மூட்டத்துக்குள் பொசுங்கும் வாழ்வு





தஞ்சாவூர்-திருக்கருகாவூர் சாலைக்குக் கீழாக, மெலட்டூரை ஒட்டி அமைந்திருக்கிறது தேன்கூடு. கால் நுழைந்தால் தலையிடிக்கும் 16 வீடுகள். தேன்கூட்டின் உள்ளடக்கமே அவ்வளவுதான். சாலையே குழந்தைகளின் விளையாட்டுத் திடல். அடுத்த வாரமோ, அடுத்த வருடமோ ஆக்கிரமிப்பு என்று கூறி அந்த வீடுகள் அள்ளி எறியப்படலாம்.

கரிமூட்டம் போடுவதும், ஆறுகளில் மண்சலித்து பழங்காசு சேகரிப்பதும் அந்த மக்களின் தொழில். நம்பிக்கையின் மெல்லிய இழைகளில் தொக்கி நிற்கிறது அவர்களின் வாழ்க்கை.

''அந்தக் காலத்துல எலியும் பாம்பும் புடிச்சு காலம் தள்ளுன ஆளுங்க சாமி நாங்க. தலைமுறை வளர வளர, வாழ்க்கையில மாற்றம் வரணும் இல்லையா..? அதான் தாத்தன் பாட்டனுங்க, இங்கிட்டு கிளம்பி வந்துருக்காங்க. பூர்வீகமுன்னு பாத்தா ஜெயங்கொண்டம். இப்பவும் எங்காளுங்க அங்கிட்டு இருக்காங்க. நாங்க இருளர் ஜாதிக்காரங்க. ஒரு அம்பது வருஷம் முன்னாடி எங்காளு ஒருத்தர் இந்தப்பகுதிக்கு வந்து ரோட்டோரத்துல வீடு கட்டிக்கிட்டு விவசாயத்துக்குப் போயி பொழைச்சிருக்காரு. அவரு கொஞ்சம் நல்ல வேட்டி கட்டுனதும், கொஞ்சம் கொஞ்சமா இங்கே ஆள்வரவு அதிகமாயிருச்சு. வாயக்கட்டி, வவுத்தக்கட்டி ஆளாளுக்கு இங்கன வீடுகளக் கட்டிக் குடியிருக்கோம். இப்போ ரோட்டை அகலமாக்குறோம்னு சொல்லி பள்ளம் தோண்டி வச்சிருக்காக. இன்னிக்கோ, நாளைக்கோ இந்த இடமும் காலியாகப் போவுது...’’ - வருத்தம் தொனிக்கப் பேசுகிறார் ராஜேந்திரன்.



ராஜேந்திரனுக்கு 4 பிள்ளைகள். மனைவி ராஜேஸ்வரி. கணவனோடு உழைக்கிறார். பிள்ளைகள் வேலையற்ற நாட்களில் பள்ளிக்கூடம் செல்வார்கள்.
‘‘இதுதான் வேலைன்னு இல்லேங்க. மூட்டம் போட்டு கரி எடுக்கிறதுல நாலு காசு கையில நிக்கும். ஆனா அதுவும் இப்போ செய்ய முடியல. மரங்க கிடைக்க மாட்டேங்குது. மொத்த யாவாரிங்க ஜல்லியா காசைக் கொடுத்து அள்ளிக்கிட்டுப் போயிடுறாங்க. எங்க தகுதிக்கு மொத்த கொள்முதல் பண்ணமுடியாது. நாலைஞ்சு பேரா சேர்ந்து முதல் திரட்டி அன்னப்பன்பேட்டை, கோதைக்குடி, கரம்பை பக்கமாப் போயி மரம் வாங்குவோம். விலை தெகஞ்சுட்டா புள்ளை, குட்டிகளை அழைச்சுக்கிட்டுப் போயி கிளையில இருந்து தூரு வரைக்கும் வெட்டிக் கொண்டாந்துருவோம். கருவை மரத்தை வெட்டுறது காட்டு முள்ள வெட்டுற மாதிரி. ஆபத்தான வேலை. காலு, கையில முள்ளடிச்சா, அப்படியே உடம்புல ஊறிப்போயி அழுகிரும். எம் பொண்டாட்டி முள்ளடிச்சுத்தான் செத்தா’’ என்கிற முத்தையன் முகத்தில் முதுமை தள்ளாடுகிறது. கண்களை இடுக்கியபடி முகம் பார்க்கிறார்.

மூட்டம் போடுவது எளிதான வேலையில்லை. சற்று அசந்தாலும் கட்டைகள் எரிந்து மொத்த முதலீடும் சாம்பலாகி விடும். புகைய மட்டுமே செய்ய வேண்டும்; எரியக்கூடாது. நொடிப்பொழுதும் கண்ணயராமல் காவல் காக்க வேண்டும்.
‘‘பெருங்கட்டைகளை கீழே போட்டு, சுள்ளிகளை மேல அடுக்கணும். எட்டு அடி உயரத்துக்கு சரிவில்லாம அடுக்கி, சந்துகள்ல எல்லாம் வைக்கோல் வச்சு அமுக்கணும். அப்பத்தான் தீ அணையாது. அதுக்குமேல கரிமண்ணையும், களிமண்ணையும் கலந்து பூச்சுப் போடணும். நடுவுல நெருப்பள்ளி கொட்டிட்டு காவலுக்கு இருக்கணும். நெருப்பு மெல்ல மெல்ல கட்டைகள்ல பத்திக்கும். மேவாக்குல பொகை வந்துக்கிட்டே இருக்கும். பச்சைபுள்ளைக எதுவும் கையக்கால விட்டுருச்சுகன்னா சிக்கலாயிரும். பக்கத்துல ரோடுக இருக்கறதால, புகை பரவுனா கேள்வி கேப்பாக. 1 வாரம் கண்ணு முழிச்சு பாதுகாத்தாத்தான் கரி எடுக்கலாம்’’ என்கிறார் மணிகண்டன்.

கரியை என்ன செய்வார்கள்..?
“எல்லா டீக்கடையிலயும் பாய்லர் வச்சிருக்காங்க. கரி இருந்தாதான் பாய்லர் எரியும். அதுபோக சலவை செய்யிறவங்க, ஹோட்டல் வச்சிருக்கவங்கல்லாம் வந்து வாங்குவாங்க. ஓட்டல் அடுப்புக்கெல்லாம் கரி வேணும். சில மொத்த யாவாரிகளும் வந்து வாங்கிட்டுப் போவாங்க. பத்தாயிரம் முதல் போட்டு, மரம் வெட்டியாந்து மூட்டம் போட்டு, சேதாரம் இல்லாம கரியாக்குனா இருவதாயிரம் கிடைக்கும். குடும்பத்துக்கு கூலிய கணக்கு பண்ணுனா ஒரு மண்ணும் நிக்காது’’ என்கிறார் கொளஞ்சியம்மா.
50 வயதாகும் கொளஞ்சியம்மா, ஒருகாலத்தில் ரெகுலராக கரிமூட்டம் போட்டவர். அதன் பலன், பார்வையிழப்பு.
‘‘என் வீட்டுக்காரர் வருஷம் முழுக்க மரம் வாங்கியாந்து அடுக்கிருவாரு.. நாந்தான் மூட்டத்துக்கு காவல் இருப்பேன். படிப்படியா பார்வை குறைஞ்சுபோச்சு. எப்பவும் மூட்டப் புகைக்குள்ளயே இருக்கதாலதான் கண்ணு மங்கிருச்சுன்னு வைத்தியரு சொல்றாரு. மெட்ராஸ்ல போயி பெரிய வைத்தியம் பாக்கணுமாம். எடுத்துச் செய்ய எங்க வீட்டுக்காரரும் இல்லை. மனுஷன் போய்ச் சேந்துட்டாரு’’ என வருந்துகிறார் கொளஞ்சியம்மா.



மூட்டம் போட இயலாத காலங்களில் இவர்களை அருகில் இருக்கும் ஆறுகளில் பார்க்கலாம். தேன்கூட்டைச் சுற்றி வெட்டாறு, வெண்ணாறு, காவிரி, அரசலாறு என எல்லாத் திசைகளிலும் ஆறுகள்தான். கையில் ஒரு சல்லடை, ஒரு மண்வெட்டி, தோளில் ஒரு பையோடு ஆற்றில் இறங்குகிறார்கள்.
‘‘ஆத்துக்குள்ள மண் அள்ளி சலிச்சா காசுங்க, மணிகள்லாம் கிடைக்கும். எப்பவாவது ஒரு குண்டுமணி தங்கமோ, வெள்ளியோ கூட கிடைக்கலாம். ஆனா அது லேசுப்பட்ட வேலையில்லை. முதுகு ஒடிஞ்சு போயிரும். பொம்பளங்கல்லாம் தண்ணியிருக்கிற பகுதிகளுக்குப் போயிருவோம். தண்ணிக்குள்ள முக்கி சல்லடையில அள்ளுனா, மணல் தேங்கும். அதுக்குள்ள எதுனா கிடைக்கும். ஆம்பளைங்க மணல்ல ஒரு ஆள் மட்டத்துக்கு பள்ளம் தோண்டுவாங்க. அந்த பள்ளத்துக்குள்ள இறங்கி மண் அள்ளி சலிப்பாங்க. அதுல பழங்கால காசெல்லாம் கிடைக்கும். அந்தக் காசுக்கு விலை கொஞ்சம் கூடுதலா கிடைக்கும்’’ என்கிறார் லதா.

ஆறுகளில் பழங்காலக் காசு எப்படி?
‘‘இப்போ வெளிநாட்டு பேங்குகள்ல போடுறமாதிரி அந்தக் காலத்துல ராஜாக்கள், மந்திரிகள்லாம் ஆத்தங்கரையோரத்துலதான் காசு, தங்கத்தை எல்லாம் புதைச்சு வச்சிருப்பாங்களாம். அதுபோக, மேட்டுப்பகுதியில இருக்கிற எல்லாப் பொருளும் வெள்ளம் வந்தா அரிச்சுக்கிட்டு ஆத்துக்குத்தான் வரும். நானூறு, ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி பொழக்கத்துல இருந்த தங்கக்காசு, வெள்ளிக்காசெல்லாம் தண்ணி வழியா அரிச்சுக்கிட்டு வந்து ஆத்து மண்ணுக்குள்ள புதைஞ்சு போயிக் கிடக்கு. ஆனா அதெல்லாம் எங்களுக்கு அம்புடுறதில்லை. கருப்பு கருப்பா வெள்ளைக்காரன் படம் போட்ட காசுங்க கிடைக்குது. இந்தமாதிரி பழங்காசுகளை வாங்குறதுக்குன்னு நிறையபேரு எங்க தேன்கூட்டுக்கு வருவாங்க’’ என்கிறார் சஞ்சய் ராமசாமி.
இவர்களை ஏமாற்றி, இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய்க்கெல்லாம் அவற்றை வாங்கிச்சென்று, நாணயம் சேகரிப்பவர்களிடம் பல ஆயிரங்களுக்கு விற்கிறார்கள் ஏஜென்டுகள். அவர்களை ‘செல்லாக்காசுக்கு விலைதரும் தெய்வமாக’ மதிக்கிறார்கள் இந்த மக்கள்.

 இந்த வேலையில் மிகப்பெரும் அபாயங்களும் உண்டு. ‘‘குழிக்குள்ள நின்னு சலிச்சுக்கிட்டிருக்கும்போது அப்படியே மண்ணு சரிஞ்சு உயிரோட புதைஞ்சிருவோம். சில நேரம் ஆத்துக்குள்ள இருக்கிற புதைகுழிக்குள்ள மாட்டுனாலும் போய்ச் சேர வேண்டியதுதாம்’’ என்கிறார் ராஜேந்திரன். சற்று நாகரிகமாக இருப்பதாலும், நல்ல தமிழ் பேசுவதாலும் இவர்களை ‘இருளர்கள்’ என்று அங்கீகரிக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள்.  

‘‘மூணு வேளைக்கும் நிம்மதியா சோறு கெடச்சா போதும். அதுக்குத்தான் இந்தப் பாடு படுறோம். ரோட்டுக்குக் கீழே வீட்டை வச்சுக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே. கண்ணை மூடிக்கிட்டு வண்டி ஓட்டுறாங்க. கொஞ்சம் அசந்தா புள்ளைக நசுங்கிருங்க. இந்த சிண்டு, சிறுசுகளை வச்சுக்கிட்டு எங்கிட்டு போயி பொழைக்கிறது? சரி, பிள்ளைகளாவது நல்லாயிருக்கட்டும்னு படிக்கவச்சா ஜாதி சர்டிபிக்கேட்டு கிடைக்கலே. நாங்கள்லாம் நாலு பேரு மாதிரி நல்லவிதமா வாழக்கூடாதா? சுதந்திரமா பொழைக்கக் கூடாதா? இப்பிடி பெறக்கணும்னு தவம் கேட்டா பெறந்தோம்..? புகைக்குள்ள கருகியும், ஆத்துக்குள்ள புழுங்கியுமே எங்க வாழ்க்கை மண்ணாப் போகணுமா..?’’
மிகவும் உளைச்சலோடு ராஜே ஸ்வரி அடுக்கும் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்ல?
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்