இந்த ஆண்டு பருவமழை பெய்யாதா?



அவன் சின்னப்பையன்தான். ஆனால் அவன் அட்டகாசம் உலகத்தையே மிரள வைக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்ட நாடுகளே கூட அந்தப் பையன் முன்பு தலைகவிழ்ந்து செய்வதறியாது நிற்கின்றன. இந்தியாவும்தான். அதிகாரிகள் கூடிப் பேசுகிறார்கள்.

ரிசர்வ் வங்கி கவர்னர் திணறுகிறார். திட்டக்குழு தடுமாறுகிறது. அந்தச் சின்னப்பையனால் பருவமழை பொய்த்து, நாட்டில் பஞ்சம் வந்து, விலைவாசி உயர்ந்து நாடே நிலைகுலைந்து போகும் என்று எல்லோரும் அஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு வலிமை மிக்க அந்த சின்னப் பையன் யார்..?

அவன் பெயர் எல்-நினோ! அவன் பிறப்பிடம் பசிபிக் பெருங்கடல். (எல்-நினோ என்ற ஸ்பெயின் வார்த்தைக்குத் தமிழில் ‘சின்னப்பையன்’ என்று பொருள்) உலகத்தின் தட்பவெப்பத்தை தீர்மானிப்பது இந்த சின்னப்பையனும் இவன் தங்கை லா-நினாவும்தான். (லா-நினா என்றால் சின்னப்பெண்!) எதிர்பாராத தருணத்தில் பெருமழையைக் கொட்டி அழிவை ஏற்படுத்துவது லா-நினா என்றால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் அழிவை ஏற்படுத்துவது எல்-நினோ.

மனிதர்கள் கோடு போட்டு எல்லைகளை வகுத்துக் கொண்டாலும் இயற்கையைப் பொறுத்தவரை அதற்கு உலகெங்கும் ஒரே வேர்தான். பசிபிக் கடலில் ஏற்படும் மாற்றம் நம் சென்னையைப் பாதிக்கும். வங்காள விரிகுடாவில் ஏற்படும் மாற்றம் சீனாவை வஞ்சிக்கும். எல்-நினோவும் லா-நினாவும் அப்படி பாதிப்பை உருவாக்கும் இயற்கை மாற்றங்கள்தான். இந்த ஆண்டு எல்-நினோ தாக்குதலுக்கு 70% வாய்ப்பிருப்பதாக சர்வதேச வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக இந்தியாவில் 60% மழைப்பொழிவு குறைந்துவிடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே தண்ணீர் பிரச்னையால் தடுமாறிவரும் நாம் இந்த விளைவை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை.

‘‘எல்-நினோ, லா-நினா இரண்டுமே கடலில் ஏற்படும் மாற்றங்கள். கடற்பரப்பில் எப்போதும் குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக்கும். அந்த வெப்பநிலைதான் மழையைத் தீர்மானிக்கும். தென் அமெரிக்காவின் பெரு, ஈக்வடார் நாட்டுப் பகுதிகளில் உள்ள பசிபிக் கடலில் சில சமயங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து விடுகிறது. இதனால் காற்றின் அழுத்தம் குறையும். அதேசமயம், இந்தியப் பெருங்கடலில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்.

இந்த அழுத்தம்தான் தென்மேற்கு பருவமழைக்கான காரணி. ஆனால், பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் தாழ்வுப்பகுதியை நிறைவு செய்வதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதியின் காற்றழுத்தம் அந்தப் பகுதி நோக்கிச் சென்றுவிட்டால், பருவமழையை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் போதிய மழை கிடைக்காது. இதுதான் எல்-நினோ விளைவு.

லா-நினா என்பது அப்படியே உல்டா. பசிபிக் பிராந்தியத்தின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து, காற்றழுத்தம் அதிகமாகி, அது இந்தியப் பெருங்கடலைச் சூழ்ந்து, இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துவிடும். கடந்த 20 வருடங்களில் எல்-நினோ  தாக்குதல் அதிகமாகி விட்டது. இதற்குக் காரணங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை. கடலுக்குள் ஏராளமான நீரோட்டங்கள் உண்டு. கங்கையைப் போல 10 மடங்கு பெரிதான நதிகள் எல்லாம் கடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த நதிகளின் வெப்பநிலை மாற்றத்தால் இவை ஏற்படலாம் என்பது யூகம்’’ என்கிறார், ‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய’த்தின் ‘கோஸ்டல் சிஸ்டம் ரிசர்ச்’ பிரிவு இயக்குனர் டாக்டர் வி.செல்வம்.

‘‘இப்போதைக்கு எல்-நினோ, லா-நினா தாக்குதல் எப்போது ஏற்படும் என்று கணிக்க மட்டுமே முடியும். தடுக்க முடியாது. அதற்குத் தகுந்தாற்போல முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பதே நம்மாலான செயல்...’’ என்கிறார் அவர். எல்-நினோவின் தாக்குதலால் இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடும் பஞ்சத்தை சந்திக்க நேரலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. மேலும் வெப்பம் அதிகமாகி கொள்ளை நோய்கள் பரவலாம். காடுகள் தீப்பிடிக்கலாம். உள்நாட்டு உற்பத்தி பாதிக்கும். விலைவாசி உயரும் ஆபத்து உண்டு என்கிறார்கள். எல்-நினோ தாக்குதல் நிறைவடைந்த சில மாதங்களிலேயே லா-நினா தாக்குதலுக்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.   இதில் தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?

‘‘இதுவரையிலான எல்-நினோ, லா-நினா விளைவுகளை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றே தோன்றுகிறது’’ என்கிற வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப், ‘‘தமிழகம், கர்நாடகா தவிர்த்து பிற மாநிலங்களில் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படலாம்’’ என்கிறார். ‘‘தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை மூலம் 40%, வடகிழக்கு பருவமழை மூலம் 60% தண்ணீர் கிடைக்கிறது. எல்-நினோ, தென்மேற்கு பருவமழையை மட்டுமே பாதிக்கும். இந்த பாதிப்பும் கூட ஜூன்-ஜூலையில் எல்-நினோ வந்தால்தான். ஆனால் அக்டோபர், நவம்பரில் வந்தால் நமக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது’’ என்கிறார் பிரதீப்.

இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘எல்-நினோ வருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இந்த ஆண்டு இதனால் இந்தியாவில் 60% மழை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கான பாதிப்புகள் பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. மே இறுதியில்தான் முழுமையான தகவல்கள் தெரிய வரும்’’ என்கிறார்கள். இன்னொரு வறட்சி ஆண்டை நாம் தாங்குவோமா?

வெ.நீலகண்டன்