கவிதைக்காரர்கள் வீதி



பாசம்
எஜமானன் மீது தனக்குள்ள
மொத்த பாசத்தையும்
வாலில்தான்
தேக்கி வைத்திருக்கிறது போலும்
நாய்
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தூது
நண்பன், நண்பி,
அடுத்த வீட்டுப் பொடியன்,
தபால்காரர், மளிகைக்கடை பையன்,
தம்பி, தங்கைகள் என
எவரும் தேவையில்லை இன்று
ஒரேயொரு எஸ்.எம்.எஸ் போதும்
காதலுரைக்க...
காயத்ரி, சென்னை.

வேண்டுதல்
சாலையோர
பஞ்சர்கடைக்காரனின் வேண்டுதல்
பலிக்கத்தான் செய்கிறது,
விரையும் ஒன்றிரண்டு வாகனங்கள்
எப்போதாவது பஞ்சர் ஆகும்போது!
-பாலுவிஜயன், சென்னை.

திரும்பாதது
அடகுக்கடையினை
கடக்கும்பொழுதெல்லாம்
வெறுங்காதினை
வருடிப்பார்க்கிறாள்
ஏழைத் தாயொருத்தி.
- கி.சார்லஸ்,
காரப்பிடாகை.

மலரோ...
பறக்கும் மலரென எண்ணி
வண்டு துரத்துகிறது
வண்ணத்துப்பூச்சியை
- கா.பசும்பொன்,
மதுரை.

தாத்தா
ஊருக்கே
அவர் பிச்சைக்காரர்
குழந்தைக்கு மட்டுமே
தாத்தாவாகிறார் 
- கவி கண்மணி,
கட்டுமாவடி.