என்கவுன்டர்



ராஜேஷ்

‘‘சார், இடம் தெரிஞ்சுடுச்சி’’ - ராகவ் சொன்னவுடன், ‘‘டீமை அலெர்ட் பண்ணுங்க...’’ என்றேன் உற்சாகத்துடன். நான் உளவுத்துறையின் முக்கிய அதிகாரி. பல மாதங்களாக நாங்கள் தேடிய தீவிரவாதிகளின் இருப்பிடம் தெரிந்து விட்டது. சுற்றி வளைத்ததும் எதிர்ப்பே இல்லாமல் சரணடைந்தார்கள்.  ‘‘ஆபரேஷன் சக்சஸ்’’ என உயர் அதிகாரிக்கு தகவல் சொன்னேன்.

‘‘குட்! அவங்களை இப்ப என்ன பண்ணணும்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்!’’ ‘‘சாரி சார்! எனக்கு இது சரியா படலை...’’ ‘‘இப்ப அவங்க குற்றத்தை ஒத்துக்கிட்டாலும், நாளைக்கு கோர்ட்ல இல்லைன்னு சாதிப்பாங்க. அப்ப சாட்சி இல்லாம விடுதலை ஆவாங்க. அதுவரைக்கும் அரசாங்க செலவுல அவங்களுக்கு உபசாரம் பண்ணணுமா? சொன்னதைச் செய்யுங்க!’’

‘‘இல்ல சார்... சட்டப்படி நான் இவங்களை கோர்ட்ல ஒப்படைச்சுடறேன்’’ - செல்லை அணைத்தேன். அனைவரையும் வண்டியில் ஏற்றினேன். தீவிரவாதிகளின் தலைவன் என்னைப் பார்த்து சிரித்தான். ‘‘போன் பண்ணி சொல்லியும் இவ்வளவு லேட்டா வந்து பிடிக்கறீங்க? என்ன பார்க்கறீங்க... நாங்கதான் இன்ஃபர்மேஷன் சொன்னோம். எங்களுக்கு மருத்துவத் தேவைகள் இருக்கு. அதனாலதான் அரெஸ்ட் ஆனோம். ரெண்டு, மூணு வருஷத்துல கோர்ட் ரிலீஸ் பண்ணிடும். திரும்பவும் தொழிலைப் பார்க்க வேண்டியதுதான்!’’ சரியாக அவன் நெற்றியில் சுட்டேன்.