‘இரவும் பகலா துளியும் கடலா மணல் மணலா மணலா புனலா உயிரா உடலா அசலா நகலா எதில் எதில் நீ நகுலா!’ - தவிக்க வைத்திருக்கிறது ‘வல்லினம்’ படத்தில் வரும் இந்தப் பாட்டு. எழுதியவர் பார்வதி. ஆண்களின் ராஜ்ஜியமாக இருக்கும் தமிழ்த் திரை இசையில் பாடல் எழுதப் புகுந்திருக்கிறார். கோலிவுட் கருணையாக இவருக்குக் கதவு திறந்திருக்கிறது. கிடைத்திருக்கும் வரவேற்பில் நெகிழ்ந்து மெல்லியதாக வெட்கம் பூசிப் பேசுகிறார் பார்வதி.
‘‘கவிதை பிடிக்கும். படிச்சதென்னவோ எம்.ஏ ஆங்கில இலக்கியமும் எம்.ஃபில் மாஸ் கம்யூனிகேஷனும். ‘இது வேறு மழை’, ‘இப்படிக்கு நானும் நட்பும்’ என இரண்டு கவிதைத் தொகுப்புகள் பெயர் சொல்ல வந்திருக்கின்றன. ‘பாரதியார் கவிதைகள்’தான் முதலில் பிடித்த விஷயமாக இருந்தது. எங்க குடும்பத்தில் யாருக்கும் கவிதைத் தொடர்பு இருந்ததில்லை. அதனால், எப்போது எழுதினாலும் அதை கவிஞர் அறிவுமதிக்கு வாசித்துக் காட்டுவேன். ‘ரொம்ப நல்லாயிருக்கு, இன்னும் இன்னும்’னு சொல்வார். எழுத்தின் ஆரம்பத்தில் அவர் கொடுத்த உற்சாகம் இன்னும் நினைவிருக்கிறது. ஊடகம், எழுத்து என்று போயிருக்கலாம். இதில்தான் சாதிக்க முடியும் என்று தோன்றிவிட்டது. சின்னதாக முயற்சிகள் செய்ய ஆரம்பித்தேன்.
இன்னிக்கு வரைக்கும் சினிமாவிற்குள் வந்தது ஆச்சரியமாக இருக்கிறது. சினிமாவை கௌரவமாக அணுகினால், அது எல்லாமே நமக்குத் தரும். கவிஞராக இருக்கும்போதே ‘ஈரம்’ அறிவழகன் என்னை அறிந்திருக்கிறார். கற்பனையில் எழுதிய பாடல்களை அவரிடம் கொண்டுபோய் சேர்த்தேன். ‘வல்லின’த்தில் அழைப்பு வந்தது. தமனின் இசையில் எல்லோருக்கும் பிடிக்கும்படி பாடல் வந்துவிட்டது. பாடலாசிரியர்களில் வாலி, கபிலனைப் பிடிக்கும். வாலி உச்சம் தொட்டவர். கபிலனின் கற்பனையில் ‘கரிகாலன் காலப் போல’, ‘உன் சமையல் அறையில்...’ இப்படியெல்லாம் வரிகளைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கும். இன்னும் தொடாத பக்கங்களை, பெண்ணால் மட்டும் எழுத முடிகிற கனிந்த பக்கங்களை எழுதிவிட முடியும் என நம்பிக்கையோடு இருக்கிறேன். நான் வந்திருக்கிற இந்த சமயம் தமிழ் சினிமா இன்னும் அழகாகியிருக்கிறது. ஆதி, அந்தம் பார்க்காமல், புதுசாக யார் வந்து சொன்னாலும் ரசிக்கிறார்கள். இங்கு எனக்கான இடத்தை உருவாக்க வேண்டும். தமிழ்த் திரை இசையில் எனக்குத் தெரிந்த நவீனத்தைக் கொண்டு வர முயற்சிப்பேன்’’ எனப் புன்னகையில் சொல்லுகிற பார்வதிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
‘‘மனசுக்கு பிடித்தவராக இருக்கணும். என் விருப்பம் புரியணும். தமிழ் ஆர்வத்திற்கு வழிவிடணும். சாதி மறுப்பு திருமணத்திற்கும் சம்மதம்தான்’’ - இன்னும் குழைந்த இனிப்புக் குரலில் பேசுகிறார் பார்வதி.
ஸ்மார்ட் இளைஞர்கள் கவனத்துக்கு!
- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்