நினைவு
கலாவை சென்ட்ரலில் ரயில் ஏற்றி விட்டு வீட்டுக்கு வந்த குமார், தற்செயலாக கவனித்தான். மேஜை மீது கலாவின் செல்போன். இதை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
‘‘சே... இப்படி இருக்காளே! டெல்லி போய்ச் சேர ஒன்றரை நாளாகும்... டிரெயின்ல மத்தவங்ககிட்ட போனை வாங்கிப் பேசவும் கூச்சப்படுவா. நாமும் கான்டாக்ட் பண்ண முடியாது... கடவுளே!’’ - விரக்தியும் வருத்தமும் குமாரை ஆக்கிரமித்தன. கலாவின் தங்கைக்கு திடீரென உடம்பு சரியில்லை. எப்போதும் இருவரும் ஒன்றாகவே போய்ப் பழக்கம். அவசரத்துக்கு லீவ் போட முடியாத வேலை என்பதால், இப்போதுதான் முதன்முதலாக அவளைத் தனியே பிறந்த வீடு அனுப்பியிருக்கிறான்.
‘என்ன ஆச்சோ... எப்படிப் போய்ச் சேர்ந்தாளோ!’ - வேலையே ஓடவில்லை அவனுக்கு. மனசு ‘கலா... கலா...’ என்றே அரற்றியது. பலமுறை டெல்லிக்கு போன் செய்து கலா வந்ததும் தன்னிடம் பேசச் சொன்னான். அப்பாடா! குமார் எதிர்பார்த்த அந்த அழைப்பு வந்தே விட்டது... ‘‘என்னங்க...’’ என்று ஆரம்பித்த கலாவை பேச விடாமல் குமாரே பேசினான்.
‘‘என்ன கலா... ஏன் செல்லை மறந்த..? நீ போனதுலர்ந்து ஒண்ணுமே ஓடலை. டிரெயின்ல என்ன சாப்ட்ட? பக்கத்துல இருந்தவங்க நல்ல மாதிரியா?’’ என்று கேள்விகளாக அடுக்க ஆரம்பித்தான். குமார் முடித்த பிறகு கலா சொன்னாள். ‘‘சாரிங்க... நீங்க என்னைப் பத்தி நினைச்சுக்கிட்டே இருக்கணும்னுதான் செல்போனை வீட்லயே வச்சிட்டு வந்தேன்!’’
|