கட்டிப் பிடிக்காம நடிக்க முடியுமா?



படத்தின் பெயர், ‘பென்சில்’. அதற்கேற்ற உருவத்தில் ஹீரோ ஜி.வி.பிரகாஷ், அவருக்குப் பொருத்தமான ஜோடியாக ஸ்ரீதிவ்யா என அத்தனை கெமிஸ்ட்ரியும் அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்க... கெமிஸ்ட்ரி லேப் செட்டில் கண்கள் வழி காதல் ரசம் சொட்டிக்கொண்டிருந்த ஜோடியை இயக்குனர் மணியின் அனுமதியுடன் டூயட் பேட்டிக்கு ஓரம் கட்டினோம்.

‘‘டியூன் போட்டுக் கொண்டிருந்தவருக்கு டூயட் பாடுற அனுபவம் எப்படி?’’ என்றதும் வெட்கப் புன்னைகையுடன் ஆரம்பித்தார் ஜி.வி.பிரகாஷ். ‘‘ஹீரோவாகணும்னு ஆசையோ கோளாறோ எனக்குள்ள இருந்ததில்லை. சில இயக்குனர்கள் ‘நீங்க நடிக்கலாமே’ன்னு சொன்னப்போகூட, சும்மா கலாய்க்கிறாங்கன்னுதான் எடுத்துக்கிட்டேன். ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான் சீரியஸாகவே என்னிடம் கதை சொல்லச் சொல்லி, அவர் தயாரிப்பில் நடிக்க கால்ஷீட் கேட்டார். ‘எமக்குத் தொழில் இசைதான்’ என்று ஒதுங்க நினைத்தவனை உசுப்பேத்தியது அவர்தான். டேக் ஆஃப் ஆகுற நேரத்துல, திடீர்னு படம் டிராப் ஆகிடுச்சு. ‘அப்பாடி... தப்பிச்சோம்’னு நினைச்சு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிட்டேன்.

கௌதம் மேனனிடம் இருந்த மணி நாகராஜ் என் நீண்ட கால நண்பர். திடீர்னு ஒருநாள், ‘கதை ரெடி... நீங்கதான் ஹீரோ’ன்னு வந்து நின்னார். கேட்டதும் கதை மனசுலயே தங்கிடுச்சு. இதோ இப்ப உங்க முன்னாடி ஹீரோவா உட்கார்ந்திருக்கேன்...’’‘‘ஹீரோன்னா டான்ஸ் ஆடணும்... ஃபைட் பண்ணணும்...’’ ‘‘அதெல்லாம் மருந்துக்குக்கூட தெரியாது. ‘தலைவா’வில் விஜய்யுடன் சின்னதா ஒரு ஸ்டெப் போட்டுட்டு போயிருப்பேன். எந்த வேலையை ஒத்துக்கிட்டாலும் அதை விரும்பிச் செய்வேன். அதனால நடிக்க கமிட் ஆனதும் டான்ஸ், சண்டைன்னு முறைப்படி கத்துக்கிட்டேன். டயலாக் பேப்பரை வாங்கி முதல்நாளே ஹோம் ஒர்க் பண்ணிடுவேன். 69 கிலோ இருந்தேன்.

ஸ்கூல் ஸ்டூடன்ட் கேரக்டர் என்பதால், உடற்பயிற்சியெல்லாம் செய்து 7 கிலோ குறைச்சிருக்கேன். போட்டோ ஷூட் பார்த்துட்டு நிறைய சினிமா நண்பர்கள் வாழ்த்தினாங்க. அந்த நிமிடத்திலிருந்து நம்பிக்கையோட நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஸ்ரீதிவ்யா பிரமாதமான பெர்ஃபார்மர். அவங்களோட நடிக்கப் போறோமேன்னு முதல் நாள் ஷூட்டிங்கில் பயம் இருந்துச்சு. ஸ்ரீதிவ்யா சகஜமா இருந்ததால் சீக்கிரமே ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிடுச்சு’’ - ஜி.வி முடிப்பதற்காகவே காத்திருந்தது போல தன் பங்குக்கு பேச ஆரம்பித்தார் ஸ்ரீதிவ்யா.

‘‘இவர் என்னைப் பார்த்து பயந்த மாதிரியெல்லாம் தெரியல. அனுபவம் உள்ள நடிகர் மாதிரி தான் நடிச்சார். டான்ஸ் ஆடத் தெரியாதுன்னு சொல்றதும் உடான்ஸ்தான். ரொம்ப நல்லாவே ஆடுறார். தமிழில் நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே தெலுங்கில் அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் மூலமாக அவர் எனக்கு அறிமுகம். ‘மயக்கம் என்ன’ படத்தில் ‘பிறை தேடும் இரவிலே...’ பாடல் என்னோட ஃபேவரிட் சாங். மியூசிக் கம்போஸர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என்று பல திறமைகள் இருந்தாலும் ரொம்ப சிம்பிளா இருக்கற அவரை எனக்குப் பிடிக்கும்!’’
‘‘ஸ்ரீதிவ்யா போட்ட லிஸ்ட்டில் யாரை உங்களுக்குப் பிடிக்கும் ஜி.வி?’’

‘‘எந்த இடத்துக்குப் போனாலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷைத்தான் எனக்குப் பிடிக்கும். இப்ப ஷூட்டிங் இல்லாவிட்டால், ‘ஆஹா... இன்னிக்கு ஷூட்டிங் இல்லையே’ன்னு ஏங்குற அளவுக்கு நடிப்பையும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ‘பீட்சா’ பண்ணிய கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் முதல்முறையாக ரெட் டிராகன் கேமராவில் ‘பென்சில்’ படமாக்கப்படுது. இதுவரை ஸ்கூல் பின்னணியில் வந்த கதையில் இது ரொம்பவே வித்தியாசப்பட்டு இருக்கும். அடுத்த தலைமுறைக்கான படம்னுகூட சொல்லலாம்!’’

‘‘ஸ்கூல் லைஃப்பில் ரெண்டு பேரும் எப்படி?’’ என்றதும் ஆர்வத்துடன் முந்திக்கொள்கிறார் ஸ்ரீதிவ்யா. ‘‘நான் சதா படிச்சுக்கிட்டே இருக்கற டைப். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன் எங்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொன்னான். ஆனா அது காதலுக்கான வயசு இல்லைன்னு தெளிவா, படிப்பில் மட்டும் கவனமா இருந்தேன். பத்தாம் வகுப்பு போனதும் பட வாய்ப்புகள் வந்ததால் சரியா படிக்க முடியல. ஒருவழியா டென்த் முடித்து இப்போ பி.ஏ அஞ்சல் வழியில படிக்கறேன்’’ என ஜி.விக்கு வழிவிட்டார்.

‘‘ஸ்கூல்ல நான் அராத்து பையன்தான். படிப்பிலும் கெட்டி; மற்ற விஷயங்களிலும் படுசுட்டி. என்னோட தமிழ் ஆசிரியருக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. தமிழ் வகுப்பு மட்டும் வேறொரு செக்ஷனுக்கு போய்த்தான் படிப்பேன். அவங்க வெறுக்கற அளவுக்கு வாலு பையனா இருந்திருக்கேன்.’’ ‘‘கட்டிப் பிடிச்சு நடிக்கக்கூடாதுன்னு காதல் மனைவி கண்டிஷன் போட்டாங்களாமே?’’

‘‘அய்யய்யோ... அவங்க அப்படி சொல்லலை. முத்தம் கொடுக்குற மாதிரி நடிக்கக்கூடாதுன்னுதான் சொல்லியிருக்காங்க. ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. அன்றைக்கு ரொமான்ஸ் சீன் எதுவும் எடுக்காததால தப்பிச்சேன். ‘கட்டிப் பிடித்து நடிக்கக்கூடா து’ன்னு சொன்னா நடிக்கவே முடியாதே. நீங்க பாட்டுக்கு புதுசா கிளப்பி வீட்ல வம்பிழுத்து விட்டுடாதீங்க’’ என ஜி.வி ஜாலியாக பதற, சிரிப்பை சிதற விடுகிறார் ஊதா கலர் ரிப்பன்.

ஜி.வி.பிரகாஷ் ஜாலி பதற்றம்

- அமலன்