குறி
குணசேகரன் குறி சொல்லும் நேரம் லன்ச் டயம்தான். ‘படுபாவி, எப்படித்தான் இவ்வளவு கச்சிதமாகச் சொல்கிறானோ’ என்று நான் பிரமித்து நிற்பேன். அப்படித்தான் போன மாதம், ‘‘என்னப்பா, உன் பையன் நீ ஆபீசுக்குப் புறப்படும்போது ஹோம் ஒர்க் செய்துதரச் சொல்லி தொந்தரவு பண்ணினானா?’’ என்றான். போன வாரம், ‘‘என்னாச்சு, ஸ்கூட்டர் மக்கர் பண்ணுச்சா?’’ என்று மர்மமாக விசாரித்தான்.
இன்று, ‘‘ஏம்ப்பா, உன் மனைவி ஊருக்குப் போயிருக்காங்களா? அம்மா சமையல்தானா?’’ என்றபோது நான் வியப்பின் உச்சத்துக்கே போய்விட்டேன். ‘‘அடேய்... எப்படிடா சொல்றே? நெஜமாகவே ஏதாவது குறி, ஜோஸ்யம்னு படிச்சிருக்கியா?’’ இதற்குமுன்புகூட நான் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே நகர்ந்துவிடுவான். இப்போது பதில் சொன்னான். ‘‘அகத்தின் அழகு முகத்தில் மட்டுமில்லடா... நடை, உடை, பாவனைன்னு எல்லா ஏரியாவிலும் தெரியும். பையனோட ஹோம் ஒர்க்கைப் பண்ணிட்டு அவன் பென்சிலை சட்டை பாக்கெட்லயே போட்டுட்டு வந்துட்ட. ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனப்போ, நீயே ஏதோ வைத்தியம் பார்த்து முழங்கை வரை கரி பூசிக்கிட்டு வந்தே...’’
‘‘சரி, இப்போ எப்படி என் மனைவி ஊருக்குப் போனதை...’’ என்று இழுத்தேன். ‘‘வழக்கமா உன் சாப்பாட்டுல நீளமான கறுப்பு முடிதான் இருக்கும். இன்னிக்கு வெள்ளை முடி இருந்துச்சுப்பா. அதான்..!’’ ‘அட!’ - இப்போது என் முகத்தில் ஆச்சரியக் குறி தெரிந்தது.
|