தத்துவம் மச்சி தத்துவம்





என்னதான் டாக்டர் வீட்டுல ‘ஹோம் தியேட்டர்’ வச்சிருந்தாலும், அந்த தியேட்டர்ல வச்சு ‘ஆபரேஷன்’ எல்லாம் பண்ண முடியாது..!
- டாக்டரைப் பிடிக்காமலேயே ஆபரேஷன் செய்துகொள்வோர் சங்கம் - இளங்கோ, மதுரை.

‘‘தலைவர் அடிக்கிற லூட்டி தாங்கல...’’
‘‘ஏன்... என்ன செஞ்சார்?’’
‘‘விசிட்டிங் கார்டுல, அவர் இருக்கற ஜெயில் அட்ரஸையும் சேர்த்து அடிச்சிருக்கார்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘தலைவரே... நீங்க பல இடங்கள்ல அவமானப்பட்டு சேர்த்த சொத்தெல்லாம் வீணா போகப் போவுது...’’
‘‘என்னய்யா சொல்ற..?’’
‘‘உங்க மேல ‘அவமானத்துக்கு அதிகமா’ சொத்து சேர்த்துட்டதா வழக்கு போட்டுருக்காங்க!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

சாப்பாட்டுக் கேரியரை சைக்கிள் கேரியருல வைக்கலாம்; ஆனா, சைக்கிள் கேரியரை சாப்பாட்டு கேரியருல வைக்க முடியுமா?
- சைக்கிள் கேரியரில் தத்துவ மூட்டையோடு அலைவோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘கோர்ட்டுல தலைவர் பேசினதைக் கேட்டு, ஜட்ஜ் கோபமாகிட்டாரா... ஏன்?’’
‘‘பொதுக் கூட்டம் மாதிரி மூணு மணி நேரம் நிறுத்தாம பேசினாராம்...’’
-பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘நான்தான் சொன்னேனே... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப பெரிய இடம்னு!’’
‘‘அதுக்காக பொண்ணு பார்க்க வர்றதுக்கே மாப்பிள்ளைக்கு புது கார் வாங்கித் தரச் சொல்றது நல்லாயில்லை..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘நம்ம டாக்டர் ஏன் பதற்றமா இருக்காரு..?’’
‘‘பேஷன்ட்டை பார்க்க வந்த விசிட்டர் ஒருத்தருக்கு தவறுதலா ஆபரேஷன் பண்ணித் தொலைச்சிட்டாராம்!’’
- சரவணன், கொளக்குடி.