சிம்பு - ஹன்சிகா காதலா?






நயன்தாராவோடு கல்யாணமா?
அஞ்சலி முத்தம் எப்படி?
அனுஷ்கா மேல பிரியமா..?
பாலாகிட்ட அடி..!

அண்ணா நகரின் முக்கியமான லேண்ட்மார்க் ஆர்யாவின் வீடு. அழைப்பு மணியைத் தொட்டால், கதவைத் திறக்கிறார் ஆர்யாவின் அப்பா. ‘‘அண்ணே, ஆர்யாவுக்கு எப்ப கல்யாணம்?’’ என விசாரித்தால், ‘‘இந்த வருஷம் பண்ணிட வேண்டியதுதான். தீவிரமா பொண்ணு பார்த்துக்கிட்டே இருக்கோம்’’ - தீர்மானமாகச் சொல்கிறார். இன்னும் உள்ளே போனால், நம்ம ஆர்யா! ‘‘தம் டீயை குடிச்சிட்டு நிறைய பேசுவோம்’’ - உறுதியளிக்கிறார். பரபரத்தது உரையாடல்...

‘‘டிரெய்லர், பாட்டுன்னு ‘சேட்டை’ கலகலக்குதே?’’
‘‘நிஜமா சொன்னா, ‘டெல்லி பெல்லி’ பார்த்திட்டு நான் பயந்துட்டேன். நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்தது. அதையே டைரக்டர் கண்ணன் சில மாற்றங்களைச் செய்து வேற விதமா நம்ம சூழ்நிலைக்குக் கொண்டு வந்தார். நான், சந்தானம், பிரேம்ஜின்னு கலகல கூட்டணி. ‘மவனே, சும்மா சும்மா கையை ஆட்டாதே, வாயை கிணறு மாதிரி திறக்காதே’ன்னு பிரேம்ஜியை கண்ட்ரோல் பண்றதுதான் எனக்கும் சந்தானத்திற்கும் வேலையே. கவலையை மறந்து சிரிச்சிட்டுப் போகலாம். இரண்டரை மணி நேரத்திற்கு வாழ்க்கையின் எல்லா துயரங்களையும் மறந்து சிரிக்கலாம். அடுத்து பாருங்க... அஜித் சாரோட ஒரு படம், ‘இரண்டாம் உலகம்’, ‘ராஜா ராணி’ இப்படி வேற வேற கலர் கொடுக்கிற படங்கள். இந்த வருஷம் எனக்கு சூப்பரா இருக்கும்னு தோணுது. நல்ல படங்களா நடிச்சு கிராஃபை கொஞ்சம் ஏத்திக்கிட்ட மாதிரி மனசுக்குப் படுது.’’



‘‘நல்ல ஃபார்மில் இருக்கீங்க. எப்படிப்பட்ட நடிகரா நிலைநிறுத்திக்க எண்ணம்?’’
‘‘நான் நடிகர் திலகம் கிடையாது. டைரக்டர் ஒரு கதையைச் சொன்னால், ‘நம்மால் பண்ண முடியுமா... செய்தால் நல்லாயிருக்குமா...’ இந்த இரண்டையும்தான் பார்ப்பேன். டைரக்டர் சொல்லிக் கொடுக்கறதை பண்ணுவேன். நானே யோசிச்சு, உயிர் கொடுத்து, சிந்திச்சுன்னு எந்தக் கேரக்டரையும் பண்றது கிடையாது. ஆர்யா நடிக்கிறான்னா, மொக்கைப் படமா இல்லாம இருக்கணும். கொஞ்சம் டீசன்டா இருக்கணும். அந்த வரைக்கும்தான் நம்மோட ரூட். ‘இந்தக் கேரக்டரை பாரு, கிழிச்சிடுறேன்... பின்னிடுறேன்’னு சொல்றதோ, கிழிக்கிறதோ கிடையாது.’’

‘‘ஜாலியா இருந்த உங்களை ‘நான் கடவுள்’னு வேறு மாதிரி செய்தவர் பாலா இல்லையா! அதை ஃபீல் பண்ணுவீங்களா?’’
‘‘ ‘நான் கடவுள்’ முடிய கொஞ்சம் டைம் ஆச்சு. எனக்கென்னவோ அந்த தாடி பிடிக்கும். தாடி வச்சுக்கிட்டு இருந்தால், கூட நாலு பேர் உள்ளே போய் உட்கார்ந்த மாதிரி இருக்கும். ‘முகத்தை பளீர்னு வச்சுக்கணும், அழகா இருக்கணும்’ங்கிறது மறந்தே போகும். ‘அகம் பிரம்மாஸ்மி’னு சொன்னாலே அப்பத்தான் ரொம்பப் பொருத்தமா இருக்கும். தினமும் தாடிக்கு ஷாம்பு போட்டு கண்டிஷனர் வச்சு, ‘நீ அப்ப இருந்த மாதிரி அழகா இல்லைடா’ன்னு நிறைய நண்பர்கள் சொன்னாங்க. பாலா கிட்ட ஒர்க் பண்றது அவ்வளவு அழகு. இப்ப அதர்வாவை பாருங்க, பாலா பாசறையிலிருந்து இன்னொரு தளபதி...’’



‘‘நீங்க அதர்வா மாதிரி அடி வாங்கினீங்களா?’’
‘‘ஓஹோ... நீங்க அந்த டிரெய்லரைப் பார்த்துட்டு சொல்றீங்க! அது சும்மா சவுண்ட் எபெக்ட் தான். வேற ஒண்ணுமில்லை. ‘நான் கடவுள்’ல நிறைய பேர் மாற்றுத் திறனாளிகள். ரெண்டு, மூணு மணி நேரம் சளைக்காமல் உட்கார்ந்து பேசி நடிக்கச் சொல்லிக் கொடுப்பாரு. பாவம்ங்க, அவருக்கு கம்பை தூக்குறதுக்கே சக்தி இல்லை. எப்படிங்க தூக்கி அடிக்க முடியும்?’’
‘‘முத்தக் காட்சியில் அஞ்சலி கூட எப்படி? சொல்லுங்க... கேட்டாவது திருப்திப்பட்டுக்கிறோம்!’’
‘‘ரொம்ப முக்கியமான காட்சி அது. வேண்டாம்னு சொல்ல முடியாது. படத்துல ட்விஸ்ட் ஆகிற இடம். நார்மலா ஒரு ஃபிகரை கூட்டிட்டுப்போய் ‘நச்’னு ஒரு முத்தம் கொடுக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா, ஷூட்டிங்ல ‘கிஸ்’ பண்றது கஷ்டம். என்ஜாய் பண்றதை விட கேமரா பொஸிஷனைத்தான் அதிகம் பார்க்கணும். சரியா அமையணும்னு கவலை வந்திடும். பத்து பேருக்கு முன்னாடி கொடுக்கிறதுக்கு பெயர் ‘கிஸ்’ஸா? போங்க சார்!’’



‘‘எத்தனை டேக் போச்சு ஆர்யா..?’’
‘‘முதல் ரெண்டு மூணு டேக் ஆனப்போ எண்ணிக் கிட்டு இருந்தேன். அப்புறம் எண்ணவேயில்லை. ஃப்ரேமுக்குள்ளே வரலை, கண்ணைத் திறந்திட்டீங்கன்னு பல காரணங்கள் சொல்லி எடுத்துக்கிட்டே இருந்தாங்க. 10 டேக்குக்கு மேல போயிருக்கும். உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்... என்ன பண்றது!’’
‘‘அஞ்சலியை எண்ணிக்கையே இல்லாம கிஸ் பண்றீங்க... அனுஷ்காவோட ஹோட்டலில் பார்க்க முடியுது... டாப்ஸியை டிராப் பண்றீங்க... நயன்தாராவுக்கு பிரியாணி தர்றீங்க... என்னதான் உங்க முடிவு? புரிஞ்சுக்கவே முடியலையே?’’

‘‘கண்ணு வைக்காதீங்க பாஸ்..! பொண்ணுங்கன்னு எடுத்துக்கிட்டா பயங்கர லவ்வுன்னா ஒருத்தர்கிட்டேதான் வரும். எனக்கு இவங்க எல்லாம் லைஃப்பில வந்தா போதும். கூட சுத்துவேன். யாரையும் வீட்டுக்கு கூட்டி வர மாட்டேன். சிறீணீsலீ ஆகிடாமல் பல ஹோட்டல்கள்ல சந்திப்பேன். லவ் பண்ணி எமோஷனலில் சிக்கிக்க மாட்டேன். ரொம்ப பிரச்னையாகிடும். சுதந்திரத்திற்கு கேடு அது. நானும் யாரையாவது பிடிச்சிடலாம்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேங்கிறாங்க. ஷூட்டிங்கில தள்ளி தள்ளி உட்கார்ந்துகிட்டு ஒருத்தருக்கொருத்தர் எஸ். எம். எஸ் அனுப்பிக்கிட்டு இருக்கிற வேலையெல்லாம் நம்மால முடியாது. இவங்க எல்லோருக்கும் தெரியும்... ‘பய பழகுறதில கில்லாடி, ஒண்ணும் பயமில்லை, சேர்ந்து பழகலாம், தப்பில்லை’ன்னு நினைக்கிறாங்க. இதுதான் இப்ப எல்லோர் கண்ணையும் உறுத்துது. நம்மளை இந்தப் பொண்ணுங்க சீரியஸாவே எடுத்துக்கிறது இல்லை. அதுதான் விஷயம். ‘இரண்டாம் உலகத்தில’ இரண்டு, மூணு அனுஷ்காவை வகை வகையா லவ் பண்றேன். நான் பிரியம்னா லைவ்வா அப்படியே சொல்லிடுவேன்.’’

‘‘உங்க கல்யாணம் காதல் கல்யாணமா? வீட்ல பார்த்து வைக்கப் போறாங்களா?’’
‘‘நிச்சயமா காதல் திருமணம்தாங்க. அதுல சந்தேகம் வேறயா?’’
‘‘என்னங்க, இப்பத்தான் வாசலில் அப்பாகிட்டே கேட்டேன். இந்த வருஷ கடைசியில் கல்யாணம். பொண்ணு பார்க்கிறோம்னு சொன்னாரு...’’
‘‘அவர் என்ன பார்ப்பாரு? பாவம், என்னை ரொம்ப நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்காரு.’’
‘‘நீங்க நயன்தாராவை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கன்னு சொல்றாங்களே”
‘‘இதையே பல தடவை சொல்லிட்டாங்க. அவளே இதை கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிட்டா. ‘ஏண்டா இப்படி செய்தி வருதே. நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?’னு, என்னை திருப்பிக் கேட்டா. ‘நான் என்ன பண்றது? எனக்கு கல்யாணம் ஆகலைன்னா உன்னை கட்டி வச்சு உதைப்பேன்’னு சொல்லியிருக்கேன்.’’

‘‘உங்களுக்கு நயன்தாராவை பிடிக்கும். இல்லையா?’’
‘‘ஆமாம். ரொம்பப் பிடிக்கும். எனக்கு நல்ல ஃப்ரண்ட். எவ்வளவோ நடிகைகளோடு பழகியிருக்கேன். ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிச்ச பொண்ணு நயன்தாராதான். அருமையான பொண்ணு. இல்லைன்னு சொல்லலையே! அவகிட்டே எதை வேணும்னாலும் மனசு விட்டுப் பேசலாம். என் மனசில் இருக்கிறதும் அவளுக்குத் தெரியும். ஷோ காட்ட மாட்டா. என்னை மாதிரியே உதவி பண்ணுவா!’’
‘‘நட்புக்கும் காதலுக்கும் நூலிழைதானே வித்தியாசம்...’’
‘‘வாழ்க்கையில அடுத்து நடக்கப்போறது எல்லாத்தையும் நாம் தெரிஞ்சுக்க முடியாது. நயன்தாரா எனக்கு முக்கியமானவ. இப்ப வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் பயங்கர ஃப்ரண்ட்ஸ். இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்.’’

‘‘உங்களுக்குத் தெரியும். மறைக்காதீங்க. சிம்பு-ஹன்சிகா... ரெண்டு பேருக்கும் இடையில செம லவ் ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்றாங்களே, உண்மையா?’’
‘‘எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு சொல்றேன். ஹன்சிகா இப்போ பயங்கர ஹேப்பியா, பார்க்கவே லைவ்வா இருக்கா. இப்படி சந்தோஷமா அவளை இதற்கு முன்னாடி பார்த்ததில்லை. என்ன கேட்டீங்க... சிம்புவிற்கும் ஹன்சிகாவிற்கும் லவ்வான்னுதானே கேட்டிங்க? எனக்குத் தெரியாது... தெரியாது... தெரியவே தெரியாது.’’
- நா.கதிர்வேலன்