ஆச்சரிய அஜித்!





ஷீரடி சாயிபாபாவின் புனித சரிதம் விரைவில் குங்குமத்தில் இடம்பெறப் போவதை அறிந்ததுமே மனம் குதூகலிக்கத் தொடங்கிவிட்டது. தொடரை வணங்கி வரவேற்று படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்!

என்.சண்முகப்பிரியா, சிதம்பரம்-1;
வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; ரேவதிப்ரியன், ஈரோடு.

அவமானங்கள் பலவற்றைத் தாங்கிய மலர்வதியின் மனவலிதான் ‘தூப்புக்காரி’ நாவலாக உருவாகி சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறது. இதில் வியப்புக் குறிக்கோ ஆச்சரியக் குறிக்கோ ஏது இடம்?

இராம.கண்ணன், திருநெல்வேலி; ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

முதல் ‘தமிழ்ப் படம்’ இயக்கிய இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ‘ரெண்டாவது படம்’ செம நக்கலா இருக்கும் போலிருக்கே!
ஏ.விஷால், புதுச்சேரி.

அடேயப்பா... மலையாளப்பட இயக்குநர் அனில் ஏகத்துக்கும் சனாகானைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே... அப்படி என்ன நடிப்பில் அவர் வித்யா பாலனையே தூக்கிச் சாப்பிட்டிருப்பார்! பார்க்கலாம்... பார்க்கலாம்!
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

50 வயதைத் தாண்டிய எத்தனையோ ஹீரோக்கள் கல்லூரி மாணவன் வேடங்களில் வெளுத்து வாங்கிய வரலாறு நம் தமிழ் சினிமாவுக்கு உண்டு. ஆனால், இந்த 41 வயதிற்குள் ‘அசல்’ நாயகன் அஜித், அதிரடியாய் இப்படியொரு முடிவு எடுத்திருப்பது ஆச்சரியத்துக்குரியது.

ஏ.எஸ்.நடராஜ், சிதம்பரம்; சி.பா.சந்தானகோபாலகிருஷ்ணன், மஞ்சக்குப்பம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

அட்ரா சக்கை... அட்ரா சக்கை... இனி கவுண்டமணியைப் பார்க்கவே முடியாதோ என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த அவரது லட்சோப லட்சம் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்துவிட்டீர்கள். ‘டாக்டர் பென்னி’யாக அவரைப் பார்க்க நாங்கள் டோக்கன் வாங்கிக் காத்திருக்கிறோம்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

‘அந்தர மனிதர்கள்’ கட்டுரை அற்புதம். ‘பிற மனிதர்கள் மீது காரணமற்ற பணிவும் மரியாதையும் சாக்கடையை சுத்தம் செய்யும் சாமான்யனின் உடல்மொழியில் ஊறிக் கிடக்கிறது’ என்ற அறிமுகமே அவர்கள் வாழ்வைக் கண்முன் நிறுத்திவிட்டது!

‘மண்வாசனை’ சாரதாமணி; சுந்தராபுரம்.

‘போராடாமல் இங்கே எதுவும் கிடைக்காது’ என்ற வாசகம் போராளியான ஜானுவின் மனச் சாட்சியின் குரலாகவே எதிரொலித்தது!
எம்.ரசியா பேகம், சென்னை-91.

சென்னைக்கு வரப்போகும் வறட்சியை முன்கூட்டியே எடுத்துரைத்த சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் ஜனகராஜனுக்கு நன்றி! செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் வறண்டிருப்பதைப் பார்த்து நம் கண்களில்தான் நீர் பெருக்கெடுக்கிறது!
உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.