அபூர்வ உயிர்கள்... அற்புத தருணங்கள்..!





காடுகள் வெறும் காடுகள் அல்ல... ஜீவராசிகளின் உயிர்முடிச்சே அங்குதான் இறுகிக் கிடக்கிறது. கால் பங்கு அளவுக்குக்கூட மனிதன் காட்டைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பார்த்தறியாத பல நூறு உயிரினங்கள் இன்னும் காடுகளில் இருக்கின்றன. நாற்பது ஆண்டுகளாக அந்த ரகசியங்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறது அருந்தவச்செல்வனின் கேமரா. தன் குட்டியின் மடிவருடலில் மயங்கி நிற்கும் மான், தும்பிக்கையை நேர்க்கோட்டில் தூக்கி நிறுத்தி பிளிறும் யானை, துள்ளித் துவளும் பூரானை கவ்வியபடி நிற்கும் ஆந்தை, மரத்தோடு மரமாக ஒண்டித் தவழும் பறக்கும் ஓணான், இரை கவ்வி நகரும் புலி, பாம்பின் வாயில் அகப்பட்டு நொடிகளை எண்ணும் தவளை என அருந்தவச்செல்வன் காட்சிப்படுத்தியுள்ள அற்புத தருணங்கள் அபூர்வமானவை. 36 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள இந்த 63 வயதுக்காரர் அடிப்படையில் ஒரு விவசாயி.

‘‘சத்தியமங்கலம் காட்டை ஒட்டி எங்களுக்கு நிறைய நிலங்கள் இருந்துச்சு. முள்ளம்பன்றி, யானை, நரியெல்லாம் நிலத்துக்கு வந்து கடலைக்காயை தொளிச்சு சாச்சுட்டுப் போயிடும். எல்லாரும் அந்த விலங்குகளைத் திட்டுவாங்க. நான் மட்டும் ஆச்சரியமாப் பாப்பேன். கண்ணப்பன்னு எங்க தெருவில ஒரு வேட்டைக்காரர் இருந்தார். அவர் மிருகங்களைப் பத்தி கதை கதையா சொல்லுவார். அதையெல்லாம் கேட்டு காடு எனக்குள்ள மாறுபட்ட ஒரு உலகமா பதிவாயிடுச்சு. அவர்கூட காட்டுக்குள்ள சுத்தித் திரியிறதுண்டு.

9ம் வகுப்பு படிச்சபோது கேமரா வாங்கித் தந்தார் என் மாமா. காட்டுக்குள்ள அதைக் கொண்டு போய் படங்கள் எடுத்தேன். செல்வராஜ்னு ஒரு ஃபாரஸ்டர் இருந்தார். என் ஆர்வத்தைப் பாத்து, ஒருநாள் முதுமலைக்குக் கூட்டிப் போனார். அங்கே மனம் நிறைய காட்சிகள் கிடைச்சுச்சு. ஒரு ராணுவ அதிகாரி என் படங்களை வாங்கிப் பார்த்தார். ‘வித்தியாசமா எடுத்திருக்கே’ன்னு பாராட்டி, ரெண்டு நாள் தங்க வச்சு வன புகைப்படக்கலையோட நுட்பங்களை கத்துத் தந்தார். அவர்தான் எனக்கு குரு. அவர் கொடுத்த கேமராவில, இரண்டு ஆடுகள் சண்டை போட்டுக்கிற மாதிரி ஒரு படம் எடுத்தேன். அந்தப் படத்துக்குக் கிடைச்ச விருது, என்னை தீவிரமான புகைப்படக்காரனா மாத்துச்சு. இப்போ விவசாயம் பாத்துக்கிட்டே காட்டுக்குள்ள சுத்திக்கிட்டிருக்கேன்...’’ என்கிறார் அருந்தவச்செல்வன்.



‘வைல்ட்லைஃப் போட்டோகிராபி’ பிறவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நல்ல தருணத்துக்காக நாள் கணக்கில் காத்திருக்க நேரலாம். நேருக்கு நேராக நின்று படம் எடுக்க முடியாது. அசைவற்று நிற்க வேண்டும். புகைப்படக்கலையை மட்டுமின்றி மிருகங்களின் உளவியலையும் கற்றவர்களுக்கே இது சாத்தியம்.

‘‘ஆபத்துகளை எதிர்கொள்ற தைரியம் இருக்கணும். அதுதான் முதல்தகுதி. ஒவ்வொரு நொடியையும் சரியா பயன்படுத்தத் தெரியணும். ஒரு பறவை மரக்கிளையில் இருந்து பறக்கத் தொடங்கினா, அது எந்த திசையில பறக்கும், அடுத்து எங்கே அமரும்ங்கிறதை நாம முடிவுசெய்யணும். ஆர்வமும், அனுபவமும் இருந்தாதான் இது சாத்தியம். கரன்ட் கம்பத்துல உக்கார்ந்திருக்கிற ஒரு பறவையை எடுக்கிறது பெரிசில்ல. கூட்டுக்குள்ள குஞ்சுகளுக்கு இரையூட்டுற பறவை, கூடு நெய்யிற பறவை, எதிரியோட போராடுற பறவைதான் நல்ல படத்தைக் கொடுக்கும். அதேபோல ஒரு யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க வந்தா அதுல புகைப்படத்துக்குரிய விஷயம் எதுவுமில்லை. ஒரு யானை தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறதும், பிற யானைகளோட விளையாடுறதும்தான் போட்டோ.

விலங்குகளைப் பார்த்ததும் கேமராவைத் தூக்கக்கூடாது. முதல்ல அதன் செயல்பாடுகளை ரசிக்கணும். அதோட இயல்புகளைத் தொந்தரவு செய்யக்கூடாது. நம்மைக் கண்டு விலங்குகள் மிரண்டால் புகைப்படம் செயற்கையாகிடும். ஒரு விலங்கை எப்படி படம் எடுக்கணும்னு நிறைய இலக்கணங்கள் இருக்கு. உதாரணத்துக்கு, யானைகளை நேருக்குநேராக நின்று எடுக்கக்கூடாது. 45 டிகிரி ஆங்கிள்ல பார்க்க அழகா இருக்கும். பொறுமையும் நிதானமும் இருந்தால் மிருகங்களின் வாழ்க்கைச் சுழற்சியை முழுமையா படமாக்க முடியும்’’ என்கிறார் அருந்தவச்செல்வன்.
- வெ.நீலகண்டன்