சன் டி.வியின் ‘சப்தஸ்வரங்கள்’ போல ஒரு சக்ஸஸ் இசை நிகழ்ச்சி இருக்க முடியாது. ‘‘இப்போ தாளக்கட்டு மாறுது’’ என்று திரையில் அவர்கள் பீட்டை மாற்றிப் போடும்போது, கூடவே பாடாத வாயும் உண்டா என்ன? சைந்தவி, கார்த்திக், ரஞ்சித், வினயா, ஹரிச்சந்திரன், ரெனினா ரெட்டி என இன்றைய நட்சத்திரப் பாடகர்கள் பலரையும் உருவாக்கிய ஷோ அது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஓர் இசை நிகழ்ச்சியைக் களமிறக்கி சூப்பர் ஹிட் ஆக்கியிருக்கிறது சன் டி.வி. அதாங்க... சண்டே காலைகளை சங்கீதத்தால் குளிர்விக்கும் நம்ம ‘சன் சிங்கர்’.
‘சன் சிங்கர்’ தெரியும்... அதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? ஒவ்வொரு வாரமும் ஒரு சீஃப் கெஸ்ட் கலந்துகொண்டு கலக்கும் இந்த அதிரடிப் பாட்டுப் போட்டியில், இந்த வாரம் வந்தவர், டிரம்ஸ் சிவமணி. இதுக்கு மேல என்ன ஸ்பெஷல் வேணும்? சும்மாவே தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக்கி டேபிள், சேரில் கூட டிரம்ஸ் இசையை வரவழைக்கும் சிவமணி, குட்டீஸ்களை உற்சாகப்படுத்த சான்ஸ் கிடைத்தால் விடுவாரா? அந்த சுவாரஸ்யத்தை அள்ளி வரத்தான் நாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே கிளம்பினோம்.
வழக்கமான கெட்டப்பில் வந்திருந்தார் டிரம்ஸ் கலைஞர் சிவமணி. ஆனால், ஜூனியர் பாடகர்களை அவர் அசத்திய விதம் வழக்கமானதல்ல. டிரம்ஸ் பக்கத்தில் இல்லை என்றால் என்ன... இசைக்குத் தன்னிடம் ‘தட்டு’ப்பாடு இல்லை என்பதை ஒரு வாட்டர் கேனில் கூட டிரம்ஸ் வாசித்து வெளிப்படுத்தினார் மனிதர். அது மட்டுமல்ல... தண்ணீரைக் கொண்டு இசையை எப்படி உருவாக்கலாம் அல்லது வளைக்கலாம் என்று ஒரு லைவ் டெமோவே காட்டினார். இதற்காக அவர் பயன்படுத்தியதெல்லாம் பாதி தண்ணீர் நிரம்பிய பக்கெட்டும் சில இசைக் கருவிகளும்தான். இசைக் கருவிகளை வாசித்தபடியே நீருக்கருகில் கொண்டு போகும்போது, அதன் எதிரொலிப்பு புதுவித ஒலியைக் கொடுக்கிறது. அதே கருவியை நீருக்குள் வைத்தால் அதே ஒலி வேறு வித இனிமை பெறுகிறது. ஆக, ஒலிகளுக்குத் ‘தண்ணி காட்டி’ தன் இஷ்டத்துக்குப் பேச வைத்து விட்டார் சிவமணி. பாடிக்கொண்டே இரு கைகளாலும் காலாலும் இசைக் கருவிகளை வாசித்து அவர் ஒரு ஜுகல்பந்தி நடத்திக் காட்டியபோது, க்ளைமேக்ஸ் கரகோஷம் காதைக் கிழித்தது.
நிகழ்ச்சியின் இயக்குனர் நிர்மலிடம் பேசினோம்.
‘‘6 முதல் 13 வரை உள்ள இளம் பாடகர்களுக்கான போட்டிதான்... ஆனா கொஞ்சம் வித்தியாசமான, சுவாரஸ்யமான போட்டி. கோவை, திருச்சி, மதுரை, சென்னைன்னு எல்லா இடத்துலயும் தேர்வு நடத்தி, சுமார் அறுபது குழந்தைகளை செலக்ட் பண்ணினோம். இவங்க எல்லாருக்குமே கங்கை அமரன் இசைப் பயிற்சி கொடுத்தார். அதுல இப்போதைக்கு இருபத்தி அஞ்சு பேரை ஜட்ஜஸ் புஷ்பவனம் குப்புசாமியும், அனுராதா ஸ்ரீராமும் செலக்ட் பண்ணியிருக்காங்க. சீஃப் கெஸ்ட்டா இதுவரைக்கும் பிரபுதேவா, ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ், மதன் கார்க்கி, நீது சந்திரான்னு பலபேர் கலந்துக்கிட்டாங்க. ஜட்ஜஸ் கருத்துக்களோட இவங்க கருத்துக்களும் சேரும்போது, நிகழ்ச்சிக்கு இன்னும் சுவாரஸ்யம் கிடைக்குது. அதுலயும் சிவமணி ஷோ கொஞ்சம் பிரமாண்டம். முப்பத்திரெண்டு சினிமா இசைக் கலைஞர்கள் இவர்கூட இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டிருக்காங்க.
அனுபவக் கலைஞர்கள்கிட்ட மாணவர்களுக்கு ஒரு பயிற்சி கிடைச்ச மாதிரி இருந்தது. ஃபைனல் ரவுண்ட்ல பாருங்க... வின்னர்ஸுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருக்கு!’’ என்றார் அவர்.
இனி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எல்லா ஹவுஸும் ஹவுஸ்ஃபுல்தான்!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்