வேலைக்குப் போகாதீர்கள்!





The only place 'success' comes before 'work' is in the dictionary. Vince Lombardi

 
இதோ... முதல் நாள் நீங்கள் வேலை பார்க்கப் போகும் இடத்தினுள் நுழைகிறீர்கள். இதுவரை நீங்கள் அனுபவித்தறிந்த, பழகியிருந்த, சூழல்களிலிருந்து முற்றிலும் புதிய சூழலைச் சந்திக்கப் போகிறீர்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள்... இங்கே உங்களுக்காகக் காத்திருக்கின்றன. அது மட்டுமல்ல... இந்த வேலைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று யாரெல்லாம் விரும்பினார்களோ, நீங்கள் இந்த வேலையைச் செய்வதன் மூலம் யாரையெல்லாம் சந்தோஷப்படுத்தப் போகிறீர்களோ, நீங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு யாரெல்லாம் காரணமோ... அவர்கள் யாருமே உங்களுடன் வரப் போவதில்லை. தனியாக நீங்கள் மட்டும்தான் புதிய சவால்களையும், சம்பவங்களையும் எதிர்கொள்ளப் போகிறீர்கள்.

எனவே ஒருவித பயம், படபடப்பு, த்ரில், ‘எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே’ என்கிற தவிப்பு, கொஞ்சம் கனவுகள், ஆசைகள், தைரியம்... எல்லாம் உங்களிடம் இருக்கும். கொஞ்சம் சந்தோஷமும் கொஞ்சம் வருத்தமும் கலந்த கலவையாக நீங்கள் இருப்பீர்கள். இந்த மனநிலையை முதன்முதலாக பள்ளிக்கூடம் செல்லும் மழலையின் மனநிலையுடன் ஒப்பிடலாம். முதன்முதலாக சோகம். இந்த சமூகத்தை அது தன்னந்தனியே எதிர்கொள்ளப் போகிறது. இந்த மனநிலை, திருமணம் முடிந்து முதன்முதலாக கணவன் வீட்டிற்குச் செல்லும் இளம்பெண்ணின் மனநிலையும் கூட. கனவு, ஆசை, மிரட்சி... இவற்றுடன், fear of   taking responsibility!

இந்தப் புதிய இடம் தவிர்க்கவே முடியாதது என்பதையும், இதனால் தனக்கு நன்மைகள் விளையும் என்பதையும் புரிந்துகொள்கிற வரை இந்த மென்சோகம் தொடரவே செய்யும்.

உங்களுக்கு இந்த மென்சோகம் ஏற்படவில்லை என்றால் சந்தோஷமே. ‘‘நாங்கள் எல்லா சூழ்நிலைகளையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று ஊதி விடுகிறவர்களாக்கும். எல்லா தினங்களையும் போல்தான் இந்த முதல் தினங்களும் எங்களுக்கு’’ என்பவர்கள் ஞானிகள்.

எல்லோரும் ஞானிகள் இல்லை. ஒரே நிறுவனத்தின் இரண்டு மேஜை தள்ளியிருக்கிற இன்னொரு பிரிவிற்கு மாற்றப்பட்டால் கூட, ‘வாழ்க்கையே போச்சு’ என்று அலறுபவர்கள் இருக்கிறார்கள். முதன்முதலாக வேலைக்குச் செல்வதில் உள்ள இந்த பயமும் த்ரில்லும் தவிர்க்கவே முடியாதவை... பின்னால் நீங்கள் நினைத்து ரசிக்கக் கூடியவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.



சரி, ஏற்கனவே வேறு இடத்தில் வேலை பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. என்றாலும் கூட, புதிய நிறுவனத்தின் முதல் தினங்களின் ‘த்ரில்’ உங்களுக்கும் இருக்குமா..? என்றால், இருக்கும். என்ன, கொஞ்சம் குறைவாக இருக்கும். கூடவே, கடந்த கால அனுபவத்தின் மூலம், அதிலிருந்து விரைவாக மீண்டு வருவீர்கள்!

‘‘அடடா, வாங்க... இந்த நிறுவனத்தில் வேலை செய்ய நீங்கள் வந்திருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம். இது ஒரு தரமான, முன்னேற வாய்ப்புள்ள நிறுவனம். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இங்கே காத்திருக்கிறது. இங்கே உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்...’’

- முதல் நாள் புதிய நிறுவனத்தில் நீங்கள் வேலைக்குப் போகிறபோது உங்களை அங்கே ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற வார்த்தைகளால் வரவேற்றால், அது அதிர்ஷ்டம். 95 சதவீதம் பேருக்கு  இப்படி அதிர்ஷ்ட வரவேற்பு வாய்ப்பதில்லை.

வேறுவிதமான வரவேற்புகள் அளிக்கப்பட்டாலும் நீங்கள் எதிர்கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் புதியவர்களை, சிலர் சீனியாரிட்டி பார்வை பார்த்து அலட்சியமுடன் கடந்து செல்வார்கள். வேறு சிலர், ‘‘ஏம்ப்பா, உங்களுக்கு வேற இடமே இல்லையா? இங்கதான் வரணுமா? நாங்கதான் வேறு வழியில்லாம இங்க குப்பை கொட்டிட்டு இருக்கறோம். சரி, வந்ததுதான் வந்தீங்க... எவ்வளவு சீக்கிரம் இடத்தை காலி செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இங்கருந்து ஓடிப்போயிருங்க... இந்த ‘ஜாப்’ பத்தி முதல்லயே எங்ககிட்ட விவரம் கேட்டிருக்கலாமே...’’ என்பார்கள்.

உடனே இன்னொருவர், ‘‘ஏம்பா ஆரம்பத்துலயே பயமுறுத்தற.... வந்திருக்கக்கூடாது. வந்துட்டார். முதல் நாள்லயே எல்லாத்தையும் சொல்லணுமா?’’ என்று பயத்தை இன்னும் அதிகமாக்குவார்.

ஏற்கனவே புதிய இடத்தினால் ஏற்படும் மென்சோகத்தில் உழன்று கொண்டிருக்கும் நீங்கள், இது போன்ற வரவேற்புகளால் ‘வசமாக வந்து மாட்டிக் கொண்டோமோ?’ என்று நினைக்கத் துவங்குவீர்கள். நீங்கள் பலவீனர்களாக இருந்தால், மேலும் தளர்ந்து விடுவீர்கள். அப்புறம் அதிலிருந்து மீள்வது சிரமமாகிவிடும்.

சட்டத்திற்குப் புறம்பான எவ்வித பணிகளும் நடைபெறாத ஒரு நிறுவனத்தில் பணியாற்ற நீங்கள் வந்திருக்கிறீர்கள். பிறகு உங்களை, ‘‘இங்க வந்து சிக்கிக்கிட்டீங்களே, பாஸ்..!’’ என்ற ரீதியில் வரவேற்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... மனித மனம் வெகு நுட்பமானது. ‘ஏற்கனவே வேலை பார்க்கும் தங்களை ஒரு புதியவர் வந்து மிஞ்சி விட்டால் என்ன செய்வது’ என்பதிலிருந்து, ‘நமக்கு இவரால் என்ன பிரச்னை ஏற்படுமோ, துவக்கத்திலேயே இப்படி அரட்டி வைத்தால்தான் இவரை வேலை வாங்க முடியும்’ என்பது வரை பல்வேறு விஷயங்கள் இந்த வரவேற்பில் உள்ளன. இப்படி எல்லாம் பயமுறுத்தி வைத்தால்தானே, ‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் பணிபுரிகிறாரே’ என்று அவரைப் பெரிய ஆளாக நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்!

இப்படி அலசிக் கொண்டே போகலாம்... என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் வேலை பார்க்கும் இடத்தின் மீது எவ்வித விசுவாசமும், மதிப்பும் கிடையாது என்பதே அவர்களின் எதிர்மறையான வரவேற்பிற்குப் பிரதான காரணம் என்பதை இங்கே சொல்லி வைக்கிறேன்.

உங்களைப் பொறுத்தவரை, புதிய இடத்தில் முதல் நாட்களில் ஆதரவுக் குரல்களையும் நம்ப வேண்டாம்; எதிர்ப்புக் குரல்களாலும் கலங்கி விட வேண்டாம். புன்னகையுடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ளுங்கள். உங்கள் மனநிலையை சமநிலையில் வைத்திருங்கள். ‘‘இங்கே வந்து மாட்டிக்கொண்டீர்கள்!’’ என்று எச்சரிக்கும் அளவிற்கு ஒரு பணி மோசமாக இருக்குமானால், அவர்கள் எதற்கு அங்கே இருக்கிறார்கள்? அப்படியே பிரச்னைகள் இருந்தாலும், அவர்களால் சமாளிக்க முடியும் என்பதால்தான் அந்தப் பணியில் தொடர்கிறார்கள். அவர்களால் முடியும் என்றால், உங்களால் ஏன் முடியாது?

இந்த ரீதியில் யோசியுங்கள். இது தொடர்பாக நீங்கள் உருப்படியாக ஏதாவது செய்ய விரும்பினால், நீங்கள் இது போல் ஒரு புதியவரை வரவேற்கிறபோது இதயபூர்வமான வரவேற்பை அளியுங்கள்.
(வேலை வரும்...)