நான் உங்கள் கரம் பற்றியிருக்கிறேன். நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், உங்களுக்கு நன்மை மட்டுமே செய்வேன்!
, பாபா மொழி ‘‘ஒருவருக்கு உயிர் தர வேண்டும்’’ என்று பாபா சொன்னதும் மற்றவர்களுக்கு, அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.
‘‘நீங்கள் எல்லோரும் இப்பொழுது போங்கள். இரவு வாருங்கள். அப்பொழுது நான் எல்லா விவரமும் சொல்கிறேன்’’ என பாபா சொன்னதும் அவர்கள் குழப்பத்தோடு சென்றார்கள்.
மீண்டும் இரவு பத்து மணிக்கு எல்லோரும் கூடினார்கள்.
‘‘வாருங்கள், வாருங்கள்... சொல்வதைக் கேளுங்கள். நான் ஒருவருக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கணும். அதனால் மூன்று நாட்களுக்கு நான் பிணம் போல இருப்பேன். ஆனால், சாக மாட்டேன். இந்த மூன்று நாட்களுக்கு யாரும் என் உடலை அசைக்கவோ, தீண்டவோ, எழுப்பவோ வேண்டாம்’’ என்றவர் ஒரு மூலையைச் சுட்டிக் காட்டி, ‘‘அந்த மூலையைப் பாருங்கள். அங்கு சமாதி எழுப்பி, அதன் மீது என் உடலை வையுங்கள்’’ , உறுதியான குரலில் பாபா, மகல்சாபதியைப் பார்த்துச் சொன்னார்... ‘‘மகல்சாபதி, நீ மிகவும் எச்சரிக்கையுடன் விழித்திரு. மூன்று நாட்கள் வரை என்னை அலட்சியம் செய்யாதீர்கள். என்னை மறந்து விடாதீர்கள். என்னை சமாதியில் வைத்த பிறகு, அந்த இடத்தில் இரண்டு அடையாளங்களை வைத்திடுங்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் எழுவேன்! இப்பொழுது நான் உயிரை விடுகிறேன்!’’
எல்லோரும் கலக்கத்தோடு தலை அசைத்தார்கள்.
பாபாவின் சரீரம் முதலில் நடுங்கலாயிற்று. விழிகள் மேலே செருகின. கொஞ்சம் கொஞ்சமாகக் கண்கள் மூடின. தலை சுற்றிக் கீழே விழுவது போல, பாபா விழுந்தார். சரீரம் வேகமாகத் துடித்தது. பிறகு நின்றது.
அவருடைய உடல் அசைவற்றுக் கிடந்தது. நாடித் துடிப்பு நின்றது. இதயத் துடிப்பும் நின்றது. சுவாசமும் நின்றது. பிரேதம் போலக் காணப்பட்டார் பாபா. மகல்சாபதி உடனே கீழே உட்கார்ந்து, தன் மடியில் பாபாவைக் கிடத்திக் கொண்டார். இதைக் கண்டு மற்றவர்கள் துணுக்குற்றார்கள். பாபாவிற்கு என்னவாயிற்று? சற்றுமுன் பூத்தமலர் போல இருந்த பாபாவின் தேகம், இப்போது உயிரற்ற சடலமாக எப்படி ஆயிற்று? ‘‘மகல்சாபதி...’’
‘‘ம்...’’
‘‘பாபா சமாதிக்காகக் குழி தோண்டி வையுங்கள் என்றாரே?’’ என காசிராம் வினவினான்.
‘‘நான் பாபாவின் தலையை என் மடியில் தாங்கி இங்கேயே உட்காருகிறேன். சமாதிக்காகக் குழி தோண்ட வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்!’’
‘‘சரி, நீங்கள் எவ்வளவு நாட்கள் இப்படியே உட்காருவீர்கள்?’’ , மாதவராவ் கேட்டார்.
‘‘பாபா எழுந்திருக்கும் வரை!’’
‘‘மூன்று நாட்களுமா?’’
‘‘ஆமாம்’’
‘‘சரியாப் போச்சு... இப்படி குரு , சிஷ்யனின் பக்தி அல்லது ஆண்டவன் , பக்தனின் ஜோடி, இதற்கு முன் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்!’’ என்ற மாதவராவ், இருவரையும் பார்த்துக் கை கூப்பினார்.
நடு இரவு நகர்ந்தது. யாரும் தூங்கவில்லை, யாரும் பேசவில்லை. ஒருவித அசாதாரணமான சூழ்நிலை அங்கு நிலவியது. கடைசியில் மகல்சாபதி கூறினார். ‘‘அன்பர்களே, நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போங்கள்... நான் இங்கு இருக்கிறேன்!’’
‘‘ஆனால் நான் இங்கேதான் தங்குவேன்’’ என்றான் தாத்யா.
‘‘சரி!’’
வணங்கிவிட்டு எல்லோரும் இருளில் மறைந்தார்கள். எல்லோருடைய மனங்களிலும் இருட்டு பரவியிருந்தது.
விடிந்ததும் இச்செய்தி ஷீரடி முழுவதும் காட்டுத்தீ போலப் பரவிற்று. ஊர் மக்கள் எல்லோரும் கூடினார்கள். பாபா உடலை மட்டும் இங்கு விட்டு விட்டு, உயிரைத் தியாகம் செய்துவிட்டதாகச் சிலர் எண்ணினார்கள். எல்லோரும் கண்ணீர் விட்டார்கள். பாய்ஜாபாயி, ரக்குமாபாயி போன்ற பெண்கள் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அழுதார்கள். சிறிது சிறிதாக இந்தச் செய்தி அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பரவியது. பலரும் சாயியைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக வரலானார்கள்.
பாய்ஜாபாயி அழுவதை நிறுத்தவேயில்லை. கடைசியில் தாத்யா அவளை வெளியே கொணர்ந்தான். அங்கு பெருங்கூட்டம் இருந்தது. எல்லோருக்கும் கேட்கும் வகையில் பெரிதாக அவன் கத்தினான்... ‘‘தாய்மார்கள் அழுவதை நிறுத்துங்கள். துக்கத்தை அடக்குங்கள். இங்கு துக்கப்படும்படியான சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை. நான் சொல்வதைக் கேளுங்கள். யாரும் பயப்பட வேண்டாம்!’’
‘‘ஆனால்...’’ , கூட்டத்தில் சந்தேகத்துடன் கேட்டான் ஒருவன்.
‘‘ஆனால் கீனால் எல்லாம் இல்லை. பக்தன் ஒருவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்துவிட்டுத் திரும்புவதாக பாபா எங்களிடம் சொன்னார். மூன்று நாட்களுக்கு அவர் இந்த நிலையில் இருப்பார். பிறகு உயிருடன் எழுந்துவிடுவார். எனவே, இங்கு துக்கம் கொண்டாடாதீர்கள். பாபா மீது நம்பிக்கை வையுங்கள். இப்போது திரும்பிச் செல்லுங்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு மறுபடி வாருங்கள். யாராவது அழுதால் பாபாவிற்குப் பிடிக்காது. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் கிளம்பலாம்!’’
தாத்யா எல்லோரையும் பார்த்துக் கை கூப்பினான். ஜனங்களும் பாபாவை வணங்கிவிட்டு, திருவிழாவிற்கு வந்தவர்கள் மெல்லக் கலைந்து செல்வது போல நாலா பக்கமும் போனார்கள்.
பாய்ஜாபாய், கண்களைத் துடைத்துக்கொண்டாள். ‘‘பாய்ஜா, இந்தப் பையன் பெரிய யோகி. அவனுடைய விளையாட்டு நமக்கெல்லாம் எங்கே விளங்கப் போகிறது? உன்னை தாய் என்கிறான். என்னை அத்தை என்கிறான், இது நாம் செய்த பாக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு எழுந்திருப்பேன் என்று சொன்னானாமே... அவன் அப்படியே செய்வான். நிச்சயம் திரும்பி வருவான். நீ கவலைப்படாதே, நாம் கிளம்பலாம்’’ என்றாள் ஒரு வயதான மூதாட்டி.
மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். பிரேதம் போலப் படுத்திருக்கும் பாபாவின் உடலையும், அதைத் தன் மடியில் தாங்கிக் கொண்டிருக்கும் மகல்சாபதியையும் ஆவலுடனும் பக்தியுடனும் பார்த்துச் சென்றார்கள். ஊரில் வேறொரு நாடகம் ரகசியமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. பாபாவை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது. அதில் காளோபா என்பவன், குல்கர்னி வீட்டிற்கு ஓடி வந்தான். அவனைப் பார்த்ததும் குல்கர்னி மிக சந்தோஷப்பட்டான்.
‘‘வாப்பா காளோபா! உன்னைப் பார்த்தால் ஏதோ விசேஷமான செய்தி கொண்டு வந்திருப்பது போல் தெரிகிறது. முதலில் வெற்றிலை போடு! வெற்றிலை மென்று கொண்டே விஷயத்தைச் சொல்...’’
குல்கர்னியே வெற்றிலை மடித்து காளோபாவுக்குக் கொடுத்தான். அதில் இருந்த லவங்கமும் ஏலக்காயும் பல்லிடுக்கில்பட்டதும், ருசி ஏறியது. முகம் பிரகாசமடைந்தது இருவருக்கும்.
‘‘இப்போது சொல் காளா...’’
‘‘வைத்தியராஜ், சாய்பாபா இறந்துவிட்டார்!’’
இதைக் கேட்டு குல்கர்னி திடுக்கிட்டு எழுந்து நின்றான். அவன் கண்கள் அவ்வளவு பெரிதாக விரிந்தன. அதைப் பார்த்த காளோபாவிற்கு, எங்கே விழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடுமோ எனப் பயம் வந்தது!
‘‘எ...ன்...ன சொன்னாய்?’’
‘‘பாபா இறந்தார்!’’
‘‘கொஞ்சம் இரு. என்னால் இதைத் தாங்க முடியவில்லை’’ , புரை ஏறியதால் தலையில் அடித்துக்கொண்டு, ‘‘காளோபா, நானும் மனிதன்தானடா. இந்த விஷயத்தை எப்படிடா பொறுத்துக்கொள்வேன்! அந்த சாயி செத்தானா?’’ என்றான்.
‘‘ஆமாம்!’’
‘‘அந்த கபடதாரி செத்துவிட்டானா?’’
‘‘ஆமாம்... ஆமாம்!’’
‘‘அந்த யோகி, சொர்க்கத்திற்குப் போய்விட்டானா?’’ , தன்னுடைய வெறுப்பையெல்லாம் வாந்தி எடுத்தான். காரணமில்லாமல், திருப்பித் திருப்பி கேட்ட கேள்விகளையே கேட்டான் குல்கர்னி. இது காளோபாவிற்கே பிடிக்கவில்லை.
‘‘ஆமாம்... ஆமாம்... ஆமாம்...!’’
‘‘எப்பொழுது நடந்தது இது?’’
‘‘நேற்றிரவு...’’
‘‘உனக்கு எப்பொழுது தெரிந்தது?’’
‘‘இப்போதுதான். ஒரு மணி
நேரத்திற்கு முன்பு!’’
‘‘நீ நம்புகிறாயா?’’
‘‘நிச்சயமாக, நான் என் கண்களால் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். மசூதியில் அவர் உடல் கிடக்கிறது. முதலில் அதை உறுதி செய்துகொண்டு, பிறகு உங்களிடம் சொல்ல பறந்து வந்தேன்!’’
அதற்குள் ஏதோ சொல்ல வந்தான் குல்கர்னி. உள்ளேயிருந்து வெளியில் வந்த தன் மனைவியைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டான்.
‘‘எங்கே போக ஆயத்தம், சௌபாக்கியவதியே?’’ , இடது பக்கம் சாய்ந்து, வக்கிரப் பார்வையுடன் கேட்டான்.
‘‘வெளியில் போய் வருகிறேன்!’’
‘‘எங்கே?’’
‘‘இங்கதான்...’’
‘‘இப்படியெல்லாம் வெளியில் போக, யாரும் அனுமதி கொடுக்கவில்லை, சௌபாக்கியவதி!’’
‘‘ரொம்பவும் கேலி செய்யாதீர்கள்!’’
அவள் முன்னே சென்றாள்.
‘‘உன்னுடைய கணவன் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நீ அதைப் பொருட்படுத்தாமல், வாசலைத் தாண்டிப் போவது, நம்முடைய குல்கர்னி குலத்திற்கு பழக்கமில்லையே!’’
‘‘நான் என்ன செய்ய? நான் எங்கு செல்ல விரும்பினேனோ, அங்கு செல்வதற்குத் தடை விதித்தீர்கள். இன்று நான் போகத்தான் போகிறேன். என்னை நீங்கள் வீட்டை விட்டுத் துரத்தினாலும் சரி!’’ , அவள் உறுதியுடன் கூறினாள். அவளுடைய கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
‘‘நான் இன்று தடுக்க மாட்டேன்’’ காளோபா எதிரில் அதிகம் அவமானப்படாமல் இருக்க, குல்கர்னி சொன்னான். ‘‘நீ எங்கே போகிறாய் என்பதையாவது சொல். உன்னை ஊர் முழுக்க தேட முடியாது!’’ ‘‘நான் சாயிபாபாவை பார்க்கப் போகிறேன்!’’ ‘‘அப்படியா சங்கதி? அப்படியானால், காளோ சொன்னதையெல்லாம் நீ கேட்டுக் கொண்டிருந்தாய். சரி... சரி... போய் வா... கடைசியாக அவர் முகத்தைப் பார்த்து வா. ஒன்று சொல்கிறேன்... ஞாபகத்தில் வை. இப்போது அவர் மேல் எனக்கு எந்தவிதமான வெறுப்போ, எதிர்ப்போ கிடையாது. செத்த பிறகு எதற்குப் பகை? நீ தாராளமாக அவரைப் பார்க்கப் போகலாம். போய் வா... முடிந்தால், கொல்லையில் இருக்கும் நாலு பூக்களைப் பறித்துச் சென்று, சாயியின் சடலத்தின்மீது போடு, போ...’’
‘‘சாயி உயிருடன் இருக்கும்போது, அவரைப் பார்க்க என்னை விடவில்லை. இப்பொழுது ரொம்ப பரந்த மனதுடன், கரிசனம் என்ன வேண்டிக் கிடக்கு?’’ என்று கேட்டுவிட்டு அவள் விரைந்தாள். பாபா மீது அவள் உயிரையே வைத்திருந்தாள். அவரின் தரிசனம் கிடைக்கவில்லை. தன் கணவனின் மூர்க்கத்தனத்தினால் அவள் பொறுத்தாள். காளோபா சொன்னதைக் கேட்டு, ஒரு முடிவு எடுத்து, அவரைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.
‘‘காளோபா! ஊரெல்லாம் நான், ‘சாய் கடவுள் அல்ல. ஒரு மாய, வினோதமான மனிதன்’ என்றும் அவர் மேல் பக்தி செலுத்தாதீர்கள் என்றும் சொன்னேன். ஆனால், என் வீட்டிலேயே என் மனைவி அவருடைய பக்தை! இதற்கு என்ன செய்வது?’’ , தன்னுடைய அடர்ந்த குடுமியை முடிந்துகொண்டே குல்கர்னி சொன்னான்.
‘‘விளக்கின் கீழே இருட்டு!’’
‘‘சரியாகச் சொன்னாய். இப்போது நாம் சாவகாசமாகப் பேசலாம். காரணம், என் கீழிருந்த இருட்டு வெளியில் போய்விட்டது. சரி காளோபா, நிஜமாகவே அவன் இறந்துவிட்டானா?’’
‘‘ஊரே அங்கு கூடியிருக்கிறது. நானே அருகில் சென்று பரிசோதித்துப் பார்த்தேன். சுவாசம், இதயம் எல்லாம் நின்றுவிட்டன. எவ்வளவு தடவை சொன்னாலும், ஏன் சந்தேகப்படுகிறீர்கள்?’’
‘‘எப்படி செத்திருப்பான்?’’
‘‘அது தெரியாது!’’
‘‘சரி போகட்டும். அவனுடைய அந்திமக் கிரியைக்கு என்ன ஏற்பாடு செய்கிறார்கள்?’’
‘‘அந்திமக் கிரியையா? சேச்சே...’’
‘‘அப்படியென்றால்..?’’
‘‘எந்த மாதிரியும் தயார் செய்யவில்லை!’’
‘‘ஏன்?’’
‘‘வைத்தியரே! வேறொரு நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அவருடைய சீடர்கள்!’’
‘‘எந்த மாதிரி நாடகம்?’’
‘‘மூன்று நாட்களுக்கு நான் உயிரைத் தியாகம் செய்து, நான்காவது நாள் உயிருடன் வந்து எழுந்திருப்பேன். எனவே, மூன்று நாட்கள் வரை என் உடலைப் பாதுகாத்து வையுங்கள் என பாபா சொன்னதாக அவர்கள் சொல்கிறார்கள்...’’
‘‘அடப்பாவமே!’’ , குல்கர்னி கீழே உட்கார்ந்து சொன்னான்... ‘‘ராம்... ராம்... இந்த மனிதர்களே சரியான மூடர்கள். சாயி ஒரு நாடகக்காரன். ஒவ்வொரு முறையும் புது நாடகம்! சாவதிலும், நன்றாகச் சாகக் கூடாதா? அமைதியுடன் சாகப்பா, பாபா! காளோபா, இந்த ஜென்மத்தில் எனக்கு அமைதியான சுகமே கிடைக்காது போலிருக்கிறது!’’ என்றவன், சிறிது நேரம் மனதில் ஏதோ யோசனை செய்தான்.
அவன் மனதுக்குள் ஒரு நச்சுப் பாம்பு அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது! என்னை அலட்சியம் செய்யாதீர்கள். என்னை மறந்து விடாதீர்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுவேன்! இப்பொழுது
நான் உயிரை விடுகிறேன்!
(தொடரும்...)