என்னமோ நடக்குது



அம்மாவிற்கு ‘அடங்காத’ பிள்ளையாய் திரியும் விஜய் வசந்த் சற்றும் எதிர்பாராத விதமாக இரண்டு தாதாக்களிடம் சிக்கித் தவித்து, விடுபடுகிற கதைதான் ‘என்னமோ நடக்குது’. முதல் காட்சியிலிருந்தே சுவாரஸ்யத்தைக் கொண்டிருப்பதும்,

 நம்பத் தகுந்த எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளை இஷ்டத்திற்குக் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தியதற்காகவும் அறிமுக இயக்குநர் ராஜபாண்டிக்கு உற்சாகப் பூங்கொத்து. ஆச்சரியத் திருப்பங்கள், விறுவிறு காட்சிகள் என துல்லியமான ஜனரஞ்சகத்திற்கு அரை மணி நேரத்திலேயே ‘உள்ளேன் ஐயா’ சொல்லிவிட்டதால், மீதி நேரமும் நம்பிக்கை பதியன் விதைக்கிறார் ராஜபாண்டி.

குளிக்க வெந்நீர் வைக்காததற்கே அம்மாவை அடித்து உதைத்து, ராத்திரி பிரியாணி வாங்கி வந்து சமாதானப்படுத்தும் நார்த் மெட்ராஸ் பையனாக விஜய் வசந்த். சமீப காலத்தில் இந்தக் கேரக்டருக்கு இவ்வளவு பொருத்தமாக வருகிற நடிகரை யோசித்தால், மீண்டும் இவர் ஞாபகம்தான் வருகிறது. ‘இவர் இவ்வளவுதான்’ என யாராவது முன் முடிவுகளை முடிச்சுப் போட்டு வைத்திருந்தால், அதை அவிழ்க்க வேண்டிய அவசியம் வைக்கிறார் விஜய் வசந்த். அம்மா சரண்யாவை அடிப்பதில் ஆகட்டும், இடுப்பில் உதைத்து எழுப்பவதில் ஆகட்டும்... தாய்-மகன் பாசத்தின் வெளிப்பாடு இதில் அப்படியே நிஜம். பொதுவான சினிமா நாயகனின் காவியத் தன்மைகள் அதில் உடைபட்டுத் தெறிக்கின்றன. அம்மா சரண்யா பொன்வண்ணனின் மெட்ராஸ் பேச்சு, எதிர்பார்க்காத அதிர்ச்சி. கஸ்மாலம், மொள்ளமாறி என வார்த்தைகள் படு இயல்பில் வந்து விழுகிறது. கிடைத்த தேசிய விருது சும்மாக்காச்சும் இல்லை என்பது கண்ணுக்கு முன்னே!

குட்டிப் பெண்ணாக ‘சாட்டை’யில் எட்டிப் பார்த்த மகிமா, இதில் எடுத்திருப்பது அழகு அவதாரம். எப்போதும் விஜய் வசந்த்தை எடுத்தெறிந்து பேசுபவர், தந்தையைக் காப்பாறிய பிறகு அவர் வீட்டிற்கே வந்து ‘அறை’ கொடுத்து தேங்க்ஸ் சொல்வது... காதல் வரலாற்றில் புதுசு. இன்னும் கொஞ்சம் ‘உயர்ந்தால்’, அச்சு அசல் தமிழ் ஹீரோயின் ரெடி.

வில்லன் ரகுமானின் வலது கரமாய் இருந்துகொண்டு தம்பி ராமய்யா கொடுக்கும் கமென்ட்கள் சிரிப்பு ரவுசு. முதல் நிமிடம் வரைக்கும் அப்படியொரு காமெடி சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாதபடி முகபாவத்தை இயல்பாக வைத்திருக்கிறார் மனிதர்.

அதுதான் நம் சிரிப்பைத் தட்டி எழுப்பி விடுகிறது. பிரபுவின் குத்துச்சண்டை ஷோவிற்கு எம்.ஜி.ஆரே வந்து பார்த்து, பரிசு வழங்குவதும், அதைப் படம் பிடித்திருக்கிற விதமும் நல்ல கற்பனை. உரையாடல்களில் படம் உயிர்த்திருப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். ரகுமானுக்கும், பிரபுவிற்கும் ஊதித் தள்ளுகிற பாத்திரங்கள். சுலபமாக, திறமையாக செய்து முடிக்கிறார்கள். குட்டிக் குட்டியான சுவாரஸ்ய வசனங்கள் ஒவ்வொரு கேரக்டர்களிலும் வைக்கப்படும் கவனம்தான் படத்தை ‘அட’ போட வைக்கும் லிஸ்டில் சேர்க்கிறது.

ஆச்சரியமான சில நல்ல பாடல்களுக்கு இடம் தருகிறார் பிரேம்ஜி அமரன். நல்லவேளை, இசையையும் அவர் விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை போல! பின்னணி இசையில் படபடக்கிறது நெஞ்சம். மீண்டும் வந்திருக்கிறார் கேமராமேன் ஏ.வெங்கடேஷ். ஆக்ஷனில் தூள் பரத்துபவர், தன் கடமையை சரிவரச் செய்திருக்கிறார்.
ஃபார்முலாதான்... ஆனால், ஃபார்முலா ஒன் ரேஞ்சுக்கு வேகம்!

குங்குமம் விமர்சனக் குழு