நல்ல கீரை விற்கும் இணையதளம்‘‘விதைப்பு விட்டு 15 நாளிலிருந்து 30 நாளுக்குள்ள கீரையை அறுவடை செஞ்சிடலாம். இந்த சின்ன இடைவெளியில 3 தடவை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கிறாங்க. கீரைங்கிற பேர்ல நாம சாப்பிடுறது முழுக்க முழுக்க விஷம். ஒரு நாளைக்கு சென்னையில மட்டும் 10 லட்சம் கட்டு கீரை விக்குது. ஒரு கீரைக் கட்டை 2 பேர் சாப்பிட்டாக் கூட தினமும் 20 லட்சம் பேர் விஷத்தைச் சாப்பிட்டுட்டு இருக்காங்க. இந்த அபாயத்துல இருந்து மக்களைக் காக்கற பொறுப்புணர்வுலதான் எல்லா வேலையையும் விட்டுட்டு கீரை சாகுபடி செய்ய வந்தேன்...’’ என்கிறார் ‘நல்ல கீரை’ ஜெகநாதன்.
ஜெகநாதனின் http://nallakeerai.com, விஷம் தோயாத இயற்கை வேளாண்மையில் விளைந்த 45 வகை கீரைகளை விற்பனை செய்கிறது. இதற்கென திருநின்றவூர் அருகேயுள்ள பாக்கம் கிராமத்தில் பெரும் பரப்பில் கீரை சாகுபடி செய்கிறார் இவர். ஜெகன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர் மேனேஜராக பணியாற்றியவர். வேளாண்மை மீதிருந்த நாட்டத்தாலும், சமூகத்தின் மேலிருந்த அக்கறையாலும் வேலையை விட்டு தீவிர விவசாயியாகி விட்டார். பன்னாட்டு நிறுவனங்களில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் தங்கள் பணிகளை உதறிவிட்டு ஜெகனோடு கை கோர்த்திருக்கிறார்கள்.
‘‘ஆவடிக்கு பக்கத்துல உள்ள மேலப்பேடுதான் என் ஊர். அப்பா, டேங்க் ஃபேக்டரியில வேலை பார்த்தவர். அம்மா ஆசிரியை. நான் ஒரே பையன். சின்ன வயசுல இருந்தே என் கிராமத்து மேல எனக்கு அக்கறையும் ஈர்ப்பும் உண்டு. எங்க கிராமத்தோட ஜீவாதாரம் விவசாயம். பெரும்பாலும் எல்லா விவசாயிகளுமே தங்கள் பிள்ளைகளும் விவசாயத்துல வீழ்ந்திடக்கூடாதுங்கிற பொறுப்புணர்வுல நல்லாப் படிக்க வச்சாங்க. நான் பி.காம் முடிச்சதுமே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில ஹெச்.ஆர் மேனேஜர் வேலை கிடைச்சுச்சு.
பள்ளிக்கூட வயசுலேயே நிறைய படிப்பேன். விவேகானந்தர், ஜே.சி.குமரப்பா புத்தகங்கள் எனக்குள்ள ஆழ்ந்த தேடலை உருவாக்குச்சு. குறைந்தபட்சம் நம் கிராமத்தையாவது நல்லபடியா வளர்த்தெடுக்கணும்ங்கிற உந்துதல் ஏற்பட்டுச்சு. கல்லூரியில படிக்கும்போதே நண்பர்களைச் சேத்துக்கிட்டு ஒரு டியூஷன் சென்டர் ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் அந்த டியூஷன் சென்டர் செயல்படுது. கூடப் படிச்ச நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போனாங்க. எல்லோரும் சேர்ந்து நிறைய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தோம். ஸ்ரீவிஷ்வ வித்யாஷ்ரம்னு ஒரு பள்ளியும் தொடங்கினோம். முற்றிலும் இலவசக் கல்வி.
ஒருநாள் இரவு, ஒரு மாணவிக்கு கல்லூரிக்கான கட்டணத்தை கொடுக்கிறதுக்காக அவங்க வீட்டுக்குப் போனேன். அந்தப் பெண்ணோட அப்பா வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கிட்டு படுத்திருந்தார். என்னன்னு விசாரிச்சேன். ‘சில நாட்கள்ல ராத்திரி சாப்பாடு இருக்காது. அதனால தான் இப்படி’ன்னு சொன்னா. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. இத்தனைக்கும் அவங்களுக்கு 2 ஏக்கர் சொந்த நிலம் இருக்கு. 2 ஏக்கர் வச்சிருக்கிற விவசாயி ஏன் வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கணும்ங்கிற கேள்வி என்னை துரத்தத் தொடங்குச்சு.
தன் கிராமத்தை மேம்படுத்தணும்ங்கிற நோக்கத்துல விஞ்ஞானி வேலையை உதறிட்டு வந்த கூத்தாம்பாக்கம் இளங்கோ அண்ணனை நான் அடிக்கடி சந்திக்கிறதுண்டு. அவர்கிட்ட இதைப் பத்தி விவாதிச்சேன். வறுமையை ஒழிக்கணும்னா முதல்ல அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கணும்னு அண்ணன் சொன்னார். என்கிட்ட டியூஷன் படிச்ச ஸ்டூடன்ட்ஸை வச்சி என் கிராமத்துல ஒரு சர்வே செஞ்சேன். ‘குடும்பத்துக்கு எங்கிருந்து பணம் வருது... வர்ற பணம் எங்கே போகுது...’ இதுதான் எங்க சர்வேயோட கான்செப்ட். 1 ரூபாய்க்கு ஷாம்பு வாங்கினாக்கூட எங்க சர்வேயில பதிவாகிடும். 1 வருடம் அந்த சர்வேயை ஃபாலோ பண்ணினோம்.
அதுல கிடைச்ச தகவல்கள் பெரும் அதிர்ச்சியை உருவாக்குச்சு. மொத்த வருமானத்துல 60% உரம், பூச்சிக்கொல்லி, மது, மருத்துவத்துக்கு மட்டுமே செலவாகியிருக்கு. எங்க ஊர்ல மொத்தம் 1000 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு வருஷத்துக்கு எங்க ஊர் விவசாயிகள் உரம், பூச்சிமருந்துக்கு செலவழிக்கிற தொகை, ரூ.90 லட்சம். ஒரு கிராமத்துல இருந்து மட்டும் 90 லட்சம்னா, இந்தியா முழுவது மிருந்து 1 வருஷத்துக்கு உரம், பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு போற தொகை எவ்வளவு?
விவசாயிகளை கஷ்டத்துல இருந்து மீட்க ஒரே வழி, அவங்களை இயற்கை விவசாயத்துக்கு நகர்த்துறதுதான். வெறும் பேச்சா இல்லாம, செயல்ல இறங்கினேன். வேலையை ரிசைன் பண்ணினேன். இந்தியாவில எங்கெல்லாம் இயற்கை விவசாயம் நடக்குதோ, அங்கெல்லாம் போனேன். ஓரளவுக்கு அனுபவத்தைத் திரட்டிக்கிட்டு 5 ஏக்கர் நிலத்தை லீசுக்கு எடுத்து வேலையை ஆரம்பிச்சுட்டேன்’’ - பெருமிதமாகச் சொல்கிறார் ஜெகன்.
ஜெகன் விவசாயத்தில் இறங்கியது 2011ல். 3 ஆண்டுகளில் ஏகப்பட்ட அனுபவங்களை அறுவடை செய்திருக்கிறார். நாட்டு மாடுகள் வளர்க்கிறார். இடுபொருட்கள் தயாரிக்கிறார். அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரையோடு லெமன்கிராஸ், கல் இளக்கி, சுக்கான், சுவாய் பினிச் போன்ற நாம் அறிந்திராத கீரைகளையும் விளைவிக்கிறார். கூடவே காய்கறிகள், மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம் என பாரம்பரிய நெல் ரகங்கள்... ஆறடிக்கும் மேலாக மலர்ந்து நின்று வியப்பூட்டுகின்றன இந்த நெற்பயிர்கள்.
‘‘கீரை சாகுபடி பண்றதுல பல பலன்கள் இருக்கு. குறைஞ்ச நாள்ல அறுவடை பண்ணிடலாம். கையில பணம் ரொட்டேஷன் இருக்கும். அதனால, முதற்கட்டமா 50 சென்ட்ல கீரை போட்டேன். 100 கட்டு, 200 கட்டுன்னு விற்பனை வளர்ந்துச்சு. இப்போ 5000 கட்டுல வந்து நிக்குது. என்னோட உத்வேகத்தைப் பாத்து நிறைய இளைஞர்கள் வந்தாங்க. யாரெல்லாம் உணர்வுபூர்வமா வர்றாங்களோ, அவங்க ஒவ்வொருத்தருக்கும் 50 சென்ட் நிலம் லீசுக்கு வாங்கிக் கொடுத்து இயற்கை வேளாண்மை பயிற்றுவிக்கிறேன்.
அவங்க விளைச்சலை நானே வாங்கி மார்க்கெட்டிங் பண்றேன். அப்படி இப்போ 50 ஏக்கருக்கு மேல எங்க குழுகிட்ட இருக்கு. ஆன்லைன் மார்க்கெட்டிங்ல வேளாண்மைக்கு பெரிய வெற்றிடம் இருப்பதை உணர்ந்தோம். அந்த இடத்தையும் நிரப்புறதுக்காகவே http://nallakeerai.com ஆரம்பிச்சோம். இப்போதைக்கு இது சோதனை முயற்சி. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் டோர் டெலிவரி பண்றோம். கூடிய விரைவில் இதை விரிவு
படுத்த திட்டமிருக்கு’’ என்கிறார் ஜெகன்.
அடுத்தகட்டமாக பால், பழம், தானியங்கள், அரிசி, காய்கறிகள் அடங்கிய பெரிய அளவிலான கலப்பு விவசாயப் பண்ணை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ‘நல்ல கீரை’ குழு. ‘‘இயற்கை வேளாண்மையில விளையுற பொருட்களை ஏழைகள் வாங்கமுடியாதுன்னு ஒரு எண்ணம் இருக்கு. அதை நாங்க மாத்துவோம். ரைஸ் மில், எண்ணெய் ஆலை, பால் பண்ணைன்னு அடுத்தடுத்த கட்டமைப்புகளையும் உருவாக்கிட்டா இயற்கை வேளாண்மை பெரிய இண்டஸ்ட்ரி ஆகிடும். அதை நோக்கி நகர்ந்துக்கிட்டிருக்கோம்...’’ என்கிறார் ஜெகன்.
ஜெகனைப் பார்க்கும்போது பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது!
2 ஏக்கர் வச்சிருக்கிற விவசாயி, பசிக்கு சாப்பிட உணவில்லாம ஏன் வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கணும்ங்கிற கேள்வி என்னை துரத்தத் தொடங்குச்சு...
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்