சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்

என்னைப்
பரிபூரணமாக
நம்புங்கள்.
உங்கள் உடல்,
மனம், செல்வத்தை என் பாதத்தில் வையுங்கள்.
உங்களை விட்டு நான் எங்கே
செல்வேன்?

பாபா மொழி


எல்லோரையும் கேலி செய்யும் பாபா, தானே ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார். ராதாபாய் தேஷ்முக் என்னும் சாயி பக்தை சங்கமனேர் என்னுமிடத்திலிருந்து ஷீரடிக்கு வந்தாள். வயதானவள். களைத்துப் போயிருந்தாள். ஆனால் அவள், ‘சாயியை குருவாக ஏற்க வேண்டும்... அவரிட மிருந்து உபதேசம் பெற வேண்டும்’ என்று மனதில் நினைத்தாள்.

‘‘பாபா, உங்களிடமிருந்து நான் உபதேசம் பெறணும். நீங்கள் என்னை சிஷ்யையாக ஏற்க வேண்டும்.’’ ‘‘தாயீ! நான் உபதேசம் செய்வதில்லை. குரு என்கிற தளையில் எல்லாம் விழுவதில்லை. தரிசித்து விட்டு அமைதியாகத் திரும்பிப் போ!’’ என்றார் பாபா.
ஆனால் அவள் கேட்பதாக இல்லை. தன் எண்ணத்தில் உறுதியுடன் இருந்தாள்.

‘‘பாபா, நீங்கள் எனக்கு உபதேசம் செய்யும்வரை நான் உணவு எதுவும் சாப்பிடாமல் இங்கேயே உட்கார்ந்திருப்பேன்’’ எனக் கண்டிப்புடன் கூறிவிட்டு, அங்கேயே உறுதியுடன் உட்கார்ந்தாள்.
பாபா அவளை லட்சியமே செய்யவில்லை. மூன்று நாட்கள் கழிந்தன. அன்ன ஆகாரமில்லை. அவளுடைய உடல் துவண்டது. வயதானவள் வேறு. ஆனால், திட மனதுக்காரி.

ஷாமா மசூதியில் பாபாவைப் பார்த்துக் கூறினார், ‘‘பாபா, இது என்ன புதுவிதமான தர்மசங்கடம்? இந்தக் கிழவியோ சாவதற்கு பயப்படவில்லை. மேலும் யார் சொன்னாலும் கேட்பதில்லை. அவள் உங்கள் மீது அதிக அன்பு கொண்டுள்ளாள். ஆனால், ரொம்பப் பிடிவாதக்காரி. இந்த பிரச்னையைத் தீர்த்து வையுங்கள். ஒருவேளை அவள் இறந்தால் தாங்கள் இவ்வளவு நாட்களாகச் சேர்த்து வைத்த புகழ் ஒரே நாளில் மறைந்து, அபவாதம்தான் மிஞ்சும்.’’
‘‘சரி, அவளை மேலே கூப்பிடு!’’

ஷாமா அவளிடம் சென்று பாபா அழைப்பதாகச் சொன்னார். அவள் கேட்டு மகிழ்ந்தாள். இரண்டு பேர் கைத்தாங்கலாகத் தூக்கி, அவளை பாபாவின் அருகில் உட்கார வைத்தார்கள். மிகுந்த கருணையுடன், பாபா அவளிடம் சொன்னார்... ‘‘தாயீ! ஏன் அனாவசியமாக உயிரை விடுகிறாய்? நான் பிச்சையெடுத்து வாழும் சாதாரண பக்கீர். உண்மையில் நான் உன் மகன். நீ என் தாய்! இப்பொழுது என்னைக் கவனமாகப் பார். உனக்கு ஒரு புதுமையான சங்கதியைச் சொல்கிறேன். அது உனக்கு மனநிறைவைக் கொடுக்கும் பார்!’’
கிழவி காது கொடுத்துக் கேட்டாள்.

‘‘என் குரு ஒரு சாது, கருணைக் கடல். அவருக்குப் பணிவிடை செய்து செய்து களைத்துப் போனேன். ஆனால், அவர் எனக்கு மந்திர உபதேசம் செய்யாமல் இருந்தார். என்னவானாலும் சரி, விடாமல் அவருக்குப் பணிவிடை செய்து, எப்படியாவது உபதேசம் வாங்க வேண்டுமென்று என் உள்மனம் சொல்லிற்று. ஒருநாள் என்னிடம் இரண்டு பைசா கேட்டார். உடனே கொடுத்துவிட்டு, உபதேசிக்கும்படி வேண்டினேன். என் குரு எல்லா வசதிகளும் பெற்றிருந்தார். இருந்தாலும் இரண்டு பைசா எதற்காகக் கேட்டார்? அதற்கு என்ன அவசியம்? சிஷ்யனிடமிருந்து பைசா வாங்குபவனை எப்படி முற்றும் துறந்த முனிவர் எனலாம்? இப்படிப்பட்ட யோசனைகளை மனதில் எழ விடாதே.

அவருக்குப் பணம் தேவை என்கிற எண்ணம் கனவிலும் கிடையாது. பணத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்வார்? நன்றாகக் கேள். நம்பிக்கையும் பொறுமையும்தான் அந்த இரண்டு பைசாக்கள். வேறொன்றும் இல்லை. நான் உடனே கொடுத்தவுடன் குரு என் மீது சந்தோஷப்பட்டார். தைரியம் என்பதுதான் பொறுமை. உயிர் என்னும் ரதத்திற்கு இவை இரண்டு சக்கரங்கள். வெறும் நம்பிக்கையினால் உபயோகமில்லை; மற்றும் பொறுமையினால் வேலை ஆகாது. ஆனால் இவை இரண்டும் உள்மனதில் ஒன்று சேர்ந்தால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள்.

நம்பிக்கை என்பது விசுவாசம். பொறுமை என்பது நம்பிக்கையைப் பரீட்சை செய்வதாகும். இந்தச் சோதனையை தைரியத்துடனும் மிகுந்த கவனத்துடனும் எதிர்கொள்ள வேண்டும். இதை நீ கவனத்தில் வை. பொறுமையை என்றும் தூரத் தள்ளாதே. எந்த அவல நிலையிலும் உன்னைக் காப்பாற்றுவது ஆதி சக்தியான பொறுமைதான். நம்பிக்கை என்பது ஆண்களுக்கு ஆண்மைத்தனமும் பெண்களுக்குப் பதிவிரதத் தன்மையும் ஆகும். இவற்றை நிதானமாகவும் பொறுமையுடனும் கையாள வேண்டும்.

புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டால், துன்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். பொறுமையைக் கையாளும்பொழுது, அநேக தடைகள் உண்டாகும். அவற்றைக் கடந்து வந்தால், வாழ்க்கையில் வெற்றிகள் குவியும். பொறுமை என்பது நற்குணங்கள் கொண்ட மகாராணி; நல்ல எண்ணங்கள் கொண்ட உணவு. நம்பிக்கையும், பொறுமையும் கூடப் பிறந்த சகோதரிகள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வாழ்வும் உயிரும் இருக்கின்றன. பொறுமை இல்லையென்றால் மனித உயிர் என்பது வெறும் ஓடமாகத்தான் இருக்கும். பண்டிதராக இருந்தாலும் சரி, வித்வானாக, சிறந்த அறிஞராக இருந்தாலும் சரி... பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் வாழ்க்கை வீணாகும். இதை நினைவில் வை. இப்போது சப்பாத்தி சாப்பிடு!’’கிழவி தலையை ஆட்டினாள். ஷாமாவும் திருப்தியடைந்தார்!

தீட்சித் வீட்டு மாடியில் பாபுசாகேப் புட்டியும் ஷாமாவும் தூங்கியபொழுது ஓர் அதிசயம் நடந்தது. ஷீரடியில் நிரந்தரமாகத் தங்குவதற்கு கட்டிடம் கட்ட வேண்டுமென புட்டி ஆசைப்பட்டார். அதையே நினைத்துக்கொண்டு தூங்கினார். அதைப் பற்றி ஷாமாவிடமும் சொல்லியிருந்தார். தூக்கத்தில் இருவருக்கும் கனவு வந்தது. இருவரின் கனவிலும் பாபா வந்து ஒரே விஷயத்தைச் சொன்னார்.
பாபுசாகேப்பின் கனவில் வந்து ‘‘பாபு, நீங்கள் உங்களுடைய வீட்டை, சுவாமி அறையுடன் கூடியதாகக் கட்டுங்கள்’’ என்றார். ஷாமாவின் கனவில் வந்து, ‘‘ஷாம்யா, சுவாமி அறையுடன் வீடு கட்டு. நான் எல்லோருடைய ஆசையையும் நிறைவேற்றுகிறேன்’’ என்றார்.

இருவரும் திடுக்கிட்டு எழுந்து ஒவ்வொருவருக்கும் வந்த கனவைச் சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். மறுநாள் இருவரும் இதை காகா சாகேப் தீட்சித்திடம் சொன்னார்கள். மூவரும் பாபாவிடம் வந்தார்கள். ‘‘பாபா, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? கனவில் வந்து, புதிராகப் பேசி, தூக்கத்தைக் கலைக்கிறீர்கள். நன்றாகத் தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள்!’’ என்றார் ஷாமா.

‘‘அப்பனே ஷாமா, என்ன உன் அங்கலாய்ப்பு? யார் என்ன சொன்னாலும், நாங்கள் எங்கள் இடத்தில்தான் இருக்கிறோம். இங்கே அங்கே எங்கும் போவதில்லை!’’ புட்டி தன் கனவைச் சொன்னதும், பாபா அதற்கு அனுமதி கொடுத்தார். பிறகு, மாதவராவும் புட்டியும் தங்கள் வீடுகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். பாபா லேண்டிக்குப் போகும்போதும் வரும்போதும் கட்டிட வேலை நடக்கும் இடத்தைப் பார்வையிட்டு, தன் ஆலோசனைகளைக் கூறுவார். அதன்படியே வேலையும் நடந்தது.

அப்பொழுது புட்டிக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘சுவாமி அறையை கருவறை போல் கட்டி, அதில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகத்தை ஸ்தாபனம் செய்தால் என்ன!’ என்று. இதை பாபாவிடம் சொன்னார். பாபா வந்து பார்வையிட்டு, ‘‘நல்ல விஷயம்தான். அப்படியே செய்யுங்கள். வீடு கட்டி முடித்தவுடன் நாமே அங்கு போய் இருக்கலாம். வீட்டிற்கு வீடும் ஆயிற்று, கோயிலும் ஆயிற்று’’ என்றார் சந்தோஷமாக.

இதைக் கேட்டு எல்லோரும் ஆனந்தமானார்கள். பாபாவின் அனுமதியுடன், ஒரு நல்ல நாளில் தேங்காய் உடைத்து, கருவறை கட்டத் துவங்கினார்கள். எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், பாபா வானத்தை ஆழ்ந்து பார்த்தார்... அவருடைய பார்வையும் ஒரு புதிராக இருந்தது! ஒரு சமயம் சாய்பாபா, பாபாஜான், தாஜுதின் பாபா இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று பாபா எழுந்து, அருகிலிருந்த பானையைத் தூக்கிப் போட்டு உடைத்து, துனியை வளர்த்துக்கொண்டே உட்கார்ந்தார்.
‘‘என்ன இப்படி செய்கிறீர்கள்?’’ - ஷாமா வினவினார்.

‘‘தாஜுதின் பாபாவின் தர்கா எரிந்துகொண்டிருக்கிறது. அதை அணைத்தேன்!’’
எல்லோரும் அமைதியானார்கள்.
மறுநாள். அவர் சொன்னபடியே நிகழ்ந்திருக்கிறது. பாபா இப்படி முன்கூட்டிச் சொன்ன அற்புதத்தைக் குறித்து, எல்லோரும் வியந்தார்கள்.
‘‘பாபா’’
‘‘என்ன?’’

‘‘சக்ரநாராயணன் என்னும் கிறிஸ்தவ ராணுவ வீரன் ராஹாத்யாவிலிருந்து வந்திருக்கிறான்’’ என்று யாரோ சொன்னார்கள். பிற மதத்தவர் வந்திருப்பதால், பாபா ஏதேனும் சொல்வார் என ஐயப்பட்டார்கள்.‘‘கிறிஸ்தவனாக இருந்தால் என்ன? அவன் என்னுடைய சகோதரன்!’’ என்றார் பாபா கம்பீரத்துடன்.
கேள்வி கேட்டவன் வாயடைத்துப் போனான்.

அன்று பாபா சந்தோஷத்தில் இருந்தார். காரணம், தேசத்தின் சிறந்த தலைவரான லோகமான்ய பாலகங்காதர திலகர் பாபாவைச் சந்திக்க வருகிறார்!
தாதாசாகேப் காபர்டே, லோகமான்ய திலகரையும், கேல்கரையும் துவாரகமாயியினுள் அழைத்து வந்தார். கூட, பாபுசாகேப் புட்டி, நாராயணராவ் பண்டிட், மாதவராவ் தேஷ்பாண்டே, பாபாசாகேப் பாடே, பாபுசாகேப் ஜோக் மற்றும் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

கனத்த சரீரம் கொண்ட திலகர் மேலே ஏறி வந்தார். அவர் மிகுந்த அன்புடன் பாபாவைத் தரிசித்தார். மற்றவர்களும் தரிசித்தனர். தாதாசாகேப் காபர்டேவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. காரணம், பாபாதான் அவருடைய ஆன்மிக குரு. திலகர் அரசியல் குரு. இந்த இரண்டு பேரின் சந்திப்பு அவரால்தான் நிகழ்ந்தது. ‘‘திலகரே, என்னருகில் உட்காருங்கள்!’’

திலகரும் உட்கார்ந்தார். அவருடன் வந்தவர்கள் பாபாவைச் சுற்றி உட்கார்ந்தார்கள். திலகர் பாபாவையே ஆழ்ந்து பார்த்தார். அவருடைய கண்களில் ஒளியும் பரவசமும் தெரிந்தன. பாபா ஒளிவட்டம் கூடிய தேஜஸ்வியாக திலகருக்குத் தெரிந்தார். ‘‘லோகமான்யரே, நீங்கள் அனுப்பிய ‘கீதை ரகஸ்யம்’ புத்தகம் கிடைத்தது. ரொம்ப அற்புதமான காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். அரசியலில் நீங்கள் புதுமையான புத்துணர்ச்சியை ஊட்டியிருக்கிறீர்கள். அரசியலில் உங்களால் ஒரு புதுப் பரம்பரை ஆரம்பமாகப் போகிறது.’’

‘‘பாபா, என்னைப் போலவே நீங்கள் பல விதமான வழிகளில், மகத்துவம் வாய்ந்த மற்றும் நிரந்தரமான காரியங்களைச் செய்து வருகிறீர்கள். எங்களுடைய நண்பர் தாதா சாகேப், உங்களைப் பற்றியே எப்பொழுதும் சொல்லுவார். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அவருடைய மகனின் பிளேக் நோயை, தங்கள் உடம்பில் ஏற்றிக்கொண்டீர்கள். இதைத் தவிர ‘தத்திதி ப்ராணிபாதேன்’ என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கத்தையும் அறிந்தேன். அதனால் கீதையைப் புதிய கோணத்தில் ஆராய முடிந்தது. பாபா, எல்லா விஷய ஞானங்களும் உங்களிடமிருந்துதான் உற்பத்தியாகிறது என நினைக்கிறேன்!’’ என்றார் திலகர். அவருடைய கணீரென்ற குரல், ஒருவித மாயத்தைப் பரப்பியது.

பாபா சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்... ‘‘கீதையின் அர்த்தம் உங்கள் நரம்புகளிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் தைரியமாக ஆங்கிலேயர்களுடன் போராட, அவர்கள் எதிரில் மலை போல நிற்கிறீர்கள். நாடு முழுவதும் உங்களைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறது. சத்ரபதி சிவாஜியின் கத்திக் கூர்மை உங்கள் செயலில் காணப்படுகிறது. உங்களுக்குப் பின்னால் சிவாஜி ராஜாவின் ஆற்றல் மலை போல நிற்கிறது. இப்படியே செயலாற்றி வாருங்கள்! தன்னம்பிக்கை, துணிவு இவற்றுக்கு மறு பெயர் என்னவென்றால் அது லோகமான்யர்தான்!’’
திலகர் உணர்ச்சிப் பெருக்கெடுத்தார். ஒரு அசாதாரணமான மகான், யோகி - கடவுளாகத் தெரியும் பாபா, தனக்குப் புகழாரம் சூட்டியத்தைக் கண்டு புளகாங்கித
மடைந்தார்.

‘‘பாபா, தேசத்திற்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும்?’’ ‘‘கிடைக்கும். அந்த நாளும் நெருங்கி வருகிறது. நீங்கள் ரொம்ப களைத்துப் போயிருக்கிறீர்கள். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.’’ ‘‘தங்கள் உத்தரவு. ஆனால், என்னுடைய தேச விடுதலைப் போருக்குத் தங்களின் ஆசீர்வாதம் தேவை.’’ ‘‘நிச்சயம் உண்டு. ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமும் அடிமைத் தளைகளும் இருக்கக் கூடாது. இதைத்தான் நான் போதித்து வருகிறேன். நீங்கள் தொடுத்துவரும் யுத்தம், தர்ம யுத்தமாகும்.’’

திலகர் மறுபடி பாபாவை தரிசித்து எழுந்தார். பாபா அவரை வழியனுப்பி வைத்தார். வெளியில் வந்த பிறகு திலகர் சொன்னார்... ‘‘தாதா சாகேப், ‘கீதை ரகஸியம்’ என்கிற நூலை எழுதிய பிறகுகூட, ஆண்டவனைக் காண வேண்டும் என்று மனதின் ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. இப்பொழுது, அது இல்லை. மனம் அமைதி அடைந்தது!’’ கார்டே உட்பட, அங்கிருந்தவர்கள் வியந்த கண்களுடன் லோகமான்யரையே பார்த்தார்கள்! நம்பிக்கையும் பொறுமையும்தான் உயிர் என்னும் ரதத்திற்கு இரண்டு சக்கரங்கள்.ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமும் அடிமைத் தளைகளும் இருக்கக் கூடாது. இதைத்தான் நான் போதித்து வருகிறேன்.

(தொடரும்...)