ஒரு புதுமை உணவகம்
உங்களில் எத்தனை பேர் சிறைக்குள் போய்ப் பார்த்திருப்பீர்கள்? அந்த சிறை அட்மாஸ்பியரை அப்படியே தரும் காஸ்ட்லி ஹோட்டல் ஒன்று இப்போது தமிழகத்தில்!
‘‘கண்ணா... ஜெயில்ல களி தின்ன ஆசையா?’’ - மிரட்டலும் மிடுக்குமாக இப்படித்தான் கேட்கிறது அந்த ஹோட்டல். சென்னையின் பரபர ஏரியாவான மயிலாப்பூரில் சென்ட்ரல் ஜெயில் கேட் போலவே கதவுகளோடு கவனத்தைப் பிடுங்குகிறது இந்த ‘கைதி கிச்சன்’.
உள்ளே சென்றால் கைதிகளின் உடையில் சர்வர்கள், ஜெயிலர் யூனிஃபார்மில் சூப்பர்வைசர்கள், சுவரெங்கும் மாட்டி வைக்கப்பட்ட டம்மி துப்பாக்கிகள், குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும் கேபின் கூட, அப்படியே சிறைக்கம்பி அறைகளாக... இப்படியொரு ஹோட்டலா என எடுத்த எடுப்பில் யாரும் அலறுவது நிச்சயம்!
‘‘சினிமாவுல காட்டுற தாஜ்மகாலையும் ஈஃபில் டவரையும் கூட நேர்ல போய் பார்த்துட்டு வர்றவங்க இருக்காங்க. ஆனா, ஜெயிலை எத்தனை பேர் பார்த்திருப்பாங்க சொல்லுங்க? ஆர்வத்தோட ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம்னு கிளம்ப அது டூரிஸ்ட் ஸ்பாட்டும் இல்ல. ஸோ, ஜெயிலை நேர்ல பார்க்குற பரவசத்தை எங்க ஹோட்டல் தருது’’ - கலகல அறிமுகம் தருகிறார்கள் ஆதித்யா, ரிச்சா தம்பதி. கைதி கிச்சன் சென்னை கிளையின் முதலாளிகள்.
அப்போ வேற கிளைகளும் இருக்கா? ‘‘யெஸ்... கொல்கத்தால இருக்கு... அதனோட பிராஞ்ச்தான் இது’’ என்கிற ஆதித்யா, ஹோட்டல் உருவான பின்னணியை எடுத்து வைக்கிறார்...
‘‘நான் கொல்கத்தால பிறந்தாலும் படிச்சது வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். கொல்கத்தாவுக்கும் அடிக்கடி போவேன். அங்க இருக்குற ‘கைதி கிச்சன்’ ஹோட்டல்ல ஒரே ஒரு தரம் சாப்பிட்டேன். அந்த அனுபவமும் டேஸ்ட்டும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எங்க குடும்பத்துல எல்லாரையும் கூட்டிட்டுப் போனேன். எல்லாரும் அந்த சுவைக்கு ஃபேன் ஆகிட்டாங்க.
ப்யூர் வெஜ்னு இங்கே நிறைய ஹோட்டல் இருக்கு. ஆனா, எல்லாமே சவுத் இண்டியன் ஸ்பெஷல். சவுத் மட்டுமில்லாம, நார்த் இண்டியன், இத்தாலியன், லிபியன், சைனீஸ் உணவுகள்லயும் சுத்த சைவ உணவுகள் இருக்கு. அதையெல்லாம் அசல் சுவையில ‘கைதி கிச்சன்’ தந்துச்சு. இப்படி ஒரு ஹோட்டலை சென்னையில ஆரம்பிக்கலாமேன்னு தோணிச்சு’’ என்கிற ஆதித்யாவைத் தொடர்கிறார் மனைவி ரிச்சா...
‘‘ஜெயில்ங்கற ஐடியாவையும் செட்டப்பையும் யார் வேணா கொண்டு வந்துடலாம். ஆனா, டேஸ்ட்டைக் கொண்டு வர முடியாது. அதனாலதான் கொல்கத்தா கைதி கிச்சன் நிர்வாகத்துகிட்டேயே நேரடியா பேசினோம். அவங்களுக்கு ஃப்ரான்சைஸி கொடுக்க விருப்பம் இல்லைன்னாலும், எங்க குடும்பமே அவங்க ஹோட்டலுக்கு ரசிகர்கள்னு தெரிஞ்சதும் நம்பி சம்மதிச்சாங்க’’ என பளிச் புன்னகை பூக்கிறார் ரிச்சா.
‘‘ஆரம்பிச்ச ஒரே மாசத்துல நல்ல ரிசல்ட் தெரியுது. யங்ஸ்டர்ஸ் பார்ட்டி கொடுக்க த்ரில் ஸ்பாட்டா இதைத் தேர்ந்தெடுக்கறாங்க. லவ்வர்ஸும் நிறைய பேர் வர்றாங்க. பொண்ணுங்ககிட்ட இங்க வச்சி ப்ரபோஸ் பண்ணா, குடும்ப சிறையில சிக்கிக்கறதுக்கு பொருத்தமா இருக்கும்னு பசங்க ஃபீல் பண்றாங்க. நல்ல விஷயம்தானே!’’ என்றபடி விடை தருகிறார் ஆதித்யா. ‘ஒரு குத்து டான்ஸும் போட்டாதான் ஜெயில் மாதிரி இருக்கும்’னு நம்மாளுங்க சொல்வாங்க... கேர்ஃபுல்!
பொண்ணுங்ககிட்ட இங்க வச்சி ப்ரபோஸ் பண்ணா, குடும்ப சிறையில சிக்கிக்கறதுக்கு பொருத்தமா இருக்கும்னு பசங்க ஃபீல் பண்றாங்க...
-டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்