விபரீதத் தாய்மை!
நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை, தினசரி வாழ்வில் நாம் பார்த்திராத ஒரு சம்பவத்தை, எங்கோ நடந்தாக பத்திரிகைகளில் படித்த ஒரு நிகழ்வை நம் வீடுகளில் சந்திக்க நேர்ந்தால் நம்முடைய எதிர்வினை எப்படி இருக்கும்? ஏதோ ஒரு வெளிநாட்டில், அறுபது வயது மூதாட்டி இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்’ என்ற செய்தியைப் படிக்கும்போது, நம்முள் ஒரு மெல்லிய புன்னகை உண்டாகலாம். சில பெண்கள் கூடி அதை பரிகாசம் செய்யலாம். ஆனால் அதுவே நம் வீடுகளில் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வோம்? ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படம் இதைப் பற்றித்தான் பேசுகிறது.
பொதுபுத்தி சிந்தனையிலிருந்து விலகி, புதிய தடத்தில் பயணிக்கும் எல்லா சிந்தனைகளும் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்படும். ஒன்றை ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கும், புறக்கணிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நாம் ஒருவரை புறக்கணிக்கும்போது, அவருக்கு ஏற்படும் வலியே, அவரது நெஞ்சுரத்தைக் கூட்டுகிறது. வாழ்ந்து காட்ட வேண்டிய வைராக்கியத்தையும் கொடுக்கிறது.
‘பெற்றோர்களை எப்படி அன்பாகப் பராமரிக்க வேண்டும்’ என்று தொலைக்காட்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் ராமலிங்கம். தன்னுடைய குடும்பத்தோடு உட்கார்ந்து அந்த நிகழ்ச்சியைப் பார்த்து பூரித்துப் போகிறார். தந்தை இறந்து சில மாதங்கள் ஆகிவிட, ஒரு மருத்துவ செக்கப்பிற்காக தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ராமலிங்கத்தை தனியே அழைக்கும் டாக்டர், அவரது தாய் பற்றி சில விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார். வீட்டிற்கு வரும் ராமலிங்கம், எல்லோரிடமும் எரிந்து விழுகிறார். செய்வதறியாது தவிக்கிறார். இந்த செய்தி அக்கம்பக்க வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? நம் குடும்ப கௌரவம் என்னாகும்? என்கிற கேள்விகள் அவரைத் துளைத்தெடுக்கின்றன.
‘‘என்னங்க, இன்னும் இரண்டு நாள்ல மருமகன் நம்ம வீட்டுக்கு வரப் போறாரு. அதுக்குள்ள உங்க அம்மாவ எங்கயாச்சும் கூட்டிப் போய் விட்டுடுங்க. இல்லேன்னா மாப்பிள்ள முகத்தில நாம முழிக்க முடியாது’’ என்கிற மனைவியின் வார்த்தைகள் அவர் மனதை அரித்தெடுக்கின்றன. தந்தை வீட்டிற்கு வந்திருக்கும் மகள், ‘‘பாட்டி எங்கேப்பா, ஆளையே காணோம்’’ என்று கேட்க, ராமலிங்கம் ஒரு அறையைக் காண்பிக்கிறார். உள்ளே நுழைந்து பார்க்கும் பேத்தி, அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.
அடுத்த நாள் மாப்பிள்ளை வருவதற்கு முன்னர், தாயைக் காரில் அழைத்துக்கொண்டு தன் தம்பி வீட்டிற்குச் செல்கிறார் ராமலிங்கம். தம்பியும் அம்மாவை பார்த்துக்கொள்ள மறுக்க, காரிலேயே அம்மாவை வைத்துக்கொண்டு நாள் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். மனித மனம்தான் எத்தனை மோசமானது! அற்பமான ஒரு முடிவை எடுக்கிறார் ராமலிங்கம். அது என்ன முடிவு? டாக்டர் அப்படி என்ன ரகசியத்தை ராமலிங்கத்திடம் சொல்லியிருப்பார்? ஏன் இவர்கள் இத்தனை தூரம் செய்வதறியாது திகைக்கிறார்கள்? ராமலிங்கத்தின் தாய் அப்படி என்ன தவறு செய்துவிட்டாள்? உள்ளத்தை உருக்கும் ஒரு காவியமாக இதைச் சொல்லி யிருக்கிறார் இயக்குனர் அகிரா நித்திலன்.
நல்ல படைப்புகள் எப்போதும், தான் சார்ந்த சமூகத்தின் போலித்தனமான சித்தாந்தங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கும். தனிமனித வாழ்க்கை, சமூகத்தின் போலியான சித்தாந்தங்களால் எப்படி சீரழிந்து போகிறது என்பது பற்றி இந்தப் படம் பேசுகிறது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உணர்ச்சிப் போராட்டங்களுக்கு இந்த சமூகம் என்ன மாதிரியான பதிலை வைத்திருக்கிறது என்று கேள்வியை எழுப்புகிறது. ஒரு ஆண் எழுபது, எண்பது வயதிலும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த பிள்ளையை சுமக்கும் பெண் நிச்சயம் முப்பது, முப்பத்தைந்து வயதிற்குள்தான் இருக்க வேண்டும் என்கிற வரையறை எத்தனை மோசமானது. ஒரு பெண், அவளால் இயலும் பட்சத்தில், அறுபது வயதில் ஒரு பிள்ளையை சுமந்தால் என்ன தவறு என்கிற போர்க்குணம்தான் இந்தப் படத்தின் மையம்.
திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி மிக முக்கியமானது. எந்த ஒரு காட்சியும் நெகிழித் தன்மையடையாமல், பார்வையாளனை எப்போதும் அடுத்த காட்சி நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். இப்படியான கதை சொல்லலுக்கு பெரிதும் உதவுவது ‘பேரலல் கட்’ என்கிற படத்தொகுப்பு முறை. இந்தக் குறும்படத்தில், மருத்துவரை சந்தித்து விட்டு வீட்டிற்கு வரும் மகனிடம் தாய் தொடர்ந்து ‘‘டாக்டர் என்னப்பா சொன் னாரு’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.
உடனே மருத்துவமனையில், மருத்துவரும் ராமலிங்கமும் பேசும் காட்சிகள் வரும். வீட்டிற்கு வந்தவுடன், ‘‘டாக்டர் அப்படி என்னதாங்க சொன்னார்’’ என்று மனைவி கேள்வி கேட்கும்போது, அடுத்த காட்சியில் மருத்துவர், ‘‘உங்க அம்மாவ இனிமேதான் நீங்க பத்திரமா பார்த்துக்கணும், அவங்க இப்ப கர்ப்பமா இருக்காங்க’’ என்பார். இந்த சம்பவங்களை நேரடியாக பார்வையாளனுக்குச் சொன்னால், அதில் எந்தவித ஈர்ப்பும் இருக்காது. தவிர, பேரலல் கட்ஷாட் முறையில் கதை சொல்லும்போது, பார்வையாளனுக்கு எந்த இடத்திலும் சுவாரசியம் குறையாமலும், பரபரப்பு குறையாமலும் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த குறும்படத்தில் உயிர்த் துடிப்புடன் கூடிய ஒரு காட்சி இருக்கிறது. ஒரு வெட்டவெளியில் காரை நிறுத்தி, தன் அம்மாவை நோக்கி, ‘‘ஒண்ணுக்கு போகணும்னா போயிட்டு வாங்க’’ என்று சொல்வார் மகன். மகன் தன்னை யாருமில்லாத இந்தக் காட்டில் விட்டுவிடவே வந்திருக்கிறார் என்பதை அறிந்த தாய், ‘‘ராமலிங்கம், என்ன விட்டுட்டு போகத்தானே இங்க கூட்டிட்டு வந்த, கொன்னுட்டுப் போக இல்லையே?’’ என்பார். தாயை வெட்டவெளியில் விட்டுவிட்டு, அவள் அருகே கொஞ்சம் பணக்கட்டுகளையும் வைத்துவிட்டு வருவார்.
இறுதிக் காட்சியில், பெற்றோர்களைப் பராமரிப்பது பற்றி மீண்டும் உரையாற்றி விட்டு தன்னுடைய காரை நோக்கி நகர்வார் அவர். அந்தப் பணக்கட்டு சுற்றிய ஒரு பிளாஸ்டிக் பையை, ஒரு குட்டிப் பெண் ராமலிங்கத்திடம் கொண்டுவந்து கொடுப்பாள். மனதுக்குள் பூக்கள் பூத்து, பட்டாம்பூச்சி சிறகடிக்கும் ஒரு உன்னத நிலையை, பார்வையாளன் மனதில் இந்தக் காட்சி ஏற்படுத்தியிருக்கும். ஏராளமான கேள்விகளையும், அந்த கேள்விகளுக்கான பதிலையும், பார்வை யாளனின் சிந்தனைக்கே விட்டு படம் நிறைவடையும். இந்த முடிவு, படத்துக்கு ஒரு காவியத் தன்மையைக் கொடுத்து, அதனை ஆகச்சிறந்த படைப்பாகவே நிலைத்திருக்கச் செய்கிறது.
(சித்திரங்கள் பேசும்...)
படம்: புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் இயக்கம்: அகிரா நித்திலன்
நேரம்: 11.47 நிமிடங்கள் ஒளிப்பதிவு: ஷங்கர் வெங்கட்
இசை: ஜஸ்டின் பிரபாகரன் படத்தொகுப்பு: ஜோமின் மேத்யூ
பார்க்க: www.youtube.com/watch?v=6CnoKiD9NE
ஒரு ஆண் எழுபது, எண்பது வயதிலும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த பிள்ளையை சுமக்கும் பெண் நிச்சயம் முப்பது, முப்பத்தைந்து வயதிற்குள்தான் இருக்க வேண்டுமா?
அர்த்தம் புரியாது!
‘‘சிறிய வயதில் அப்பா அம்மாவுடன் தூங்கும்போது, ‘போய் தாத்தா பாட்டிகூட தூங்குங்கப்பா’ என்று அப்பாவோ, அம்மாவோ குழந்தைகளிடம் சொல்வார்கள். அந்த வயதில் இதற்கு நமக்கு அர்த்தம் புரியாது. கோபம்தான் வரும். ஆனால் வளர்ந்து பெரியவர்களாகி, உலகமும் உணர்வுகளும் புரியும்போதுதான், அவர்களின் நியாயமான உணர்வுகளை நாம் எப்படி அழித்திருக்கிறோம் என்பது புரியும். இந்தப் புள்ளியிலிருந்துதான், இந்தக் குறும்படத்திற்கு திரைக்கதை எழுத ஆரம்பித்தேன்.
ஒரு நாளிதழில் ‘அறுபது வயதுப் பெண் ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்’ என்ற செய்தியை வாசித்தேன். அப்போது இந்தக் கதை முழுமை பெற்றது’’ என்கிறார் இந்தக் குறும்படத்தின் இயக்குனர் அகிரா நித்திலன். இந்தப் படத்துக்கு 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கிறது. அவரது நண்பர்களும், சில இயக்குனர்களும் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இன்னும் நிறைய விருதுகளையும் இந்தக் குறும்படம் நித்திலனுக்கு பெற்றுக்
கொடுத்துள்ளது.
தமிழ் ஸ்டுடியோ
அருண்