சத்தம்





லலிதாவின் வீடேறி வந்து அடுத்த வீட்டு பாகீ சொன்னாள்...
‘‘உங்க வீட்டு டி.வி சத்தம் தெரு முழுக்கக் கேக்குது லலிதா. எதிர் வீட்ல பரீட்சைக்குப் படிக்கிற பொண்ணு இருக்கு... பக்கத்து வீட்டுப் பாட்டி நினைவில்லாம படுத்திருக்காங்க... இவங்களுக்கெல்லாம் இது சங்கடமா இருக்காதா? நானே எப்படி வந்து இதை உங்கிட்ட சொல்றதுன்னு தயங்கிக்கிட்டுத்தான் சும்மா இருந்தேன். ஆனா, நாலு வீட்டுக்காரங்க இதைச் சொல்லி தெருவுல உங்க குடும்பத்தைத் திட்டுறப்போ, என்னால கேட்டுக்கிட்டு இருக்க முடியலை. அதான் நேராவே வந்து சொல்லிட்டேன். என்னை தப்பா நினைக்காதே...’’
படபடவென பொரிந்துவிட்டு, விருட்டென்று கிளம்ப நினைத்த பாகீயைப் பிடித்து நிறுத்தினாள் லலிதா.

‘‘பாகீ, நானே உன்கிட்ட சொல்ல நினைச்ச விஷயம்தான் இது. உங்க வீட்ல நீயும் உன் கணவரும் பயங்கரமா கத்தி சண்டை போட்டுக்கறீங்க. அதைக் காதால கேட்க முடியல. பசங்க காதுல அது விழுந்தா சங்கடமா இருக்கும். அதைத் தவிர்க்கத்தான், நான் எங்க வீட்டு டி.வியில சத்தத்தை அதிகப்படுத்தறேன். டி.வி சத்தத்துக்காக என்னை நாலு பேர் திட்டுறது பெரிய விஷயம் இல்ல. குடும்ப சண்டைக்காக உன்னை யாரும் எதுவும் பேசிடக் கூடாது. அது பத்தி யோசி! நீங்க சண்டை சத்தத்தைக் குறைச்சிக்கிட்டா எங்க வீட்டுல டி.வி சத்தமே போடாது.’’
பாகீக்கு தன் தவறு உறைத்தது.