கடைசி பக்கம்



ராணுவத்துக்குத் தேவைப்படும் தளவாடங்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அது. சுற்றிலும் மின்வேலி போட்டு பாதுகாக்கப்படும் முக்கிய கேந்திரம். வாசலில் எப்போதும் கடும் காவல் இருக்கும். ஒரு நள்ளிரவில் ஏதோ வேலையாக வந்த உயர் அதிகாரி, வாசலில் இருந்த வீரர்கள் பலரும் தூங்குவதைப் பார்த்து கடுப்பாகி விட்டார். ‘‘இனி மனிதர்களை நம்புவதில் பயனில்லை. பாதுகாப்பு வேலைக்கு மோப்ப நாய்களைப் பழக்குங்கள்’’ என உத்தரவிட்டார்.

உடனடியாக சில உயர் ரக நாய்கள் வாங்கப்பட்டன. அவற்றுக்கு பல நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இருபத்தி நான்கு மணி நேரமும் எல்லா பாதுகாப்பு வேலைகளையும் அவை திறமையாகச் செய்தன. அதிகாரிக்கு இதில் பரம திருப்தி. ‘‘ஏன் இந்த நாய்களையே வாகன சோதனையிலும் ஈடுபடுத்தக் கூடாது?’’ என்று கேட்டார். பொருட்களை ஏற்றிக்கொண்டு பல வெளி வாகனங்கள் அந்த தொழிற்சாலைக்கு வரும். முக்கியமான எதுவும் திருடு போய்விடக் கூடாதே என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. ஆனால், ‘‘நாய்க்கு எது நம் பொருள், எது திருடப்படுகிறது என்பது எப்படித் தெரியும்? சில வேலைகளை மனிதர்கள் மட்டுமே செய்ய முடியும்’’ என்றனர் மற்ற அதிகாரிகள்.

‘‘செக்யூரிட்டி வேலையைச் செய்யும் நாய்களால் இதைச் செய்ய முடியாதா?’’ என்றவர், அப்போது வெளியில் செல்லக் காத்திருந்த ஒரு லாரியில் நாயை ஏற்றிவிட்டார். அது வேகமாக ஏறி லாரி முழுக்க மோப்பம் பிடித்துவிட்டு, டிரைவர் கேபினுக்குள் நுழைந்து எதையோ கவ்வியது. சீரியஸாக அதை ஆராயவும் ஆரம்பித்தது. அதிகாரி பெருமிதமாகப் பார்த்தபடி நெருங்கிப் போனால், லாரி டிரைவரின் சாப்பாட்டை நாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எல்லா வேலைகளையும் எல்லோராலும் பழகிக் கொள்ள முடியாது!

நிதர்ஸனா