சுபாகர்
மணிவேலை வரவேற்று அமரச் சொன்னான் இளங்கோ. அவன் மனைவி காபி போட சமையலறைக்குள் போனாள். இளங்கோ சுவாரசியமாகப் பேச ஆரம்பித்தான். மணிவேல் மனதிற்குள் பொருமினான். ‘பாவிப் பய... ரெண்டு மாசத்துல தர்றேன்னு என்கிட்ட இருபதாயிரம் ரூபா வாங்கி ஏழு மாசம் ஆச்சு. அதைப் பத்தி மூச்சு விடுறானா பார்... பத்தாண்டு கால நட்புக்காக இதுவரை பளிச்னு கேட்காம இருந்தோம். இனியும் பொறுமை காத்து இளிச்சவாயனாக முடியாது...’
கிடைத்த இடைவெளியில் மணிவேல் மெல்ல ஆரம்பித்தான். ‘‘போன மாசம் என்னைப் பொறுத்தவரை செலவு மாசம்தான். பொண்டாட்டி தரப்புல ரெண்டு சடங்கு விசேஷம்... அவ அண்ணன் பொண்ணு கல்யாணம்னு செலவு. நடுவுல திடீர்னு எங்க அப்பாவுக்கு குடல்வால் ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிடுச்சி.
கையிருப்பை எல்லாம் புது வீடு கட்டறதில போட்டுட்டதால ஒண்ணும் சமாளிக்க முடியலை. தெரிஞ்ச பார்ட்டிகிட்ட பத்து வட்டிக்கு ஐம்பதாயிர ரூபா கடன் வாங்கித்தான் சமாளிச்சேன். அதனால இளங்கோ... நீ கொஞ்சம்...’’
மணிவேலை இடைமறித்த இளங்கோ தயக்கமின்றி கேட்டான். ‘‘மணி, அந்த பார்ட்டிகிட்ட கேட்டு எனக்கு ஒரு முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கித்தர முடியுமா?’’ மணிவேல் திகைத்து நின்றான்.