கடைசி பிட்





ஜவுளிக்கடையில் வேலை செய்யும் தன் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துப் போன விமலா, வாடிக்கையாளர் ஒருவரிடம் அப்பா பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டாள்.
‘‘இந்த பீஸில் இது கடைசி பிட்டு. இதை வச்சுக்கிட்டு நாங்க என்ன பண்ணப் போறோம். அதான், இவ்வளவு தரமான துணியை தள்ளுபடி விலைக்குத் தர்றோம். உங்களுக்கு அதிர்ஷ்டம்தான் போங்க...’’

அப்பா சாப்பிடும் நேரத்தில் விமலாவுக்கு குடும்ப சூழ்நிலை ஞாபகம் வந்தது. நாலு பெண்களுக்குப் பிறகு, ஐந்தாவதாகப் பிறந்தவள். அக்காக்கள் நான்கு பேரையும் கல்யாணம் செய்து கொடுத்த பிறகு, அப்பாவின் பொருளாதார நிலை அவளுக்குத் தெரியும். அதனால், அவளுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. தனக்கும் அந்த கடைசி பிட்டின் கதிதான் என்று நொந்தபடி வீட்டுக்குப் புறப்பட்டாள்.

அன்று இரவு... தரகருடன் அப்பா போனில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘‘கடைசி பொண்ணுதானே, அம்பது வயதுக்காரனுக்கு கட்டிக் கொடுத்தா செலவு குறைச்சல்தானேன்னு வாய் கூசாம ஆலோசனை சொல்றீங்க? அஞ்சாவதோ, பத்தாவதோ... அவள் என் மகள். கடன் பட்டாலும் எல்லா பெண்களையும் போலத்தான் அவளுக்கும் கல்யாணம் செய்வேன். இனி இப்படிப் பேசாதீங்க!’’  அப்பாவின் காலில் விழுந்து, ‘இனி இப்படி நினைக்க மாட்டேன்’ என்று சொல்லத் தோன்றியது விமலாவுக்கு!