விளாசும் பாலு மகேந்திரா
தலைமுறைகள்’... மீண்டும் இதயம் தொட வருகிறார் பாலு மகேந்திரா. ‘‘ம்... சினிமா எனக்கு இன்னும் தீராத ஒரு கனவு... காதல்! மீட்டர் ஓடிக்கொண்டிருப்பதை உணர்கிறேன். செய்து முடிக்க வேண்டிய ஐந்தாறு படங்கள் கையிருப்பில் உண்டு. முதலில் எனது தாய்மொழிக்கும் எனக்குமான கதை ‘தலைமுறைகள்’. என் தமிழ் மீதும் என் இனத்தின் மீதும் எனக்குள்ள வெறிகொண்ட பற்றுதலை உடனடியாக எனது சினிமாவில் நான் பதிவு செய்தாக வேண்டும். அதன் விளைவுதான் இதோ ‘தலைமுறைகள்’...’’ , கரகரத்த குரலில் அன்பு வழிகிறது. சந்திக்கும்பொழுதெல்லாம் மனசைப் பிடிக்கிற மனிதர் அவர்.
‘‘எனது பால்யத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும். அந்த வயதின் இடையறாத வியப்புகள், தொடர் ஆச்சரியங்கள், புதிய புதிய புரிதல்கள்... இவற்றையெல்லாம் மீண்டும் ஒருமுறை அனுபவித்துவிட வேண்டும். இதற்கு ஒரே வழி, இந்த சினிமாதான். என் திரைப்படப் பள்ளி மாணவர்களுக்கு ‘தலைமுறைகள்’ ஒரு முன்மாதிரியாக , ஒரு ‘டெமோ’வாக அமைய வேண்டும் என விரும்பினேன். நமது மண்ணையும், மக்களையும், அவர்தம் வாழ்க்கையையும் குறைந்த முதலீட்டில் ஒரு படமாக எடுத்து அவர்களுக்கு ஒரு கதவைத் திறந்துவிட்டால், அதன் வழியே அவர்கள் போகக்கூடும் என்ற நம்பிக்கை. என் மீது மிகவும் அக்கறை கொண்ட மனிதரான டைரக்டர் சசி குமாரை சந்தித்து என் பிரியத்தைச் சொன்னேன். ‘உடனே ஆரம்பியுங்க’ என்று ஆவன எல்லாம் செய்தார்!’’
‘‘உலக சினிமாக்களில் இன்னும் தமிழ் சினிமாவெல்லாம் சேரலையே..?’’ ‘‘நாம் உலக சினிமான்னு அவதானிக்கிற ஈரானிய சினிமாவெல்லாம் அந்தந்த நாட்டில் உள்ளூர் சினிமாதான். அந்தந்த மக்களின் வாழ்க்கை, மண், பழக்கவழக்கங்கள், கலாசாரத்தை பதிவு செய்கிற தனித்துவம் கொண்ட சினிமாதான். அப்படி நாம் எந்த வகையில் குறைந்தோம்? ஊடக ஆளுமை கொண்டவர்கள் நேர்மையாகப் பதிவு செய்யத் தொடங்கினால், நம்முடைய சினிமா உலக சினிமா ஆகாதா? ஈரானிலிருந்து படம் எடுத்து அனுப்புவான்...
நாம் வாயைப் பிளந்து பார்ப்போம். நாம் ஒரு படம் அனுப்பி அவன் வாயைப் பிளந்து பார்த்தால் என்ன? ரூம் போட்டு கதை பேச வேண்டாம். அது நமக்கு உடன்பாடு கிடையாது. சினிமா வெறும் வியாபாரம் மட்டும்தான்னு நினைத்தால், அது அவங்க சுதந்திரம். எல்லோரும் இரண்டாவது படத்தில் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்க நினைத்தால், இதுமாதிரி சினிமாவிற்கு சாத்தியமில்லை. என்னுடைய மாணவர்களுக்கு பணம் ஒன்றே வாழ்க்கை இல்லைன்னு சொல்லித் தந்திருக்கிறேன்.
நீங்க ஏன் ஏழு தலைமுறைக்கு பணம் சம்பாதிக்கணும்? குழந்தைகளுக்கு கல்வி கொடுத்தா போதுமே! யாருக்கும் சேர்த்து வைக்க வேண்டிய கடமை எனக்கில்லை. அதை நான் நிராகரிக்கிறேன். ஆசைப்படாமல் இருந்தால் இங்கே நிறைய பேர் நல்ல படம் பண்ணலாம். ‘வீடு’ படத்தை 87,ல் எடுத்தேன். 12 லட்ச ரூபாய் செலவு. 72 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால், அதில் சமரசத்திற்கு இடமில்லை. இயக்குநர்கள் மண்ணோட கதையை எடுக்கணும். அதுதான் என் ஆசை. ஒரு கலைஞன் தனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கும்போது படைப்பின் ஓட்டம் தடைபடுகிறது. தேங்கினதெல்லாம் நாறும்.’’
‘‘வேண்டிய புகழோடு தேசிய விருதும் வந்தாச்சு. இப்ப போய் நடிக்கணும்னு ஆசை வந்தது எப்படி?’’
‘‘இந்தக் கதாபாத்திரத்தை எழுதி முடிச்சதும், நானே இதற்கு பொருத்தமா இருக்கேன்னு பட்டது. அப்படியிருக்க இன்னொருத்தரை ஏன் தேடிப் போகணும்? குறைந்த செலவில் எடுக்கிற படம். இன்னொருத்தரைப் போட்டால், அவருக்கான செலவு... ‘அவர் நல்ல மூடில் இருக்காரா, தண்ணி குடிச்சாரா...’ன்னு பார்க்கிறதுக்கே எனக்கு நேரம் போதாது. மனரீதியாகவும், தோற்றத்திலும் இது எனக்கான நடிப்புக் களம்னு திடமாகப்பட்டது. வேறு எதற்காகவும் நடிக்கவில்லை. நான் நடிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கலை. நான் நானாகவே இருந்தேன். எனக்கு என் முகத்தை பெரிய திரையில் பார்க்க ஆசை கிடையாது. என் மூஞ்சி என்னாங்கிறது எனக்குத் தெரியும்.’’
‘‘இன்னும் குழந்தைகளுக்கான படம் இல்லை. அவர்களின் உலகம் அறியப்படவில்லை. ‘தலைமுறைகள்’ படத்தில் அவங்க உலகம் இருக்குமா?’’
‘‘குழந்தைகள் தூய்மையானவர்கள். அவர்களை அப்படியே பதிவு செய்வது எனது பேராசையாக இருந்தது. இரண்டு கைதிகள் சிறையில் இருந்தார்கள். ஒருநாள் சாளரத்தின் கதவு திறந்து வெளியே பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு வந்தது. ஒருவன் சாக்கடையை பார்த்தான். இன்னொருவன் வானத்தையும், நட்சத்திரங்களையும், மேகத்தையும் பார்த்தான். நான் இதில் பார்த்தது குழந்தைகளின் உலகம். குழந்தைகளைப் போல தீரா வியப்பு நம்மிடம் இருக்கட்டும். உங்களுக்குள்ளே இருக்கிற சிறுவனை தொலைத்து விடக் கூடாதுன்னு சொல்வேன்...’’
‘‘உங்களின் அற்புதமான திறமைகள், சாதனைகளைத் தாண்டி, உங்கள் பெயர் பல விஷயங்களில் அடிபட்டது. இப்போது வயது காரணமாகத்தான் அப்படிப்பட்ட பேச்சில்லை. இப்போது அதற்காகவெல்லாம் வருந்துகிறீர்களா?’’
‘‘எல்லோரையும் போல அன்பின் பலத்தையும், பலவீனத்தையும் சுமந்து வாழ்பவன்தான் படைப்பாளி. இன்னும் சொன்னால், நான் ஒரு சாக்கடை. ஒண்ணை மறக்கக் கூடாது. லட்சுமி இருக்கும் செந்தாமரையும், சரஸ்வதி இருக்கும் வெண்தாமரையும் இந்தச் சாக்கடையில்தான் இருக்கின்றன. இருக்கட்டுமே! பூ பூக்கக்கூட சாக்கடை தேவைப்படுகிறது. சாக்கடை என சொல்லிக்கொள்வதில்... அப்படி உணர்ந்து கொள்வதில் எந்தக் கூச்சமும் எனக்குக் கிடையாது. அப்படித்தான் இருந்தது என் வாழ்க்கை. அது மாறவே கூடாது என்ற அர்த்தமா என்ன? வயது முதிர்ச்சி தெளிவைத் தரலாம். நான் நினைத்தபடியே வாழ்ந்தேன். சரியா, தப்பா என்ற விஷயத்திற்கே நான் போகவில்லை. நான் எடுத்தது கூட, நான் நினைத்த சினிமாதான். நான் அடங்காதவன். அதில் எனக்கு கர்வம் இருக்கு. சரி, தப்புன்னு உங்க அளவுகோலை வச்சு அளக்காதீங்க. நான் உங்க அளவுகோல் அத்தனையையும் மறுதலிக்கிறேன்!’’
‘‘ ‘தலைமுறைகள்’ எப்படி பார்க்கப்படணும் என விரும்புகிறீர்கள்?’’
‘‘ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாளைப் பார்க்கத் துடிக்கிற மனநிலையோடு தயவுசெய்து வரவேண்டாம். நேர்மையான ஒரு சினிமாவிற்கான, உன்னதத் தருணங்களுக்கான அர்ப்பணிப்போடு வாருங்கள். நீங்களும் தென்படும் பதிவுதான் இது. உங்களின் பிரதியும் இதில் இருக்கிறது. என்னுடன் ‘கதை நேரம்’ சசிகுமார், ரம்யாவும், கார்த்திக் என்ற சிறு பையனும் கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எனக்கு படைப்பு என்பது சாவை வெல்லும் ஒரு முயற்சிதான். உங்கள் பால்யத்தை நிச்சயமாக மீட்டுத் தருவேன்.’’
, நா.கதிர்வேலன்