நாங்கள் கபடி விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவிகள். பள்ளியைத் தாண்டி தற்போது மாவட்ட அளவில் முன்னேறியுள்ளோம். ஆனால், ‘பொட்டப்புள்ளைக்கு எதுக்கு இதெல்லாம்?’ என்கிற கேள்வியை எல்லா இடத்திலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது மாதிரியான கேள்விகளைத் தாண்டி நாங்கள் ஜெயிக்க முடியுமா?
- கௌசல்யா மற்றும் அருணா, பசுவந்தனை.
பதில் சொல்கிறார் கவிதா (முன்னாள் கேப்டன், இந்திய மகளிர் கபடி அணி)
உங்கள் அணிக்கு முதலில் எனது வாழ்த்துகள். காரணம், மாவட்ட அளவில் விளையாடுவதற்கே நீங்கள் நிறைய பிரச்னைகளைச் சந்தித்திருப்பீர்கள். தங்கள் அணியின் சாதனைப் பயணத்தில் இது முதல் படியே. அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் அணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது. பள்ளி, கல்லூரி என அடுத்தடுத்த தளங்களில் நீங்கள் பிரிய நேரிட்டாலும் ‘கபடி’ என்கிற ஒரு விஷயத்தால் இணைந்திருங்கள். திருமணம், வீட்டுச்சூழல் என உங்களில் யார் விலக நேரிட்டாலும், ஆர்வம் உள்ள மற்றவர்கள் பின்வாங்க வேண்டாம். ஆண், பெண் என தனித்தனியாக இல்லாமல் கபடிக்கு ஒரே சங்கம்தான். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அதற்குக் கிளை இருக்கிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அந்தக் கிளையில் உங்கள் அணியைப் பதிவு செய்யுங்கள். அதன் மூலம் ஆங்காங்கே நடக்கிற கபடி போட்டிகள் பற்றிய விபரங்களெல்லாம் சுலபமாகக் கிடைத்து விடும். அவற்றில் விளையாடி திறமையைக் காட்டுகிறபோது மாவட்டம், மாநிலம் என வளர்ந்து நாட்டுக்காகவே விளையாடும் வாய்ப்பைப் பெறலாம். ஒட்டுமொத்த அணியாக இல்லாவிடினும், அவரவர் திறமைக்கேற்ப ஒவ்வொருவரும் முன்னேற முடியும்.
என் கணவர் தீவிரமான சுற்றுச்சூழல் ஆர்வலர். குழந்தைக்கு பொம்மை வாங்கும்போதுகூட பிளாஸ்டிக் பொம்மை வாங்க விட மாட்டார். கதராடை, மண்பானை தண்ணீர் என அவரது லைஃப் ஸ்டைலே தனி. அவர் விருப்பமும் கெடாமல் வீட்டை அழகுபடுத்தலாம் என நினைக்கிறேன். சூழலைச் சிதைக்காத வீட்டுப் பொருள்கள் கிடைக்குமா?
- மாலதி சிவக்குமார், அரக்கோணம்.
பதில் சொல்கிறார் ராமகிருஷ்ணன் (நிறுவனர், ‘கோ ஃபார் கிரீன்’ அமைப்பு, சென்னை)
வருடா வருடம் வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது. சூழலை நாம் சரியாக வைத்துக்கொள்ளாததன் விளைவே அது. நீர்நிலைகளை அசுத்தமாக்குவதையும், காடுகளை அழிப்பதையும் தாண்டி, தினமும் நாம் பயன்படுத்துகிற எவ்வளவோ பொருட்கள், சுற்றுச்சூழலைத் தாறுமாறாக சிதைக்கின்றன. எனவே, கண்டிப்பாக இது மாற்றி யோசிக்க வேண்டிய தருணமே. உங்கள் கணவரின் விருப்பப்படி வீட்டை வைத்தீர்களென்றால், உங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
சமையலறை முதல் படுக்கையறை வரை நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுமே தற்போது, ‘ஈகோ ஃப்ரெண்ட்லி’யாகக் கிடைக்கின்றன. கரண்டி, தட்டு, தம்ளர், காய்கறிக்கூடை, செருப்பு, பேனா, பென்சில், கடிகாரம், நைட்லேம்ப், அலங்காரப் பொருட்கள், ஹேண்ட்பேக், பெண்களுக்கான அணிகலன்கள் என எல்லாமும் கிடைக்கின்றன. இவை தவிர, பரிசுப்பொருட்கள், திருமணத் தாம்பூலம் என அது பெரிய லிஸ்ட். இவையெல்லாம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் யூஸ் அண்ட் த்ரோ டைப் பொருட்கள் அல்ல. நல்ல ஆயுள் உள்ளவையே. பொருட்களின் வேலைப்பாட்டுக்கு ஏற்ற விலைகளில் இவை கிடைக்கின்றன.
இவற்றின் விற்பனையாளர்கள் முன்பு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர். இன்று இவற்றுக்காகவே ஏகப்பட்ட கடைகள் வந்துவிட்டன. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல, சிறு முதலீட்டில் இத்தகைய பொருட்களைத் தயாரித்து விற்கின்றன. இன்டர்நெட்டில் ‘ஈகோ ஃபிரண்ட்லி’ பொருட்கள் எனத் தேடினால், உங்கள் ஏரியாவில் அவை கிடைக்கிற இடங்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும். ஆன்லைன் மூலமே அவற்றை வாங்கலாம். லேசாக மெனக்கெட்டால் போதும்... சூழலுக்கு மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்துக்கும் பாதுகாப்பளிக்கிற ஒரு வாழ்க்கை சாத்தியம்!