்லை. நேட்டிவிட்டி என வட்டார மொழிகள் பக்கமும் தாவவில்லை. ஆறு, மலையடிவாரம் சார்ந்த சின்ன நகரத்தில் நடக்கும் கதை. எந்த நாட்டினர் பார்த்தாலும், அவங்க ஏரியா கதையாகவே பார்க்கத் தோன்றும். ஏன்னா, இந்தக் கதையை தமிழ் சார்ந்த விஷயமாக சுருக்கிக்க விரும்பலை. திரைப்பட விழாக்களில் நிறைய படங்கள் பார்த்த அனுபவம்... அதே உணர்வை தமிழ் ரசிகர்களும் பெறும் எண்ணத்திலேயே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன்!’’

‘‘பசங்க படம்னாலே அவங்களுக்கும் ஒரு லவ் டிராக் வைப்பாங்களே... இதில் எப்படி?’’ ‘‘நோ... வயசுக்கு மீறி துருத்திக்கிட்டு நிற்கும் காதல் இதில் இருக்காது. கதைப்படி படத்தில் ஒரு பையனுக்கு காதல் வரும். ஆனால், இந்த வயதில் இது தவறு என்று அவன் உணர்ந்துகொள்வது போன்ற காட்சி இருக்குமே தவிர, ‘ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்...’ என்பது மாதிரியான பாடல் இருக்காது. அதே போல் சிறுவர்களுக்கான ஹீரோயிசம் இருக்குமே தவிர, அதிகப் பிரசங்கித்தனமாகவோ, தவறான கோணத்திலோ அது வராது. மதுரை, சோழவந்தானை சேர்ந்த கௌரவ் காளை, பிரவீன் கிஷோர், ‘ஆரண்யகாண்டம்’ படத்தில் கொடுக்காப்புளி கேரக்டரில் நடித்த வசந்த்... இவங்கதான் படத்தின் மெயின் கேரக்டர்கள். ‘தெகிடி’ காளி இதில் வில்லனா பண்றார். அப்புறம் சமுத்திரக்கனி சார் சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார்...’’

‘‘மனோஜ் பரமஹம்சா எப்படி இதைத் தயாரிக்க நேர்ந்தது?’’‘‘ஒளிப்பதிவாளரா எனக்கு அறிமுகமாகி தயாரிப்பாளரா எனக்கு பாலமிட்டுக் கொடுத்திருக்கார். படத்தைத் தயாரிப்பது என்று முடிவான அடுத்த நொடியே இன்டர்நெட்டில் ‘ரெட் கார்னர்’ என்கிற கேமராவை ஆர்டர் பண்ணி, ‘நானே ஒளிப்பதிவும் செய்யுறேன்’ என்று படத்தின் வேலைகளை பரபரப்பா தொடங்கிட்டார். தெலுங்கில் ‘ரேஸ் குர்ரம்’ ஷூட்டிங் முடிஞ்சு திரும்பியதிலிருந்து அவர் கவனம் முழுக்க ‘பூவரசம் பீப்பி’யிலேயே இருக்கிறது. இந்தப் படத்திலும் அவருடைய பிரமாதமான போட்டோகிராபியை பார்க்கலாம்.

இதில் டெக்னிகலாக இன்னொரு ஸ்பெஷல், அருள்தீப்பின் இசை. பின்னணி இசையில் புதிய ஒலியை ஆடியன்ஸ் கேட்கணும் என்பதற்காவே ஹங்கேரி கலைஞர்கள் வாசிக்கும் ஹேங் டிரம்ஸ், ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் வாசிக்கும் ஒரு இசைக் கருவி என புதுசு புதுசா தேடிக் கொண்டு வந்திருக்கார். அந்த இசைக்கருவிகளில் ஒலி கூடுதல் மிரட்டலா வந்திருக்கு!’’ ‘‘நீங்க சினிமாவுக்கு வந்த கதை?’’

‘‘தர்மபுரிதான் எனக்கு சொந்த ஊர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே கதைங்கற பெயரில் ஏதோ ஒன்றை எழுதி சென்னைக்கு கிளம்பிக்கிட்டிருந்த அம்மாகிட்ட கொடுத்து, ‘இதை டைரக்டர் ஷங்கர்கிட்ட கொடுத்துடுங்க. அவர் படமா எடுத்துடுவார்’னு விளையாட்டா சொல்லியிருக்கேன். மணிரத்னம் படங்கள்தான் எனக்குள்ள சினிமா ஆர்வத்தை விதைச்சது. +2 முடிச்ச கையோடு உதவி இயக்குனராகணும்னு முடிவு செய்தேன்.

சமுத்திரக்கனி சார் இயக்கிய ‘நெறஞ்ச மனசு’ படத்தில் ஒர்க் பண்ணினேன். அப்புறம் புஷ்கர் காயத்ரி இயக்கிய படங்கள், திரும்ப சமுத்திரக்கனி சாரோட ‘நாடோடிகள்’, மிஷ்கினின் ‘நந்தலாலா’ என உதவி இயக்குனராக அனுபவங்களை சேகரிச்சுக்கிட்டு, இப்போ இயக்குனராகிவிட்டேன். ‘பூவரசம் பீப்பி’ எல்லோருக்கும் பிடிக்கும்படியா பண்ணியிருக்கேன்னு நம்புறேன். நல்லா இருந்தா வாழ்த்துங்க!’’

- அமலன்