வி.சிவாஜி
‘‘அம்மனுக்கு அர்ச்சனை பண்ணின குங்குமத்தை இட்டுக்கம்மா!’’ - மருமகள் ரேவதியிடம்
அன்பாகச் சொன்னாள் பார்வதி.
‘‘வேண்டாம் அத்தை... வியர்வையில் அழிஞ்சிடும். ஸ்டிக்கர் பொட்டே வச்சுக்கறேன்.’’ ‘‘இல்லம்மா... வெளியே போகும்போது ஸ்டிக்கர் பொட்டு வச்சுக்க. இப்போ வீட்லதானே இருக்கே? அதோட, அர்ச்சனை குங்குமம் இட்டுக்கறது தான் நம்ம வீட்டு வழக்கம்!’’
‘‘இல்லேம்மா... உங்க வழக்கத்தை என்மேல் திணிக்காதீங்க!’’ - பட்டென்று ரேவதி இப்படிச் சொல்வாள் என்று பார்வதி எதிர்பார்க்கவில்லை. அன்று ரேவதியின் அம்மா, அப்பா வந்திருந்தார்கள். அவர்கள் புறப்படத் தயாரானபோது, பூஜையறைக்குள் போன பார்வதி, வெள்ளித் தட்டில் ஒரு பாக்கெட் ஸ்டிக்கர் பொட்டுகளைக் கொட்டி ரேவதியின் அம்மாவிடம் நீட்டினாள். ஒரு நிமிடம் திகைத்தவள், ஒரு பொட்டை எடுத்துக்கொண்டாள்.
வாசலில் வழியனுப்பிய ரேவதியிடம் அவள் அம்மா பேசியது கேட்டது. ‘‘என்னடி உன் மாமியார்..? வழி அனுப்பும்போது குங்குமம் தர்றதுதானே வழக்கம்? என்னதான் மாடர்னா ஆனாலும் சில வழக்கங்களை மாத்த முடியுமா? இனிமே இப்படி நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லி வை!’’ அவர்கள் போனதும் உள்ளே வந்த ரேவதி, குங்குமம் இட்டுக்கொண்டு பார்வதியிடம் வந்தாள். ‘‘எனக்கு புரிஞ்சுடுச்சு அத்தே!’’ என்றாள் பணிவுடன்.