ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



ஒரே ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போனார் நர்கீஸ் ஃபக்ரி. உடனே, ‘நர்கீஸ் இனி இந்திப் படங்களில் நடிக்க மாட்டார்’ என வதந்தி கிளம்பிவிட்டது. உடனே பதறியடித்து, ‘‘எனக்கு வாழ்வு கொடுத்த பாலிவுட்தான் முக்கியம். மும்பையைவிட்டு நான் எங்கும் போக மாட்டேன்’’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் நர்கீஸ்.

கேமரூன் டயஸ் எவ்வளவு ஹாட்டான இடங்களுக்கு ஷூட்டிங் போக நேர்ந்தாலும், உடலில் டியோடரன்ட் எதுவும் பயன்படுத்துவதில்லை. ‘‘டியோடரன்ட் போடுவதால் வியர்வை வாசம் மறைவதில்லை. உடல்தான் அழுக்காகிறது. இதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை’’ என்கிறார் அவர்.

‘அர்ப்பணிப்பு’ என்ற வார்த்தைக்கு ‘கேத்ரினா கைஃப்’ என டிக்ஷனரியில் அர்த்தம் எழுதி விடலாம். ‘பேங் பேங்’ படத்துக்காக ஹ்ரித்திக் ரோஷனுடன் ஒரு டான்ஸ். பல கோடி ரூபாய் செலவில் ஒரு நகரத்து செட்டை உருவாக்கி, அதில் ஷூட்டிங் நடந்தது. பிரேக்கே இல்லாமல் தொடர்ச்சியாக 14 மணி நேரம் ஆடிக் கொடுத்தார் கேத்ரினா. இத்தனைக்கும் டான்ஸுக்கும் அவருக்கும் பல மைல் தூரம்! ஒருமுறை ஸ்டெப் வைக்கும்போது கால் சுளுக்கிக் கொண்டது. வலியில் கிளம்பிவிட்டால் புரொட்யூசருக்கு நெஞ்சு வெடித்துவிடும் நஷ்டம் ஏற்படும். அதனால் பொறுத்துக்கொண்டு நடித்தவரின் புகழ் பாடுகிறது பாலிவுட்.

விநோதமான பிறந்த நாள் பரிசுகளைப் பலர் தருவதுண்டு. ஆனால் இது, மிரள வைக்கும் பரிசு! நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்டுக்கு அவரது அம்மா கொடுத்தது, ஒரு குட்டி ஓநாய். காட்டிலிருந்து வழி தவறி வந்ததை வளர்க்கக் கொடுத்திருக்கிறார். ‘‘வீட்டில் வைத்துப் பழக்கினால் இது சாதுதான்’’ என்கிறார் ஸ்டீவர்ட்.

இந்தோ - ஜெர்மனி கூட்டுப் படைப்பான, மாடல் எவ்லின் சர்மா இதுவரை குட்டிக் குட்டி வேடங்களில் நடித்து வந்தார். ‘டாங்க்’ படத்தில் அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்திருக்கிறார், இயக்குனர் டேவிட் தவான். இதற்காக தவானை ஓயாமல் புகழ்ந்துகொண்டிருக்கிறார் எவ்லின்.

- ரெமோ