பேசும் சித்திரங்கள்



கலைகளின் காவலன் தொன்மைக்கும், பழமைக்கும் நமக்கு வேறுபாடு தெரிவதில்லை. ‘பழையன கழிதல்’ என்கிற பெயரில் நம்முடைய தொன்மையான அடையாளங்களைத் தொலைத்து வருகிறோம். நமக்கென இருக்கும் தனித்துவமான பெருமைகளை இழந்து, வரலாறு அற்ற சமூகமாகிவிடும் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய பாரம்பரியக் கலைகளை அழித்து, அதன் சமாதியில் நவீனக் கலையை கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் எந்த ஒரு கலையும், இன்னொரு கலையை அழித்து தன்னை நிரூபித்துக்கொள்வதில்லை. மாறாக, அது தன்னோடு மற்ற கலைகளையும் சேர்த்தே வளர்த்தெடுக்கிறது. ஆனால் ‘நவீனக் கலை’ என்கிற பெயரில் வியாபாரத்தை வளர்த்தெடுக்கச் செய்கிற முயற்சிகளின் வாயிலாகத்தான் நாம் நம்முடைய தொன்மையான கலையை கழுவேற்றம் செய்துகொண்டிருக்கிறோம்.
அசோகமித்திரன் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையில், திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் ஒரு கலைஞனைப் பற்றிப் பதிவு செய்திருப்பார்.

‘டைகர் ஃபைட்’ என்கிற புலி வேஷம் கட்டும் ஒரு கலைஞனின் வாழ்க்கை எப்படி பொருளாதாரத் தேடலில் தொலைந்து போகிறது என்பதை மிக நுட்பமாக அசோகமித்திரன் விவரித்திருப்பார். புலி வேஷம் கட்டி, ஆக்ரோஷம் காட்டி, சில நிமிடங்களில் அறையில் இருக்கும் அத்தனை பேரையும் பதற்றமடையச் செய்த காதர், அடுத்த கணமே அவர்களை நிலை குலையச் செய்வான். ‘‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க’’ எனக் கலங்கும் அவன்தான் சில நிமிடங்களுக்கு முன்பு புலியாக கம்பீரம் காட்டியவன். ‘‘நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அதுதான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது’’ என்றபடி அவன் இப்போது அழுது கொண்டிருப்பான்.

கலைஞர்களின் வாழ்க்கை ஒரு நொடியில் அற்புதத்தையும், அடுத்த நொடியில் சோகத்தையும் மாற்றி மாற்றி நிகழ்த்திக் கொண்டிருக்கும். அடுத்து வரப்போவது அற்புதமா... இல்லை, தன்னை நிலைகுலைய வைக்கும் சோகக் கீற்றா என்று தெரியாமலே அந்தந்த கணத்தைக் கடக்கும் நிச்சயமற்ற வாழ்க்கை, கலைஞர்களுக்கே உரித்தானது. இந்த வாழ்க்கை வரமா, சாபமா... பிரச்னையில்லை! சாபத்தைக் கூட வரமாக மாற்றும் ரசவாதம் தெரிந்தவர்கள் கலைஞர்கள். அத்தகைய கலைஞர்களின் அரவணைப்பில்தான் உலகம் இன்னமும் சுகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது.

சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் தன்னுடைய கூத்தை நிகழ்த்திக் காட்ட, இருங்கூர் கிராமத்திலிருந்து சென்னை வருகிறான் கூத்துக் கலைஞன் கோவிந்தன். எதிர்பாராதவிதமாக பள்ளியின் தாளாளர் இறந்துவிடவே, அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும்போதே, கர்ணனாக வேஷம் கட்டிக்கொண்டு வருகிறான் கோவிந்தன். ஊருக்குத் திரும்பிச் செல்லக்கூட தன்னிடம் பணம் இல்லை என்று தலைமை ஆசிரியரிடம் தொலைபேசியில் தெரிவிக்கிறான். தான் தற்போது வெளியில் இருப்பதாகவும், மாலை வரை காத்திருந்து வீட்டிற்கு வந்தால் பணம் தருவதாகவும் சொல்கிறார் அவர். வேறு வழியின்றி மாலை வரை காத்திருக்க முடிவு செய்கிறான் கோவிந்தன்.

சாலையோரம் இருக்கும் ஒரு சிற்றுண்டிக் கடையில், தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிக் கொடுக்கிறான். குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்கிறான். மிகச் சிறிய குவளையில் தண்ணீர் கிடைக்கிறது. ‘‘இன்னொரு கிளாஸ் கொடுங்க’’ என்கிறான். ‘‘ஒரு வடை வாங்கித் தின்னுட்டு, எத்தனை முறை தண்ணி கேப்பே... போய்யா! போய் அந்த தண்ணீ டேங்க்ல பிடிச்சுக் குடி’’ என்று சப்தம் போடுகிறான் கடைக்காரன்.

இதற்கிடையில் கடையில் வேலை செய்யும் சிறுமி, ஒரு இட்லியை கீழே போட்டுவிட, அதற்காக அவளைத் திட்டுகிறான் கடைக்காரன். இந்தக் காட்சியைக் காணும் கோவிந்தன், எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான். ஆனால், அவனுக்காக நாலு இட்லியைக் கொண்டு வந்து கொடுக்கிறாள் அந்த சிறுமி. இருவருக்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு வளர்கிறது. அவளுக்கு கூத்துக் கலையை சொல்லிக்கொடுக்க நினைக்கிறான் கோவிந்தன்.

சில நிமிடங்களில் அங்கே வரும் சிற்றுண்டி கடைக்காரன், சிறுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி விரட்டி அடிக்கிறான். ‘‘நாலு இட்லி வாங்கத் துப்பில்லாம, நீயே தெருத் தெருவா அலையுற... இதுல இந்த புள்ளைக்கு வேற கூத்து சொல்லித் தர்றியாக்கும்’’ என்று வசை பாடுகிறான். நெஞ்சு பொறுக்காமல் கோவிந்தன் அந்த இடத்தைக் கடக்கிறான். சிறுமி ஓடி வந்து குருதட்சணையாக ஒரு ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு, குரு வணக்கம் செலுத்திவிட்டுச் செல்கிறாள். பூரித்துப் போகும் கோவிந்தன், எதிரே வரும் சிறுவர்களிடம் தன்னுடைய கவசத்தைக் கொடுத்துவிட்டு, ‘‘நான் ராஜா இல்லைடா, கர்ண மகாராஜா’’ என்று கம்பீரமாக சொல்லி விட்டுச் செல்கிறான். திரை இருளாகிறது.

கலைஞர்கள் என்றுமே பொருளாதாரம் சார்ந்து இயங்குவதில்லை. ஊருக்குத் திரும்பிச் செல்வதற்குக்கூட பணமில்லாத சூழலில், எவ்வித பதற்றமும் இன்றி, தனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத மாநகரத்தில் அன்றையப் பொழுதை கடக்கிறான் கோவிந்தன். ஆனால் சிற்றுண்டிக் கடைக்காரன் எப்போதுமே பொருளாதாரம் சார்ந்தே எல்லாவற்றையும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கணத்தில் கிடைக்கும் அற்புதங்களையும், மனிதர்களையும் இழந்துவிட்டு, பணத்தின் பின்னே ஓடும் மனிதர்களின் பிரதிநிதியாகவே இந்தக் கதாபாத்திரம் படைக்கப்
பட்டுள்ளது.

கலைகளின் வழியே அறம் சொல்லி அடுத்த தலைமுறையை வளர்த்தவர்கள் நாம். ‘துயரங்களை அனுபவிக்க நேர்ந்தாலும், நல்லவன் வாழ்வான்’ என்ற நீதியைத்தான் நம் கலைகள் அத்தனையும், கதைகளின் வழியாக போதிக்கின்றன. கலைகளையும் கதைகளையும் நம் தலைமுறை இழந்து நிற்கிறது. அறத்தையும் நீதியையும் குழந்தைகளுக்கு சொல்லித் தரும் வழிகள் தெரியாமல் தவிக்கிறது.     

தமிழ் ஸ்டுடியோ அருண்

இந்த வாழ்க்கை வரமா, சாபமா... பிரச்னையில்லை! சாபத்தைக் கூட வரமாக மாற்றும் ரசவாதம் தெரிந்தவர்கள் கலைஞர்கள். அத்தகைய கலைஞர்களின் அரவணைப்பில்தான் உலகம் இன்னமும் சுகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது.

படம்: கர்ண மோட்சம் இயக்கம்: முரளி மனோகர் நேரம்: 13.44 நிமிடங்கள் ஒளிப்பதிவு: ஜி.சிவராமன் இசை: இரா.பிரபாகர் படத்தொகுப்பு: வீ.கோபி கிருஷ்ணா பார்க்க: www.youtube.com/watch?v=qrW7s0DcRMA

இந்தக் குறும் படத்தின் இயக்குனர் முரளி மனோகர், சென்னை திரைப்படக் கல்லூரியின் மாணவர். இவர் வளர்ந்த ஊரான திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில், சில வருடங்களுக்கு முன்பு வரைகூட தொடர்ச்சியாக மாதக்கணக்கில் ‘பாரதக் கூத்து’ என்கிற பெயரில் கூத்துக்கலை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் காலமாற்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கூத்துக் கட்டுபவர்கள் மறக்கப்பட்டு, இன்னிசைக் கச்சேரிகளும், குத்துப்பாட்டுகளும் அந்த இடத்தை ஆக்கிரமித்தன. அந்தக் கோபத்தை, தன்னுடைய குறும் படத்தில் பதிவு செய்ய நினைத்திருக்கிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் இந்தக் கதையைச் சொல்லி, மெருகேற்றித் தரக் கேட்டிருக்கிறார். ‘கூத்துப்பட்டறை’ ஜார்ஜை கோவிந்தன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, மிகச் சிறப்பாக இந்தக் குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

திரைப்படக் கல்லூரியில் படிப்பதற்கே, முரளி மனோகருக்கு அவரது நண்பர்கள்தான் உதவி செய்திருக்கிறார்கள். இந்த நிலையில், ‘கர்ணமோட்சம்’ குறும்படத்தை எடுத்து முடிக்க நிறையவே சிரமப்பட்டிருக்கிறார். குறும்படத்தை எடுத்து முடித்ததும், ஃபிலிம் சுருள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊருக்குச் சென்றிருக்கிறார். அவரது ஊரில் உள்ள சிறிய திரையரங்கில், காலைக் காட்சிக்கு முன்னர் இந்தக் குறும்படத்தைத் திரையிட்டிருக்கிறார்.

அவரது நெருங்கிய நண்பர்கள், அவரைப் படிக்க வைத்தவர்கள், படத்தைப் பார்த்து பரவசப் பட்டிருக்கிறார்கள். இந்தக் குறும்படம் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்று, முரளி மனோகர் பட்ட அத்தனை துயரங்களுக்கும் அர்த்தம் கற்பித்துள்ளது இந்த குறும்படம். வலிகள் இல்லாத வாழ்க்கையை எந்தக் கலைஞன்தான் விரும்புவான்!

(சித்திரங்கள் பேசும்...)