வாயை மூடி பேசவும்



குளிர் போர்த்தியிருக்கும் ஒரு குட்டி நகரத்தில் இருக்கிறவர்களுக்கு இனிமேல் பேச இயலாமல் போகும் என்ற நிலை வந்தால் எப்படியிருக்கும்... என்ன நடக்கும்..? இப்படி ஃபேன்டஸியாய் காமெடி கலரில் சொல்லப்பட்டதே ‘வாய் மூடி பேசவும்’.

சொல்லில் வருவது பாதியா அல்லது சொற்களே தேவையில்லையா என்கிற ஆதி கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றிருக்கிறார்கள். படத்தின் பிற்பகுதியை ‘பேச்சற்ற’ படமாக ஆக்கியிருக்கும் பெரும் துணிவிற்கே டைரக்டர் பாலாஜி மோகனுக்கு சபாஷ் சொல்லலாம். ‘காதலில் சொதப்புவது எப்படி?’ என லேட்டஸ்ட் இளைஞர்களின் காதல் உலகத்தை தனித்துக் காட்டிய பாலாஜி மோகன், இதில் கையில் எடுத்திருப்பது சற்றே ரிஸ்க் காமெடி!

பிரச்னை இல்லாத ‘சேஃப்’ அறிமுகம் இதைவிட மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மானுக்குக் கிடைத்திருக்காது. கேரள வாடையே இல்லாமல் அழுத்தம் திருத்தமான தமிழில் பூரணமான ஹீரோ. அழகும் இளமையும் துடிப்புமாக அள்ளுகிறார் சல்மான். விற்பனைப் பிரதிநிதியாக வரும் அவர், தான் விற்பனைக்காகப் போகும் வீடுகளில் சின்னச் சின்னப் பிரச்னைகளை சமரசம் செய்து ஒட்டி விடும் பாங்கே அழகு. ஏற்கனவே மலையாளத்தில் வெளுத்துக் கட்டி பிரகாசிக்கும் தன்னம்பிக்கை அப்படியே முகத்தில் தெரிகிறது.

துடிதுடிப்பான கேரக்டர்கள் படம் முழுவதும் நிறைய. ‘ரோஜா’ மதுபாலா திரும்ப வந்திருக்கிறார். பாண்டியராஜன் ஹெல்த் மினிஸ்டராக வந்து போங்கு காட்டியே சிரிக்க வைக்கிறார். இறுக்கமான வினு சக்கரவர்த்தி... குடிகார சங்கத்தின் தலைவர் ரோபோ சங்கர், நடிகராக ஜான் விஜய் என வந்தாலும் தனித்தனியாகவே நிற்கிறார்கள். சிரிக்க முடிந்தாலும் ரோபோ சங்கர் ரோல், வலிந்து சேர்க்கப்பட்ட டிராக் போலவே ஆகிவிட்டது.

சல்மான்-நஸ்ரியா ஜோடி களை கட்டுகிறது. நஸ்ரியா படத்திற்கு பெரும் ஆறுதல். இருந்தாலும் நெருக்கமோ, அணுக்கமோ துளியும் இல்லை. நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்திற்கு ரெடியாகி, விலகி நிற்பது கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. டைரக்டர் பாலாஜி மோகனோ, டி.வி செய்தி வாசிப்பாளராக வந்து சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறார். ஆனால் எல்லாவற்றிலுமே களம் புதுசு... காட்சிகள் பழசு!
முதல் பகுதியில் ஏற்படுத்திய நம்பிக்கையை அடுத்த பகுதிக்கும் கொண்டு போய் கரை சேர்க்கவில்லை.

கமலின் ‘பேசும் படத்’தை நினைத்து பேச்சில்லாத பகுதியை எடுத்துவிடத் துணிந்திருக்கிறார்கள். ஆனாலும், மனதைத் தொடவில்லை. பல விதங்களில் படத்தில் சோதனை முயற்சிகள் கண்கூடாகத் தெரிந்தாலும், கதை சேர்ப்பு இயல்பாக இல்லை. சாமி, ஃபேன்டஸி கதை என்றால் லாஜிக் இருக்காது தான். ஆனால், இங்கே கதையையே காணோமே! பாசிட்டிவ் காமெடிகளே கலகலக்க வைத்தாலும், நடுவில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் ஏனோ?

வாழ்க்கையின் பல இடங்களை சிரித்துக்கொண்டே கேலி செய்வதில் காட்டுகிற அக்கறையை, சுறுசுறுப்பான திரைக்கதையில் காட்டியிருக்கலாம். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் உறுத்தாமல் ஒலிக்கின்றன. முதல்பட அறிமுகம் என்பதிலிருந்து தள்ளி, அனுபவப்பட்ட இசையால் மிளிர்கிறார். கற்பனை நகரம், பனிமலையைப் படம் பிடித்திருப்பதில் முழுப்பங்கு கேமராமேன் சௌந்தர்ராஜனுக்கு.  இன்னும் படத்தை விறுவிறுப்பாக நடத்தியிருந்தால், திரைக்கதையில் கவனப்படுத்தியிருந்தால், நாமே வாயைத் திறந்து பாராட்டியிருக்கலாம்!

குங்குமம் விமர்சனக் குழு