யாருக்கு எப்போது வெறி பிடிக்கும்?என்னைப் போல எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் ஒரு ஆசாமி, எந்த நேரத்தில் யாருக்கு நண்பனாக இருப்பேன், எதிரியாக மாறுவேன் என்பதை கடவுளால்கூட நிச்சயிக்க முடியாது. பாராட்டுகளுக்கும் செருப்படிகளுக்கும் இடையே ஒரு நூலிழை வித்தியாசமே இருக்கிறது. அதிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் தலைக்கு எப்போது கத்தி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரு விவகாரத்தில் நம்மை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள்... இருவருமே அந்தக் கருத்தை சொல்கிற நபரைப் பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. தனது அபிப்ராயத்திற்கு ஏற்ப கண் மூடித்தனமான ஆதரவு அல்லது எதிர்ப்பு. இந்த இரண்டையும் தவிர அவர்களுக்கு எதைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லை. தங்கள் கருத்தில் தாங்களே நேர் எதிராக முரண்படுவதைப் பற்றியும் அவர்கள் யோசிப்பதில்லை.
சமீபத்தில் இந்த ஆபத்தான விளையாட்டில் நான் இரண்டு முறை சிக்கினேன். எவ்வளவு ஆபத்தான சூழலில் வேலை செய்கிறோம் என்பதை இரண்டும் எனக்கு நினைவூட்டின. அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட தினத்தில் இந்தியாவே மரண தண்டனையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தேசிய உணர்ச்சி பழிவாங்கும் உணர்ச்சியாக மாறி அனைவரும் திளைத்துக்கொண்டிருந்த நேரம் அது. எல்லா மரண தண்டனைகளையும் எதிர்ப்பவன் என்ற வகையில் அதை எதிர்த்து எழுதினேன். பல இஸ்லாமியர்கள் என்னை தீவிரமாக ஆதரித்து எழுதினார்கள். தேசிய உணர்ச்சி பெருக்கெடுத்த பல இந்துக்கள் என்னைக் கடுமையாக எதிர்த்து எழுதினார்கள். எனது பிறப்பு, வளர்ப்பு எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்தார்கள்.
இந்த நிலை அடுத்த சில தினங்களில் தலைகீழானது. சவுதி அரேபியாவில் ரிஸானா என்ற இலங்கைப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து எழுதினேன். அஜ்மல் கசாப் விஷயத்தில் மரண தண்டனை எதிர்ப்பில் என்மீது இணக்கம் பாராட்டியவர்கள், என்னைக் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். அஜ்மல் கசாப் விஷயத்தில் என்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள், எனக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினார்கள். மரண தண்டனையை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் இடையே இவர்களுடைய நிலைப்பாட்டின் ரகசியங்களைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக இல்லை.
அடுத்த பிரச்னை ‘விஸ்வரூபம்’. கமல்ஹாசன் படத்தை டி.டி.ஹெச்சில் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது கமலுக்காக தீவிரமாக தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வாதாடினேன். ‘சினிமா பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சியை தியேட்டர் அதிபர்கள் தங்கள் சுயநலத்திற்காக முடக்கக் கூடாது’ என்று குரல் கொடுத்தேன். (ஆமாம், அந்த டி.டி.ஹெச். பார்ட்னர்கள் இப்போது என்ன ஆனார்கள்?) கமல் ரசிகர்கள் என்மேல் பெரும் அன்பைப் பொழிந்தார்கள். அடுத்த கட்டமாக 24 அமைப்புகள் படத்திற்கு தடை கோரியபோது, ‘ஒரு படைப்பு வெளிவரும் முன்பு தடுத்து நிறுத்துவது மிக மோசமான போக்கு’ என்று எழுதினேன். பேசினேன். கமல் ரசிகர்களின் அன்பு கரை கடந்து பெருகியது.
ஆனால், கமல் ரசிகர்களின் இந்த கட்டுக்கடங்காத அன்பை நான்கே வரிகளை எழுதி இழந்தேன். ‘விஸ்வரூபம்’ பார்த்தேன். பிடிக்கவில்லை. இந்தப் படம் இந்த சர்ச்சைகளின் வழியாகவே இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது என்பதைக் குறிப்பிட்டு, ‘‘சென்னை கடற்கரையில் புயலில் கரை தட்டிய பிரதீபா காவேரி கப்பலை கூட்டம் கூட்டமாகப் போய் வேடிக்கை பார்த்தவர்களுக்கும், இப்போது ‘விஸ்வரூபம்’ படத்தைப் பார்க்க போய்க்கொண்டிருப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’’ என்று எழுதித் தொலைத்துவிட்டேன். அவ்வளவுதான்... இத்தனை நாளாக என்னை ஆராதித்த கமல் ரசிகர்கள் விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டார்கள். என் வாழ்நாளில் நான் அவ்வளவு வசவுகளைப் படித்ததில்லை. அத்தகைய மோசமான தொலைபேசி அழைப்புகளை சந்தித்ததில்லை. கமல்ஹாசனின் கலை உலக சாதனைகளுக்காக அவரைப் புகழ்ந்து இதற்குமுன் நான் எழுதிய கட்டுரைகளைப் பற்றியோ, அல்லது ‘ஒரு படம் நன்றாக இல்லை என்று சொல்வதற்கு இந்த நாட்டின் அரசியல் சாசனம் எனக்கு அடிப்படை உரிமையை வழங்கியிருக்கிறது’ என்பதைப் பற்றியோ எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை.
ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்னைப் படுத்திய பாடு அனைவருக்கும் தெரியும். கமல் ரசிகர்கள் அதையும் மிஞ்சிவிட்டார்கள். ஒருவர், ‘‘விஸ்பரூபம் பார்க்க உனக்கு ஓசி டிக்கெட் கொடுக்கலைங்கிற கடுப்பில் எழுதுகிறாயா?’’ என்றுகூட கேட்டார். ஒரு கட்டத்தில் மத தீவிரவாதம், சினிமா தீவிரவாதம் - இரண்டில் எது பயங்கரமானது என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு நாள் நேராக கமல் வீட்டிற்குப் போய், அவர் கையால் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு, அப்படியே அவர் படம் நன்றாக இல்லை என்பதையும் சொல்லிவிட்டு, ‘‘உங்கள் ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் சார்...’’ எனக் கேட்கலாமா என்கிற அளவிற்கு எனக்கு வெறுத்துப் போய்விட்டது.
மத அடிப்படையிலான வெறுப்பையும் வன்மத்தையுமாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அது நீண்டகாலமாக திட்ட மிட்டு வளர்க்கப்பட்ட ஒன்று. கண்மூடித்தனமான நம்பிக்கைகளின்பாற்பட்டது. ஆனால் ஒரு சினிமா ரசிகன் எப்படி ஒரு மதவாதியைவிட வன்மம் கொண்டவனாக மாறுகிறான்? சகிப்புத்தன்மையற்றவனாக நடந்துகொள்கிறான்? கட் அவுட்டிற்கு பால் ஊற்றும் ரசிகர்களை நான் வேடிக்கை மனோபாவம் கொண்டவர்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சினிமா, தமிழர்களின் மதமாக இருக்கிறது என்பதை நேரடியாக அனுபவிப்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சாதி வெறியர்கள், மதவெறியர்கள், அரசியல் வெறியர்கள், ஆணாதிக்க வெறியர்கள் இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தின், ஒரே மனோபாவத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
‘தமிழ்ச் சமூகம் ஒரு கலாசார பாஸிச சமூகமாக மாறிவிட்டது’ என்ற கமல்ஹாசனின் கருத்து தான் எனக்கும் இருக்கிறது. உண்மையில் நானும் இந்த சமூகத்தைவிட்டு வெளியேறவே விரும்புகிறேன். ஆனால் கமல்ஹாசன் சொன்னதைவிடவும் உண்மையான ஒரு அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன்.
கலையும் மதமும் நம்மை ஆன்மிகரீதியாக மலர்ச்சியடையச் செய்யவில்லை. மாறாக அவை நமது பண்பாட்டு வறட்சியின், ஆன்மிக வெறுமையின் அடையாளங்களாக மாறிவிட்டன. ‘ஒன்றின்மீதான அன்பு என்பது, அதற்கு மாறானவற்றின் மீதான வெறுப்பினால்தான் கட்டப்படுகிறது’ எனில், ஒரு சமூகத்தின் ஆன்மா அழிந்துகொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.
இன்னொரு ரயில் பயணம்சமீபத்தில் ஒரு சாதி ஒழிப்பு மாநாட்டிற்காக கோவை சென்றிருந்தேன். முதல்முறையாக அதிவேக ‘துரந்தோ’ ரயிலில் சென்றேன். ரயில் ஒன்றும் அப்படி விரைவாகச் சென்றதாகத் தெரியவில்லை. ஆனால் பயணத்தில் கிடைத்த உபசரிப்பு என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஏறியதும் ஒரு தண்ணீர் பாட்டில் கொடுக்கிறார்கள். (மினரல் வாட்டர்தான்) அப்புறம் நாமே காபி கலந்துகொள்வதற்கு தேவையான சர்க்கரை, பால் பவுடர், வெந்நீர் எல்லாம் தட்டில் வைத்து வருகிறது. கூடவே ஒரு பிஸ்கெட் பாக்கெட். அப்புறம் காலை உணவு. நான்-வெஜிடேரியனாக இருந்தால் ப்ரெட் ஆம்லெட். வெஜிடேரியனாக இருந்தால் பொங்கல், வடை. மதிய உணவிற்கு முன்னதாக தக்காளி சூப் ஸ்நாக்சுடன் சுடச்சுட வருகிறது. மதிய உணவு சிக்கன் குருமா, வெஜிடபிள் பிரிஞ்ச், தயிர் சாதம், மோர் என்று களை கட்டிவிடுகிறது. விமானப் பயணத்தில்கூட இவ்வளவு உபசரிப்பைக் கண்டதில்லை. முக்கியமான விஷயம், ரயில் சாப்பாட்டின் எந்த பயங்கரமும் இல்லாமல் சுவையாகவும் சுகாதாரமானதாகவும் இருந்தது.
கட்டணம் அப்படி ஒன்றும் அதிகமில்லை. இதே வசதிகளை மற்ற ரயில்களில் கொடுத்து இதே கட்டணத்தை வசூலித்தால் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு தருவார்கள். நமக்கு மார்க்கமுண்டு; மனம்தான் இல்லை.
ஒரு அழைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவர் அழுதுகொண்டே போன் செய்தார். தமிழ்நாட்டில் தங்களுக்காக நடக்கும் போராட்டங்கள் தங்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் கண்ணீர் வந்தது. ‘‘எங்களை அந்த அளவுக்கு எல்லாம் நம்பாதீங்க’’ என்று சொல்ல வந்ததை சொல்லாமலேயே போனை வைத்தேன்.
(இன்னும் நடக்கலாம்...)
எனக்குப் பிடித்த கவிதை : மரத்தினிலே துளிர்ப்பு இல்லைமரத்தினிலே துளிர்ப்பு இல்லை.
இலைகளெல்லாம்
வீழ்கின்றன அடுத்தடுத்து.
அரும்புகளுக்கு
சம்மதமில்லை பூக்க
காற்று அறைந்து விழுந்தவைகள்
வண்ணம் குலைந்து இறந்தன
குயில்கள் எங்கோ போயின
அதன் பாடல்களுக்கு
சிரிக்க பூக்களும்
கண்சிமிட்ட அரும்புகளும்
கைதட்ட இலைக்கரங்களும் இல்லை.
விடாய்த்து நிற்கும்
குச்சிகள் அவற்றின் பாடல்களை
குத்திக் கிழித்துவிடலாம்
பறவைகள் எதுவும்
வருவதில்லை
எந்தப் பறவை தன் கூட்டினை
அந்தரத்தில் கட்டும்
இந்த மரம் வேண்டாம்
போகட்டும்
தீயாகக் காற்றில்
இப்பிரபஞ்சத்தின்
சின்ன உயிர்
மௌனமாய்ச் சாகட்டும்
- அழகிய பெரியவன்
நான் படித்த புத்தகம் : எம்.எஃப்.உசேன்இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி - ஓவியர் புகழேந்தி
எம்.எஃப்.உசேன் என்ற மகத்தான ஓவியரின் கலை சார்ந்த மகத்துவங்கள், அவரைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வெறுப்பின் இருட்டினால் மறைக்கப்பட்டு விட்டது. இந்தியக் கடவுள்களையும் இந்திய மாதாவையும் ஆபாசமாக வரைந்தார் என்றும், நாட்டை விட்டு துரத்தப்பட்டு எங்கோ அகதியாக மடிந்தார் என்பதும்தான் அவரைப்பற்றி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொதுக் கருத்து. அவர்மேல் நிகழ்த்தப்பட்ட வெற்றி, இந்தியாவின் கலைசார்ந்த மனசாட்சியின் மீது மதவாதம் அடைந்த ஒரு வெற்றி எனலாம். இந்த அரசியல் பிம்பத்தைத் தாண்டி உசேனின் வாழ்வையும் கலையையும் மிக ஆழமாக நெருங்கிச் சென்று தொடுகிறது இந்த நூல். இந்தியாவின் நவீன ஓவியக் கலைக்கு உசேன் ஆற்றிய மகத்தான பங்கினை கோட்பாட்டுரீதியாகவும் அழகியல்ரீதியாகவும் நிறுவுகிறார் புகழேந்தி.
(விலை: ரூ.175/-, வெளியீடு: தூரிகை, எஸ்பி-63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென் னை-600078. கைபேசி: 9444177112.)
மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம் : இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கைத்
தமிழருக்கு இந்தியாவின் உதவிகள் நின்றுவிடும்
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
ராஜபக்ஷே கூட இவ்வளவு லாஜிக்கா யோசிக்க மாட்டார்...