பிரகாஷ் ஷர்மா‘‘காலையில இருந்து ஏகப்பட்ட வேலை! எல்லா துணியும் துவைச்சு, காயப்போட்டு, அயர்ன் பண்ணி, பீரோவுல எடுத்து வச்சாச்சு. வீடு பூராவும் க்ளீன் பண்ணி, ஒட்டடை அடிச்சு, ஜன்னல் ஸ்கிரீன் எல்லாம் எடுத்துத் துவைச்சு, வாசலை துடைச்சு மெழுகி, சுண்ணாம்பு பார்டர் கட்டி... அப்பப்பா! முடியலை!’’ - மனைவி அலுத்துக்கொண்டாள்.
‘‘அடடா... ஏகப்பட்ட வேலைன்னா கொஞ்சம் கொஞ்சமா முடிக்கலாமே... ஒரே நாள்ல ஒரேயடியா செஞ்சுட்டு ஏன் கஷ்டப்படுறே?’’ - பரிதாபமாய்க் கேட்டேன் நான். லேசாய் கை, கால் அமுக்கி விட்டதும் அயற்சியில் தூங்கிப் போனாள் அவள்.
காலையில் எழுந்து காபி போட்டுக் கொடுத்தவள், அதனோடு வீட்டு பட்ஜெட் லிஸ்ட்டை நீட்டினாள். ‘‘துணி துவைக்கிற பொம்பளைக்கு மாசம் ஆயிரம். அயர்ன் பண்ணி வீட்டுல டெலிவரி கொடுக்குறவனுக்கு மாசம் தொள்ளாயிரம். பாத்திரம் தேச்சு, வீட்டை சுத்தம் பண்ணுற கிழவிக்கு ஆயிரம்...’’
என அடுக்கிக் கொண்டே போன மனைவியிடம், ‘‘நீயே செஞ்ச மாதிரி அலுத்துக்கிட்டியே?’’ என்றேன் மீண்டும் பரிதாபமாக! ‘‘மேயறதை விட மேய்க்கறதுதான் கஷ்டம். அதைப் புரிஞ்சுக்குங்க மொதல்ல!’’ என்றாள் நறுக்கென்று. எல்லோரும் புத்திசாலியாகவும் நான் மட்டும் முட்டாளாகவும் இருப்பது போலப் பட்டது எனக்கு.