வீடு பற்றிப் குறிப்புகள்
எனக்கொரு வீடு இருந்தது... அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென ணீ எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.
என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.
வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு என்னை அணைத்துக் கொள்ளும்..
எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகை தெரியும் மல்லிகை எனக்கெனப் பூத்திராவிட்டாலும் தினமும் பூக்கும் மல்லிகைச் செடியொன்று அந்த வீட்டில் இருந்தது.
அந்த வீட்டில் அப்பா எனக்கு முத்தமிட்டிருக்கிறார் என் கன்னத்தில் கன்னம் வைத்து அம்மா கொஞ்சியிருக்கிறாள். நான் எடுத்த முதல் மதிப்பெண்ணின் அங்கீகாரம், சந்தோஷங்களெல்லாம் அந்த வீட்டில்தான் புதைந்திருக்கின்றன.
என் தோழி அருகிலமர்ந்து பேசிய மாலை நேரம் அவளென் மடியில் சாய்ந்து எனைப் பார்த்த பார்வையின் தருண சுகம் அவள் புரட்டிக் காட்டிய புத்தகத்தின் வாசத்தில் கலந்திருந்த அந்நாட்களின் ரசனைகள் என எல்லாமே அந்த வீட்டுக்குள் காலத்தால் மூடப்பட்டுக் கிடக்கிறது.
நான் கண்ட முதல் கனவு ஒவ்வொரு முடிச்சாக கழன்று விழுந்த எனக்கும் அந்த வீட்டிற்கான நெருக்கம் இனி கிடைக்குமா என ஏங்கி நழுவவிட்ட எல்லாமே அந்த வீட்டிலிருக்கிறது.
நான் சத்தமிட்டு சிரித்த சிரிப்புகளையும் அந்த வீடு விட்டு வருகையில் அழுத கண்ணீரையும் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
அந்த வீடு ஒரு ஏக்கத்தின் பெருமூச்சு எனக்கென அப்பா அம்மா அண்ணன் அவர்களுக்கென நான் என உணர்வுகளின் பெருமூச்சில்தான் உயிர்கொண்டிருக்கிறது அந்த வீடு.
அந் நினைவுகளையெல்லாம் அங்கேயே புதைத்துவிடுகிறேன். அது கண்ணீராய் அடைபட்டு என்றேனும் கத்தியழுதுவிடும் ஒரு நாளில் வெளிவரக்கூடும்; உள்ளிருக்கும் மரணம் போல!
|