பலூனில் பறந்துவந்து கல்யாணம்!



ஸ்கை டைவிங்கில் விழுந்துகொண்டே கல்யாணம் செய்வது, கப்பலில் மிதந்துகொண்டே மோதிரம் மாற்றுவது என கல்யாணத்தில் சாகசங்களை விரும்புவது பெரும்பாலும் வெளிநாட்டினர்தான். நம் ஊரில் கல்யாணம் என்பதே சாகசம்தானே! ஆனால், இப்போது இங்கேயும் வித்தியாச விரும்பிகள் பெருகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் சென்னை அருகே நடந்திருக்கும் இந்த ‘பலூன் கல்யாணம்’.

பழங்கால காரிலிருந்தும் குதிரை வண்டியிலிருந்தும் மணமக்கள் வந்திறங்குவதுதான் வழக்கம். ஆனால், இங்கே பிரமாண்ட பலூனில் பறந்துவந்த மணமக்கள், திருமண மேடைக்கு கைகோர்த்து வர, பரவசத்தில் மூழ்கிப் போகிறது கூட்டம். கூடவே பட்டாசு முழங்க... ஆரவாரத்தோடு நடந்து முடிந்தது திருமணம். ‘‘ரொம்ப நாளா பண்ணின ப்ளான் இது. நல்லபடியா முடிஞ்சிருக்கு...’’ என மகிழ்ச்சித் துள்ளலோடு பேசுகிறார் மணமகளின் சகோதரரான வினோத்.

‘‘எங்களுக்கு பூர்வீகம் ராஜஸ்தான் சார்... ரொம்ப காலத்துக்கு முன்னாடியே பாண்டிச்சேரி வந்து செட்டிலாகிட்டோம். இங்க நகை வியாபாரம். எனக்கு இரண்டு தங்கச்சிங்க. இப்ப நடந்தது முதல் தங்கச்சி சாந்தினியோட மேரேஜ். எந்தக் குறையும் தெரியாம தங்கச்சிங்க கல்யாணத்தை சிறப்பா பண்ணணும்னு ஐடியா பண்ணிட்டே இருந்தேன். எப்பவும் ஞாபகத்தில் நிக்கிற மாதிரி ஏதாவது புதுசா பண்ணணும்னு தோணிச்சு.

அதுல வந்த ஐடியாதான் இந்த பலூன் கல்யாணம். எங்க வழக்கப்படி முதல்ல மாப்பிள்ளைய குதிரையிலிருந்துதான் கூப்பிட்டு வருவோம். அதே மாதிரி அழைச்சிட்டு வந்து, திடீர்னு மாப்பிள்ளை திலீப்பை பலூன்ல ஏத்திட்டோம். இது அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் தெரியாது. சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு செஞ்சோம். 150 அடி உயரம் வரை போயிட்டு, கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கீழே இறங்கி மணமேடைக்கு வந்து மாலை மாத்தினாங்க. வந்திருந்த சொந்தக்காரங்க நிறையப் பேர் ஆச்சரியப்பட்டு வாழ்த்தினாங்க’’ என்கிறார் அவர் உற்சாகம் குறையாமல்.

‘‘நம்மூர்ல இப்படி வித்தியாசமா செய்யச் சொல்லி கல்யாண வீட்டுக்காரங்க இப்பதான் சார் கேக்க ஆரம்பிச்சிருக்காங்க’’ என்கிறார் இந்தக் திருமண ஏற்பாடு களை நடத்திக் கொடுத்த ‘ஐஸ் வெட்டிங்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் அருண். ‘‘இப்படிப்பட்ட கல்யாணத்துக்கு ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’னு பேரு. அதாவது, இரு வீட்டாருக்கும் பொதுவா ஒரு ஊர்ல நடத்தப்படுறது. மகாபலிபுரம் பக்கம் ஒரு ரிசார்ட்ல தான் இதை நடத்தினோம். இந்த மாதிரி பலூன்ல திருமணம் செய்யறது ராஜஸ்தான்ல அதிகம்.

காரணம், அங்க வானிலை நல்லா இருக்கும். பலூனைப் பொறுத்தவரை சுற்றுவட்டாரம் குளிர்காற்றா இருக்கணும். அப்ப தான் பலூனை வெப்பக் காத்துல பம்ப் பண்ண முடியும். இந்தக் கல்யாணத்தையும் பலூன்ல பண்ணலாம்னுதான் ஐடியா. ஆனா, கிளைமேட் ஒத்துக்கல. அதான் பலூன்ல இருந்து இறங்கி வர்ற மாதிரி செஞ்சோம். அங்கிருந்து மணமேடைக்கு லிப்ட் ஒண்ணு போட்டு அப்படியே நேரா அழைச்சிட்டு வந்தோம். எல்லா ஏற்பாடும் வித்தியாசமா அமைஞ்சிருந்தது. எங்களுக்கே இதில் ஒரு மனத் திருப்தி!’’ என்கிறார் அவர் சந்தோஷம் பொங்க! இனி, திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டுமல்ல... பலூனிலும் நிச்சயிக்கப்படலாம்!

குதிரையில் வந்தமாப்பிள்ளையை திடீர்னு பலூன்ல ஏத்திட்டோம். 150 அடி உயரம் வரை பலூன்ல பறந்து போயிட்டு, கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கீழே இறங்கி மணமேடைக்கு வந்து மாலை மாத்தினாங்க.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: விவேகானந்தன்