பொலிட்டிகல் பீட்



தேர்தல் பரபரப்புகள் ஒரு பக்கம் இருக்க, கிட்டத்தட்ட ஐம்பது எம்.பி.க்கள் நிதானமாக தங்கள் டெல்லி வீடுகளை காலி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடாதவர்கள். எப்படியும் புதிய அரசு வந்ததும் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும். இப்போது முந்திக் கொள்கிறார்கள். மத்திய அமைச்சர் மனிஷ் திவாரியும் வீட்டை காலி செய்து விட்டார்.

வாய்ஸ்

நரேந்திர மோடியை விமர்சனம் செய்பவர்கள் பாகிஸ்தான் போகட்டும் என்கிறார்கள் பாரதிய ஜனதாவினர். விமர்சனத்தை நிறுத்துவதைவிட நான் பாகிஸ்தானுக்குச் செல்லவே விரும்புவேன்!

-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பஞ்சாப்பின் பாட்டியாலா மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு முதல்வராக இருந்தவர். அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர் மீண்டும் இம்முறை பாட்டியாலாவில் போட்டியிடுகிறார்.

 இடையில் பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜெட்லி அமிர்தசரஸில் வேட்பாளர் ஆக்கப்பட, அவரை எதிர்த்து அமரிந்தரை மோத விட்டிருக்கிறது காங்கிரஸ். அமரிந்தரின் குடும்பமே சொந்த ஊரில் அவரது மனைவிக்காக தேர்தல் வேலை பார்க்கிறது. அமிர்தசரஸில் தனியாகத் தவிக்கிறார் அமரிந்தர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். பிரணாப் ஜனாதிபதி ஆனபோது ராஜினாமா செய்த ஜாங்கிபூர் தொகுதியில் கடந்த முறை அவர் காங்கிரஸ் சார்பில் நின்றபோது பெரிய எதிர்ப்பு இல்லை. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தன் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல், அவர் வெற்றிக்கு உதவினார். இம்முறை மும்முனைப் போட்டியில் தவிக்கிறார் அவர். தேர்தலுக்கு முன்பாக அப்பாவை சந்தித்தபோது, ‘‘பிரசாரத்துக்குப் போகும்போது நிறைய தண்ணீர் குடி. இல்லைன்னா உடம்பு கெட்டுடும்’’ என்று மட்டும் சொன்னாராம். ஜனாதிபதிக்குரிய வரம்புகளை மீறி, அரசியல் ஆலோசனைகளைத் தரவில்லையாம்!

உண்மையைத் தாண்டிய கனவுகள் எனக்கில்லை. சில எம்.பி.க்களுடன் மட்டுமே என்னால் டெல்லி செல்ல முடியும் என்பதை நான் அறிவேன். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பிரதமர் என்பவர், கணிசமான எம்.பி.க்களுக்குத் தலைவராக இருக்க வேண்டும். அப்புறம் நான் எங்கே பிரதமர் ஆவது? - பிரதமர் பதவிக்கான வாய்ப்பு குறித்து மத்திய அமைச்சர் சரத் பவார்
‘யாரு உன்னை இப்படில்லாம் கேக்க சொல்லி சொல்றது?’ என செந்திலை கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பாரே...

அப்படித் தோன்றியிருக்கிறது வேதபிரகாஷ் பார்தியா என்கிற சுயேச்சை வேட்பாளருக்கு! ஹரியானாவில் போட்டியிடும் இவர் தேர்தல் ஆணையத்திடம் இரண்டு புகார்கள் அளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி இனி கை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாதாம்.

 ஓட்டு போட வாக்குச்சாவடிக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் கையைப் பார்க்கிறார்கள். அதை எப்படி சின்னமாக பயன்படுத்தலாம் என்பது அவர் வாதம். இதேபோல லோக் தளம் கட்சியின் கண்ணாடி சின்னத்தையும் பிடுங்கச் சொல்கிறார். பலரும் கண்ணில் மாட்டியிருக்கிறார்களாம்!