அவன் ஆசை இதுதான்!
சிலரின் இழப்புக்குத்தான் நாடே சோகமாகும். மேஜர் முகுந்த் வரதராஜனின் இழப்பு அப்படிப்பட்டது. கடந்த வாரத்துக்கு முன்பு வரை இவர் யாரென்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால், காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளோடு நிகழ்ந்த மோதலில் அவர் உயிர்த் தியாகம் செய்தது நமக்காக எனும்போது, சகோதரனை இழந்த வலி நமக்குள். நமக்கே இப்படியென்றால் முகுந்த்தின் குடும்பம்?
தாம்பரம் சேலையூர் பகுதியில் சோகமே உருவாய்க் கிடக்கிறது அவரின் வீடு. இறுதிச் சடங்கு வரை, எல்லாம் முடிந்துவிட்டதென்றாலும் எந்நேரமும் அழுகையாய் மாறக் கூடிய விசும்பல் ஓயவில்லை அந்த வீட்டில். துவக்கத்தில் நம்மிடம் பேசும் தெம்போடு இருந்தவர் முகுந்தின் அப்பா வரதராஜன்தான்... ‘‘எனக்கு பூந்தமல்லி - ஆவடி பக்கத்துல பருத்திப்பட்டு கிராமம்தான் சொந்த ஊர். பேங்க்ல வேலை. ரெண்டு பொண்ணு... ஒரே ஒரு பையன்... அவன்தான் முகுந்த்’’ - துவக்கத்திலேயே துவண்டு மீள்கிறது வரதராஜனின் குரல்.
‘‘என் தங்கச்சிங்க ரெண்டு பேருக்குமே ராணுவத்துல வேலை பார்க்குற மாப்பிள்ளை அமைஞ்சாங்க. மாமாக்களைப் பார்த்துட்டு முகுந்துக்கும் அதே ஆர்வம். எனக்கு கேரளா டிரான்ஸ்பர் வந்தப்ப அவன் மூணாவது படிச்சிட்டிருந்தான். அந்த வயசிலேயே திருவனந்தபுரம் சைனிக் ஸ்கூல்ல சேர்ந்து அப்படியே ராணுவத்துக்குப் போகணும்னு கேட்டான். ஆனா, அப்படி சேர்த்துவிட முடியல. அதோட, அவன் ராணுவத்துக்குப் போறதுல என் மனைவிக்கும் இஷ்டமில்ல. ஒரே பையன் இல்லையா? ‘பையனைப் பக்கத்துலயே வச்சிக்க முடியாது, பிரிஞ்சிருக்கணும், அதெல்லாம் நமக்கு வேண்டாம்’னு எப்பவுமே சொல்லுவா. இப்படி ஒரேயடியா பிரிஞ்சிடுவான்னு...’’ - அதற்கு மேல் பேசி முடிக்க எந்த அப்பாவாலும் முடியாது. மொத்த வீடே உரத்த அழுகையில் மூழ்கிப் போகிறது அந்த நிமிடத்தில்!
பேச்சும் அழுகையுமாக தாய் கீதா தொடர்கிறார்... ‘‘அவங்க அத்தைங்க வாழ்க்கையைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கேன். அதெல்லாம் கஷ்டம். ஒவ்வொரு நிமிஷமும் பயந்துக்கிட்டே... டெலிபோன்ல வாழ்க்கை நடத்திக்கிட்டு... அப்பப்பா! ‘ராணுவத்துல சேர்றது சின்ன வயசு ஆசைதான். அது போகப் போக மறைஞ்சுடும்’னு நினைச்சேன். ஆனா, வளர வளர அவன்தான் எங்க மனசை மாத்தினான். மிலிட்டரி பரீட்சையை ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ணி அவன் ராணுவத்துக்குப் போனப்ப எனக்குப் பெருமையாவே இருந்துச்சு.
நாட்டுக்காக சேவை செய்யறதும் தியாகம் செய்யறதும் பெருமைன்னு நினைக்கிற அளவுக்கு எங்களைக் கொண்டு வந்துட்டான். அவன் சொன்னா எதுவும் சரியாத்தான் இருக்கும்னு நாங்க நம்புவோம். காலேஜ்ல கூடப் படிச்ச பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னான். அவன் மனசு கோணாம கட்டி வச்சோம். இப்ப குழந்தைக்கு மூணு வயசு... தாயும் பிள்ளையும் இப்ப நிர்க்
கதியா நிக்குது!’’ என அரற்றி சாய்கிறார் அவர்.
‘‘முகுந்த் எல்லார்கிட்டயும் நல்லா பழகுவான் சார். உறவுக்காரங்களைக் கூட அக்கறையா விசாரிப்பான். கூட கிரிக்கெட் ஆடுற பசங்கள்ல இருந்து, காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் வரைக்கும்... எல்லாரும் வீட்டுக்கு வருவாங்க. ஆனா, அவன் இறப்புக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து நாங்களே அசந்துட்டோம். எங்களுக்கு தெரிஞ்சதைத் தாண்டி எங்கெங்கயோ அவனுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருந்திருக்காங்க. எங்களை விட அதிகம் அழறாங்க.
‘கவலைப்படாதீங்கப்பா நாங்க இருக்கோம்’னு ஆறுதல் சொல்லிட்டுப் போறாங்க. நாடே இவனுக்கு மரியாதை பண்ணியிருக்கு. இதுக்குத்தான் அவன் ஆசைப்பட்டான் போல!’’ - துக்கம் தொண்டையை அடைக்கப் பேசி முடிக்கிறார் வரதராஜன். முகுந்தின் மூன்று வயதுக் குழந்தை ஏதும் புரியாமலே வீறிட்டு அழுகிறது! அந்த அழுகை மனதைப் பிசைகிறது.
- டி.ரஞ்சித்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்